• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஜுலைத் திங்கள் நான்காம் நாள்
  2011-07-05 16:30:15  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுலைத் திங்கள் 4 ஆம் நாள், எங்களின் சீனப் பயணத்தின் 15-வது நாளாகும். இன்று காலை விடுதியிலிருந்து புறப்பட்டு, நண்பர் கலைமணியுடன் இணைந்து சுமார் 2700 ஆண்டுக்கால வரலாறும், சிங் வம்ச காலத்தில் சிறந்த பொருளாதார மையமாகவும் திகழ்ந்த பிங்யாவ் நகரின் பண்டைய இடங்கள் சிலவற்றை பார்க்கத் துவங்கினோம். 1987 ஆம் ஆண்டு, சீன நடுவண் அரசு, பிங்யாவ் நகரை வரலாறு மற்றும் பண்பாட்டு நகரமாக அறிவித்தது. 1997 ஆம் ஆண்டு, ஐ.நா.வின் உலக மரபுச் செல்வப் பட்டியலில் இந்நகரம் சேர்க்கப்பட்டது. இந்நகரில், எங்கு நோக்கினும் பழைய வீடுகள். மிங் வம்ச காலத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 4000 வீடுகள் இன்றளவும் நல்ல முறையில் உள்ளன. அவை யாவும், பழைமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படுகிறதன. பழைய வீடுகள் புணரமைக்கப்பட்டாலோ அல்லது எங்கேனும் புதிய வீட்டை கட்டினாலோ இங்குள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, பழைய வடிவில்தான் கட்டிடங்களை உருவாக்க வேண்டும். மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கருதி, வாடகைக் கார்களுக்கு இங்கே அனுமதி இல்லை. மின்சார வண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பண்டைக்கால நகரை சுற்றிப் பார்த்த அனுபவம், பெரும் மகிழ்ச்சியை அளித்தது. நகரின் முக்கிய வீதிகளில் அமைந்திருந்த நகரக் கடவுள் கோயில், பழைய நீதிமன்றம், பொருளாதார முகமை, ஒப்பனை நிலையம், பொருளாதார முகமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தனியார் பாதுகாப்பு மையம், அருங்காட்சியகம் போன்ற இடங்களை கண்டுகளித்தோம். ஒப்பனை நிலையம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். சீனாவில் காதல் மரம் என அழைக்கப்படும் ஒரு வகை மரம் உண்டு. எனவே, பெண்கள் பயன்படுத்தப்படும் மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வகை மரப் பொருட்களும் காதல் மரத்தாலேயே உருவாக்கப்பட்டு, அறையில் வைக்கப்பட்டிருந்தன. சிங் வம்ச காலத்திலேயே, ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல தனியார் பாதுகாப்பு மையம் பயன்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படையின் தலைவர், மிகுந்த உடல் வலிமை கொண்டவராகவும், சண்டைக் கலைகளில் வல்லவராகவும் இருந்திருக்கிறார். சிங் வம்சத்தின் பிற்பாதியில், முக்கிய பொருளுதார மையமாக இருந்த சிங்தாவில் 20 பொருளதார நிறுவனங்கள் செயல்பட்டிருக்கின்றன. பின்னர், நகரப் பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்ட, பண்டைக்கால மாபெரும் கோட்டைச் சுவர் மீது ஏறினோம். சீனப் பெருஞ்சுவரை விட உயரமானதாகவும், அதிக அகலம் கொண்டதாகவும் இக்கோட்டைச் சுவர் அமைந்திருந்தது. இச்சுவர், பேரரசர் ஹொங்வு என்பவரால் 1370 ஆம் ஆண்டு கட்டப்படத் துவங்கியது. இக்கோட்டைச் சுவரிலிருந்து நகருக்குள் நுழைய மொத்தம் ஆறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 6000 மீட்டர் நீளமுள்ள இச்சுவரின் உயரம் 12 மீட்டர், அகலம் 4 மீட்டராகும். மேலும், கோட்டைச் சுவர் நெடுகிலும் 72 கண்காணிப்புக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பின்னர், பேருந்து மூலம் ஒரு மணி நேரம் பயணம் செய்து, ஷி மாவட்டம் சென்று ஷியாவ் குடும்பத்தினருக்கு சொந்தமான மிகப் பெரிய வீட்டைக் கண்டு மகிழ்ந்தோம். கி.பி.1755 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வீட்டில் 313 அறைகள் உள்ளன. 10,642 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் அரண்மனையைப் போல இவ்வீடு பரந்த அளவில் கட்டப்பட்டிருந்தது. தனியாருக்கு சொந்தமான வீடுகளில், ஒரு சிறந்த முன்மாதிரியாக இவ்வீடு கருதப்படுகின்றது. புகழ்பெற்ற இயக்குநர் Hu Mei இயக்கப்பட்ட புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான Qiao's Grand Courtyard, இங்குதான் படமாக்கப்பட்டது. மேலும், பெரிய அளவில் இங்கு பூங்காவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் முக்கியப் பகுதிகளை கண்டுகளித்துவிட்டு, சான்ஷி மாநிலத்தின் தலைநகரான தாய்யுவன் திரும்பினோம். பின்னர், அங்கிருந்து பெய்ஜிங் வந்தடைந்தோம். நாளை மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040