

ஜுலைத் திங்கள் 2 ஆம் நாள் எங்களின் சீனப் பயணத்தின் 13-வது நாளாகும். இன்று காலையில் சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.சுந்தரனின் அழைப்பிற்கிணங்க, பெய்ஜிங் புறநகர் பகுதியில் உள்ள அவரின் கிராம வீட்டிற்கு புறப்பட்டோம். அவருடைய மகன் காரையோட்ட, சுமார் 60 கி.மீ. பயணம் செய்து வீட்டை அடைந்தோம். கீழை சூரியன் நகரன் என்ற பொருளுடைய Oriental Sun City என அழைக்கப்படும் இக்குடியிருப்புப் பகுதியின் சுற்றுச் சூழல் நிலைமை மிகவும் நன்றாக இருந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என புல்வெளிகளும், மரங்களும், பூக்களும் நிறைந்திருந்தன. எங்கும் பறவைகளின் குரல்கள் கேட்டன. முதியோர் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக நான்காண்டுகளுக்கு முன் இந்நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் வசதிக்கேற்ப விளையாட்டுத் திடல்களுடன், குடியிருப்பு மருத்துவமனையும் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் பாணியிலான பழைய பண்பாட்டு வடிவிலும் இங்கே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் விலை சுமார் ஒரு கோடி யுவான் என அறிந்தபோது, இக்குடியிருப்புப் பகுதியின் தரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. சுந்தரனின் வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், அவருடன் புறப்பட்டு, அவருக்கு சொந்தமான வாடகை நிலத்தை சென்றடைந்தோம். அவருடைய நிலத்தில், மக்காச்சோளம், வெள்ளரிக்காய் போன்ற பயிர்கள் விளைந்திருந்தன. சுந்தரனின் மகன், வெள்ளரிக்காயை அறுவடை செய்தார்.
அங்கேயிருந்த பிற விவசாயப் பகுதிகளில், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம், பூசணிக்காய், அவரை, பரங்கிக்காய், கீரை, மற்றும் சுரைக்காய் போன்ற பயிர்களைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
பின், சுந்தரனுடன் அந்நகரில் உள்ள உணவு விடுதியொன்றில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் அவருடைய வீட்டில் தங்கிவிட்டு, கிளிட்டஸ் வீடு திரும்பினோம்.