
ஜுலைத் திங்கள் 5 ஆம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 16வது நாளாகும். இன்று காலையில் நண்பர் கலைமணியுடன் புறப்பட்டு, வெகு காலமாக பார்க்க வேண்டும் என விரும்பிய பீகிங் குகை மனிதன் கண்டறியப்பட்ட ஷோகௌடியன் என்னும் இடத்திற்கு சென்றோம். இவ்விடம், பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்குப் பகுதியில் 50 கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ளது. யுங்திங் ஆற்றுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் இம்மலைப்பகுதியில்தான் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான சான்று இங்கேதான் கிடைத்துள்ளது. மேலை நாட்டு ஆய்வாளர் டேவிட்சன் பிளாக் என்பவர் 1929 ஆம் ஆண்டு முதல் இங்கே ஆய்வில் ஈடுபட்டார். 1934 ஆம் ஆண்டு அவர் இறந்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் வெய்டென்ரிச் என்பவர் ஆய்வுகளை தொடர்ந்தார். அவர்களுக்கு உதவியாக பல்வேறு சீன ஆய்வாளர்கள் பீகிங் குகை மனிதனைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் கண்டறியப்பட்ட மனிதன் வாழ்ந்த ஆண்டு 5 இலட்சம் முதல் 6 இலட்சம் ஆண்டுக்குள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இப்பகுதியை ஆய்வு செய்த பல்வேறு சீன ஆய்வாளர்களின் கல்லறைகளும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. 1955 ஆம் ஆண்டு சீனாவின் உயர் தலைவர்கள் Zhu De, Pei Wenzhong, Liu Shaoqi, Dong Biwu, மற்றும் Liu Boqu இங்கே வந்து பார்வையிட்டுள்ளனர். ஏராளமான மண்டையோடுகளுடன் பல்வேறு விலங்குகளின் எலும்புகள், பற்கள் போன்ற உடற்பாகங்களும், பல்வேறு விலங்குகள், மீன்கள் ஆகியன கல்லாய் மாறிய பகுதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கே மலையின் மீது காணப்படும் பீகிங் மனிதன் வாழ்ந்த சில குகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். இரு அடுக்குகளாக காணப்படும் மலைப்பகுதியின் இரண்டாவது அடுக்கில், பண்டைக்கால மனிதன் பயன்படுத்திய சாம்பல் அடுக்கு காணப்படுகிறது.
அங்கிருந்து, பெய்ஜிங்கின் மேற்குப் பகுதியில் ஜப்பானிய ஆக்கிரப்பை எதிர்த்து, சீனா வெற்றி பெற்றதன் நினைவாக போர் நடைபெற்ற இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டோம். 21000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தின் பெயரை முன்னாள் அரசுத் தலைவர் டெங் சியோ பிங் அவர்கள் எழுதியுள்ளார். அவ்விடத்தில், போர்க்காட்சிகளை சித்தரிக்கும் ஏராளமான நிழற்படங்களுடன், போரின்போது பயன்படுத்தப்பட்ட பல்வகை ஆயுதங்கள், போர் வீரர்கள் பயன்படுத்திய ஆடைகள், தோல்பெட்டிகள் ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சீன மக்களை, ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் கொன்று குவித்த காட்சிகள், எங்களின் நெஞ்சைப் பிசைவதாக இருந்தது.
பின்னர், பாதாஷீ என்னும் இடத்திற்குச் சென்றோம். இப்பகுதியில் உள்ள 8 மலைக்குன்றுகளில், பண்டைக்காலக் கட்டிடங்கள் சில காணப்படுகின்றன. இங்கே ஏறக்குறைய நான்கு இலட்சம் மரங்கள் உள்ளதாகவும், பண்டைக் காலத்தைச் சேர்ந்த 590 மரங்கள் இருப்பதாகவும் அறிந்து கொண்டோம். ஒரு குன்றின் மீது மட்டும் ஏறியபோது, மலையுச்சியில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை, புத்த மத நம்பிக்கையாளர்கள் பலர் அவர்களின் மத நம்பிக்கையின்படி வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.
அங்கிருந்து, சீன வானொலி நிலையத்திற்கு திரும்பிய நாங்கள், வாணி அம்மையாருடன் புறப்பட்டோம். வாணி எங்களுக்கு இரவு உணவு வழங்கினார். பல்வேறு உணவு வகைகளை வயிராற உண்டு மகிழ்ந்துவிட்டு பின்னர் திரும்பினோம்.