ஜுலைத் திங்கள் 7 ஆம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 18வது நாளாகும். இன்று காலையில் தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் சுந்தரன், கலைமணி தமிழ்ப்பிரிவில் விரைவில் பணியாற்ற இருக்கும் நிலாநி, இலக்கியா, ஓவியா மற்றும் முகிலன் ஆகியோருடன் இணைந்து, கோடைக்கால மாளிகைக்கு சென்றோம். கோடைக்காலத்தின்போது, பேரரசிகள் வந்து ஓய்வெடுக்கும் இடமாக அக்காலத்தில் கோடைக்கால மாளிகை திகழ்ந்திருக்கிறது. அழகான ஏரியின் நடுவே 17 கண்மாய்களைக் கொண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. மலையுச்சியின் மீது புத்தர் கோயிலொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே, இசைக்குழுவினர் பீகிங் இசை நாடகத்தை இசைத்துக் கொண்டிருந்தனர். அவ்விசை பின்னணியில் ஒலிக்க, ஒரு குழுவாக நாங்கள் மேற்கொண்ட இன்றைய பயணம் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. பின்னர், சுந்தரன், கலைமணி, மாணவிகளுடன் தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி அவர்களின் புதிய வீட்டிற்கு சென்றோம். புதிய வீட்டில், நவீனமயமான பொருட்கள் அனைத்தும் இருந்தன. கலையரசி அவர்களின் பெரிய வீடு முழுவதும் நன்றாக அழகுபடுத்தப்பட்டிருந்தது.
தம் கையால் சமைத்த பல்வேறு உணவு வகைகளை அன்புடன் எங்களுக்கு கலையரசி பரிமாறினார். கலைமகள், தம் கணவருடன் இவ்விருந்தில் கலந்து கொண்டார். சிறப்பு நிபுணர்களும் விருந்தில் கலந்து சிறப்பித்தனர். அதன் பின்னர், அங்கே நீண்ட நேரம் தங்கி,அனைவருடன் கலந்துரையாடிவிட்டு, சீன வானொலி நிலையம் சென்றோம். அங்கே, நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பேசிவிட்டு, அனைவரிடமிருந்தும் பிரியா விடை பெற்றுக் கொண்டு திரும்பினோம். இன்றிரவு எங்களுக்கு இரண்டாவது முறையாக தமிழன்பன் தம்பதியினர் இரவு விருந்து வழங்கினர். எங்களுடன் கிளிட்டஸ் மற்றும் கலைமணியும் கலந்து கொண்டனர். அவர்கள் அளித்த பல்வேறு இந்திய உணவு வகைகளை ருசி பார்த்துவிட்டு கிளிட்டஸ் வீடு திரும்பினோம்.