• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல் நாள்
  2011-08-04 18:13:15  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

திபெத், உலகிலுள்ள அனைவரையும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள தூண்டுகிற சீனாவின் மாநிலம். ஒவ்வொரு சீனரும், உலக நாடுகளிலுள்ள பலரும் இங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு எழில்மிகு காட்சிகளை கண்டு, அனுபவிக்க விரும்புகின்றனர். தன்னாட்சி பிரதேசமாக சிறந்த வளர்ச்சியை கண்டு வருகின்ற திபெத்தை பற்றி பல்வேறு செய்திகள், கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். வளர்ச்சியை நிலைநிறுத்தி, தொடர்ந்து முன்னேற்ற திபெத் எடுத்துவரும் முயற்சிகளை செய்திகளாக அறிவித்திருக்கிறேன். அதனை நேரடியாக பார்த்து, அங்குள்ள மக்களோடு கலந்துரையாட பணிப்பயணம் மேற்கொள்வது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

பண்ணை அடிமை நிலையிலிருந்து அமைதியாக விடுதலை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்து வரும் திபெத் தன்னாட்சி பிரதேசததில் பணிப்பயணம் மேற்கொள்வது பெரிய கனவையும், எதிர்பார்ப்பையும் என்னுள் தோற்றுவித்தை மறுக்க முடியாது.

இமையமலையின் இந்திய பகுதியையும், அதற்கு மறுபுறத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று சிறிய வயதில் எண்ணியதுண்டு. அதில் ஒரு பகுதி இந்த பணிப்பயணத்தில் நிறைவேறும் என்பதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

அமைதி விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவு விழாவை அதாவது விடுதலையின் வைரவிழாவை, சீன நடுவண் அரசு பிரதிக்குழுவுடன் இணைந்து கடந்த திங்களில் தான் திபெத் கொண்டாடியது. எனவே இந்நாட்களில் கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தில் நிகழ்ந்துள்ள வளர்ச்சிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஊடகங்களின் முக்கிய இடங்களை நிரப்புகின்றன. இந்த கொண்டாட்ட சூழ்நிலை நிலவும் இவ்வேளையில் திபெத்தில் பணிப்பயணம் மேற்கொள்வது எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

ஜுலை திங்கள் பத்தாம் நாள் திபெத்தில் பணிப்பயணம் என்ற திட்டம் ஒத்தி போடப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் முதல் நாள் திபெத்தில் பயணம் என்ற போது, என்றுமே மறக்க முடியாத நாளில் அல்லவா இப்பயணம் அமைய போகிறது என்று எண்ணினேன். சீன வானொலி தமிழ்ப் பிரிவு தொடங்கிய 49 வது ஆண்டு தொடக்க நாளில், சீன திபெத்தின் புனித நகரும், தலைநகருமான லாசாவில் பயணம் தொடங்குவது பெருமை தானே!

புறப்பாடு

ஆகஸ்ட் முதல் நாள் காலை ஆறு பதினைந்து மணிக்கு சீன வானொலி நிலையத்திலிருந்து பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டோம். காலையில் மேகமூட்டம் அதிகமாக இருந்தது. நூறு மீட்டர் தொலைவிலுள்ள பிற வாகனங்களை பார்ப்பது கடினமாக இருந்தது. ஏழு மணியளவில் விமான நிலையத்தை அடைந்தோம். எட்டு முப்பது மணிக்கு விமானத்தில் ஏறினோம். மொத்தம் இருநூற்று தொன்நூற்று எட்டு இருக்கைகளுடைய அந்த விமானம் முழுவதும் பயணிகளால் நிறைந்தது. சரியாக ஒன்பது ஐம்பத்தி ஐந்து மணிக்கு விமானம் ஓடுதளத்தில் ஓடி மேலெழுந்து பறந்தது.

சிச்சுவானின் செந்துவில்

பெய்ஜிங்கிலிருந்து ஆயிரத்து அறுநூற்று எண்பத்து ஐந்து கிலோமீட்டர் தூரமுடைய சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் சென்துவிலுள்ள ஷூவாங்லியு பன்னாட்டு விமான நிலையத்திற்கு நண்பகல் பன்னிரண்டு இருபதுக்கு வந்தடைந்தோம். விமானத்திலிருந்து இறங்கி சென்து விமான நிலையத்தில் காத்திருந்தோம். அந்நேரத்தில், அங்கு சுங்க வரியற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை சுற்றி வந்தோம். புத்தகங்கள், ஆடைகள், தோல் பைகள், இனிப்புகள், செல்லிடபேசி என்ற பொதுவான கடைகளுக்கு அப்பாற்பட்டு, சீனப் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் பார்க்க முடிந்தது.

புனித நகர் லாசாவில்

பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு மீண்டும் விமானத்தில் ஏறினோம். சுமார் இரண்டு முப்பது மணிக்கு சென்துவிலிருந்து கிளம்பி, ஆயிரத்து முந்நூறு கிலோமீட்டர் தொலைவுடைய சீன திபெத்தின் புனித நகரும், தலைநகருமான லாசாவை மாலை நான்கு இருபது மணிக்கு வந்தடைந்தோம். திபெத் எல்லையை அடைந்தவுடன் மலைகளுக்கிடையில் தழுவிச் சென்று கதை பேசும் மேகங்களை கண்டோம். மலையும், மேகங்களும் சங்கமித்திருக்கும் அழகுக் காட்சிகளை விமானத்தில் இருந்தபடியே நிழற்படங்களில் பதிவுசெய்து கொண்டோம்.

தங்குவிடுதிக்கு பயணம்

விமான நிலையத்திலிருந்து எங்கள் பொதிகளை பெற்று வெளியேறி தங்குவிடுதிக்கு பயணமானோம். லாசா பாலத்தில் யாலூசாம்பூ ஆற்றை கடந்து பயணமானோம். யாலுசாம்பூ ஆறு தான் இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியென அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய நாற்பத்து ஐந்து நிமிடங்கள் மேற்கொண்ட அப்பயணத்தின்போது ஐந்து குகை சாலைகளை தாண்டி சென்றோம். அதில் கலஷான் குகை சாலை நீளமாக இருந்தது. ஒரு வாகனம் போகவும், இன்னொன்று வரவுமாக சாலை அமைக்கப் பட்டிருந்தது. வழியில் பசுமையான காட்சிகள் கண்களை கவர்ந்தன. பாறை மலைகள், மரங்கள் வளர்ந்த மலைகள், பசும்புல் மலைகள், அவைகளுக்கிடையில் மணற்பாங்கான மலைப் பகுதிகள் அனைத்தும் கண்கொள்ளா காட்சிகளாயின.

முடிவாக

உலகின் கூரையில் காலடி வைத்த முதல் நாள் உடலளவில் எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை. திபெத்தின தங்குவிடுதியில் அன்றிரவு தங்கினோம். திபெத்தின சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது. அடுத்த நாள் நண்பகல் வரை ஓய்வு எடுத்துவிட்டு பிற்பகல் போத்தலா மாளிகை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியிலே இரவு தூங்கிபோனேன்.

சீன திபெத்தின் லாசாவிலிருந்து

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040