• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இரண்டாம் நாள்
  2011-08-04 18:16:15  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

ஆகஸ்ட் இரண்டு, எமது திபெத் பணிப்பயணத்தின் இரண்டாம்நாள். போத்தலா மாளிகையை பார்க்க போகும் நாள் என்ற மகிழ்ச்சி உணர்வுடன் எழுந்தேன். உடல் சற்று ஒத்துழைக்க மறுத்தது. கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறை மூவாயிரத்து எழுநூறு மீட்டர் உயரத்தில், சமவெளியில் உள்ளதைவிட பாதியளவே நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் உள்ளது. அதனால் தான் அவ்வாறு உள்ளதா என்றால் அதற்குரிய அடையாளங்கள் ஏற்படவில்லை. உணவால் வயிற்றில் ஏற்பட்ட சிக்கல் தான் அந்த நலகுறைவு உணர்வை ஏற்படுத்தியது.

பன்னாட்டு தங்குவிடுதியில்

ஆகஸ்ட் முதல் நாள் இரவு திபெத்தில் பணிப்பயணம் மேற்கொண்ட 38 பேரும், இரண்டு தங்குவிடுதிகளில் தங்கியிருந்தோம். அடுத்த நாள் காலை அனைவரும் ஒன்றாக திபெத் பன்னாட்டு கிராண்ட் தங்குவிடுதியில் தங்க வைக்கப்பட்டோம். மதியம் வரை நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு, பிற்பகல் இரண்டு மணிக்கு போத்தலா மாளிகைக்கு புறப்பட்டோம். உடல் நலக்குறைவை உணர்ந்தால்

நண்பகல் சாப்பிடவில்லை. ஆனால் போத்தலா மாளிகைக்கு புறப்பட்டபோது, எனக்காக ரொட்டிகள், வாழைப்பழங்களை வாங்கி வைத்திருந்த தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி அவர்கள், தாயன்பையும், எனது உடல் நலத்தில் காட்டும் அக்கறையும் வெளிக்காட்டினார்கள். சீன மக்கள் பிறரிடம் காட்டும் அக்கறைக்கும், ஆதரவுக்கும் அவரது இந்த பண்பு சிறந்த எடுத்துக்காட்டு.

போத்தலா மாளிகையில்

ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழமையுடைய, 1994 ஆம் ஆண்டு ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக மரபு செல்வமாக பெருமை படுத்தப்பட்டுள்ள போத்தலா மாளிகை பிரமாண்டமான தோற்றத்தை வழங்கியது. நான்கு பக்கங்களும் கோட்டை அரண்களை கொண்டு ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் திபெத்திலிருந்த கட்டிடக்கலைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாய் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது.

திபெத் மக்களின் மத நம்பிக்கை

வழியில் மக்கள் பலர் சாலையில் முகம்குப்புற படுத்து மரியாதை செலுத்துவதை கண்டேன். பலர் இறைவேண்டல் சக்கரத்தை சுழற்றிக்கொண்டே நடந்தனர். மணிமாலையிலுள்ள மணிகளை உருட்டி, மந்திரங்களை முணுமுணுத்து கொண்டே செல்வோரையும் பார்த்தேன். பௌத்த மதத்தில் அவர்கள் வைத்திருக்கும் அளவில்லா நம்பிக்கையை இச்செயல்கள் உணர்த்தின. போத்தலா மாளிகைக்கு வெளியே அதனை பின்னணியாக வைத்து நிழற்படங்களை எடுத்த பின்னர், உள்ளே சென்றோம்.

கட்டிடக்கலை அடையாளம்

போத்தலா மாளிகை திபெத்தியரின் கட்டிடக்கலைக்கு சிறந்த அடையாளம். மலையில் கட்டிடம் கட்டுவது உயர் தொழில் நுட்பங்களும், கருவிகளும், இயந்திரங்களும் உடைய இக்காலத்தில் எளிதாக இருக்கலாம். ஆனால் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், எப்படி மலையில் இவ்வளவு உயரத்தில் மாளிகை கட்டினார்கள் என்பது வியப்பு அளிக்கிறது. கோட்டை அரண்கள், கோட்டைக் கதவுகள், சன்னல்கள், சன்னலின் மேல் சூரியஒளி, மழைநீர் வரமாலிருக்க கட்டமைப்புகள் அனைத்தும் அன்றைய கட்டிடக்கலையை விவரிப்பவை. தற்போது முழுமையாக காணப்படும் இந்த மாளிகை முதலில், கி.பி.637 ஆம் ஆண்டு சொங்சென் கேம்போ அரசரால் கட்டப்பட்டது. பின்னர் 1645 ஆம் ஆண்டு ஐந்தாவது தலாய்லாமா தனது ஆன்மீக அறிவுரையாளரின்படி போத்தலா மாளிகையை கட்டினார். 1989 மற்றும் 1994 ஆண்டுகளில் ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் யுவான் செலவில் செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்ணாலும், வெள்ளை கலவையாலும் முற்றிலும் கருங்கற்களால் உயர்ந்து நிற்கும் இம்மாளிகை அதனுடைய தனிசிறப்பை என்றுமே உணர்த்தி நிற்கும்.

ஆயிரம் அறைகள்

ஆயிரம் கால் மண்டபம் கேள்விப்பட்டிருகிறோம். ஆயிரம் அறைகள் இருந்ததை அறிந்திருக்கிறோமா? ஆயிரத்திற்கு ஒன்று குறைவாக தொள்ளாயிரத்து தொன்நூற்று ஒன்பது அறைகள் போத்தலா மாளிகையில் உள்ளன. மலையில் ஏறக்குறைய ஆயிரம் அறைகள் உள்ள ஒரே மாளிகை இதுவாக தான் இருக்க முடியும். ஒவ்வொரு அறைகளும், தனித்தனி தெய்வத்திற்கும், தலாய்லாமாவுக்கும், பௌத்த மத மறைநூல் வல்லுநருக்கும், பௌத்த மத மருத்துவ வல்லுநருக்கும் என உள்ளன. போத்தலா மலையில் இந்த மாளிகை கட்டப்பட்டதால் போத்தலா மாளிகை என்ற பெயர் பெற்றது.

நிர்வாக பொறுப்பாளரிடம் பேட்டி

போத்தலா மாளிகையின் பொறுப்பாளர்களில் முதல்வரான திரு.சுங்தா என்பவரிடம் பேட்டி காண்பதற்காக அம்மாளிகையின் கருவூல பகுதிக்கு செல்வதற்கு முன்னாலுள்ள அரங்கில் கூடினோம். ஒவ்வொரு மொழிப்பிரிவு நிபுணர்களும் கேள்விகளை தெடுக்க, அவர் விளக்கமாக பதிலளித்தார். போத்தலா மாளிகை வரலாறு, பராமரிப்பு பணிகள், சுற்றுலா பயணிகள் வருகை போன்ற பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

கருவூல பகுதி

பேட்டி முடிந்தவுடன், போத்தலா மாளிகையின் கருவூல பகுதியை பார்வையிட சென்றோம். போத்தலா மாளிகையின் கருவூல பகுதியை பார்வையிடவே பல நூறு கற்களாலான படிகளை, மூச்சிறைக்க மக்கள் அனைவரும் கடந்து வருகின்றனர். அங்கு தான் முக்கிய அறைகள் உள்ளன. தலாய் லாமாக்களின் அறைகள், இறைவேண்டல் அறைகள், தெய்வங்களுக்கு தனி அறைகள், பௌத்த மத மறைநூல் வல்லுநர்களுக்கு அறைகள், பௌத்த மத மருத்துவ வல்லுநர்களுக்கு அறைகள், லாமாக்களின் கல்லறைகள் என முக்கிய அறைகள் உள்ளன. அப்பகுதியை விரைவாக பார்வையிடவே ஒரு மணிநேரம் எடுத்தது. அதிலுள்ள தியான அறை குகை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஞானஒளி அறை கௌதம புத்தர் ஞானஒளி பெற்றதை நினைவூட்டுகிறது. இந்தியா உள்பட பிற நாடுகளிலிருந்து நினைவுப் பொருட்களாகவும், பரிசுப் பொருட்களாகவும் கிடைத்த பௌத்த மத மிக உருவங்கள் பெரிய அறையில் வைக்கப்பட்டுள்ளன. சில அறைகளிலுள்ள லாமாக்களின் கல்லறை பொன்னால் செய்யப்பட்டவை.

செப்பனிடும் பணி

போத்தலா மாளிகையை பழங்கால தோற்றத்தில் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை நான் குறிப்பிட்டாக வேண்டும். பல பகுதிகளில் மரக்குச்சிகள் அடுக்கி வைத்தாற்போல் சுவர்களை புதுப்பித்திருந்ததை பார்க்க முடிந்தது. செம்மண் கலவையால் கட்டப்பட்டிருந்த பகுதிகளை செம்மண் கலவையாலும், வெள்ளை வண்ண கலவையால் கட்டப்பட்டிருந்த சுவர்களை அவ்வண்ண கலவையாலும் புதுப்பித்துள்ளனர். மலையில் சில நூறு அடிகள் உயரத்தில் கம்பீரமாய் நிற்க, ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் செப்பனிடும் பணிகளை பாராட்ட வேண்டும்.

வாழ்க்கை சக்கரம்

போத்தலா மாளிகையை பார்த்து வியந்த பின்னர் மாலை ஆறு மணியளவில் வெளியே வந்தோம். மழை மங்காரமாக இருந்தது. அங்கே மக்கள் அனைவரும் சுழற்றுவதற்கு உருளையான வாழ்க்கை சக்கரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உருளைகளை ஒவ்வொன்றாக சுற்றினால் நீடூழி வாழலாம் என்ற நம்பிக்கை பௌத்த மதத்தினரிடம் உள்ளது. வாழ்க்கை சக்கரத்தை மக்களோடு சேர்ந்து சுழற்றிவிட்டு தங்குவிடுதி திரும்பினோம். வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன், நாங்கள் வாகனத்தில் ஏறிய பின்னர் தான் பொழிய வேண்டுமென நினைத்திருந்த மழை கொட்ட தொடங்கியது. சற்று நேரத்தில் அது ஆலங்கட்டி மழையாக மாறியது. வாகனத்தின்மேல் கற்களாக விழுந்த பனிக்கட்டிகள் சாலையில் விழுந்த சற்று நேரத்தில் வெப்பத்தால் உருகிபோயின. மழையை பார்த்து இரசித்தவாறு தங்குவிடுதியை அடைந்தோம்.

முடிவாக

அடுத்த நாள் அதாவது எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிந்து, பணிப்பயணம் மேற்கொள்ள வேண்டும். இத்தாலி நிபுணரும், வங்காளதேச நிபுணரும், நானும், எங்களுடன் சில சீனப் பணியாளர்களும் திபெத்தின் கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டும். திபெத்தின் வட பகுதிக்கு ஒரு குழுவினரும், மேற்கு பகுதிக்கு இன்னொரு குழுவினரும் பணிப்பயணம் மேற்கொள்கின்றனர். அந்த பயண நினைவிலேயே விரைவில் ஓய்வெடுக்க சென்றேன்.

சீன திபெத்தின் லாசாவிலிருந்து

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040