• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 மூன்றாம் நாள்
  2011-08-04 18:17:50  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

ஆகஸ்ட் மூன்றாம் நாள். திபெத்தின் கிழக்கே நானூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிங்சு மாவட்டத்தை சென்றடைய வேண்டும். காலை ஆறு முப்பது மணிக்கு காலை உணவு சாப்பிட்டோம். ஏழு மணிக்கு தங்குவிடுதியை விட்டு வெளியேறினோம். ஏழு நாற்பத்து ஐந்து மணிக்கு மூன்று வாகன அணிகளாக பிரிந்து பணிப்பயணத்தை தொடங்கினோம்.

திபெத்தியரின் வீடுகளில் கொடிகள்

லாசாவிலிருந்து கிழக்கு நோக்கி பயணம் மேற்கொண்டபோது, ஒவ்வொரு வீடுகளிலும் ஐந்து வண்ண கொடிகள் பறக்கவிடப் பட்டிருப்தை காணமுடிந்தது. கொடிகம்பத்தின் உயரே முதலில் நீல வண்ணக் கொடியும், அதற்கு கீழே வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. முதலில் எதற்காகவோ என்று எண்ணிய எனக்கு அதில் பெதிந்துள்ள பொருளை அறிந்தபோது, வியந்து போனேன். நீல வண்ணம் வானத்தையும், வெள்ளை மேகத்தையும், சிவப்பு மலையையும், பச்சை பசுமையையும், மஞ்சள் நிலத்தையும் குறிக்கிறதாம். இவை ஐந்தும் ஒருமித்து இயங்கி இயற்கையில் அமைதியை வெளிப்படுத்துவதை போல, மனிதர்கள் ஒன்றாக அமைதியை வளர்க்க கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த கொடியின் வழியாக வெளிப்படுத்துகிறார்கள்.

வாகன வேக கட்டுபாடு

லாசாவைவிட்டு வெளியே கிழக்குப் பகுதிக்கு செல்லும் சாலையை அடைந்தவுடன், அங்குள்ள சாவடி ஒன்றில் வண்டி எண்ணை பதிவு செய்து, அவ்வாகனம் அவ்விடத்தை விட்டு அகலும் நேரத்தையும் குறிப்பிட்டு சீட்டு ஒன்றை ஓட்டுநர் பெற்றுக் கொண்டார். வாகனங்களை சோதனையிட்டு, அதிக பயணிகள் செல்கிறார்களா? வாகனம் மற்றும் ஓட்டுநரின் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்று பரிசோதனை செய்யும் சாவடிகளை பார்த்திருக்கிறேன். இந்த பதிவு எதற்காக என்று தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி அவர்களிடம் வினவினேன். இந்த சாலையில் மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கட்டுபாடு உள்ளது. நாம் சென்றடையும் இடத்தில் இந்த சீட்டை வாங்கி சோதனை செய்வர். மிக விரைவாக சென்றடைந்தால், அபரதம் கட்ட வேண்டிவரும் என்று விளக்கினார்கள். வாகன வேகத்தை கட்டுபடுத்தி விபத்துகளை குறைப்பதற்கு மேற்கொள்ளும் இது போன்ற முயற்சிகளை யார் தான் பாராட்டமாட்டார்கள்!

பசுமை மலைகள்

நானூறு கிலோமீட்டர் மேற்கொண்ட பயணத்தின்போது, வழி முழுவதும் பெரிய பெரிய மலைகள் பசுமையாக காட்சியளித்தன. வீசிய காற்று உற்சாகமூட்டியது. மரங்கள் அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளி காடுகள், பாறை மலைப்பகுதிகள் அனைத்தும் கண்களை கொள்ளை கொண்டன. சில மலைகளுக்கிடையில் மேகங்கள் புகுந்து இனிய காட்சிகளை வழங்கின. நாங்கள் பயணம் செய்த சாலையில் மலை அடிவாரங்களை தவிர சமவெளிப் பகுதிகளை காண முடியவில்லை.

லாசா ஆறு

நாங்கள் கடந்து வந்த நானூறு கிலோமீட்டர் தொலைவிலும், லாசா ஆறு ஓடுகிறது. ஒவ்வொரு மலையிலிருந்தும் இரு மலை இடுக்குகள் வழியாக வரும் நீர் லாசா ஆற்றை அடைகின்றன. எனவே போக போக ஆற்றில் நீர் அதிகமாகி வேகம் நீரின் வேகம் கூடுகிறது. மிக வேகமாக ஆற்று நீர் பாய்ந்தோடும் பாறை தூண் பகுதியை அடைந்ததும் நிழற்படங்களை எடுத்துக்கொண்டோம். பலரும் உலர் திராட்சை பழங்களை வாங்கியவுடன் அங்கிருந்து கிளம்பினோம். வழி முழுவதும் மலைகள். ஏறக்குறைய இருபது முதல் சில இடங்களில் 50 மீட்டர் வரை அகலமான ஆற்றின் கரை வழியாக இவ்வளவு தொலைவையும் கடந்த கடந்து வந்த எங்கள் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விடுகின்றேன்.

ஆயர் குடில் சந்திப்பு

இரு பக்கங்களும் மலைகள். நடுவில் லாசா ஆறு. அதன் கரையில் சாலை. அந்த சாலையில் எங்கள் வாகன அணி. மூன்று வாகனங்களில் பயணம் செய்த நாங்கள், வாகன இயந்திரம் வெப்பமேறி நின்றுவிடாமலிருக்க, சற்று ஓய்வெடுத்தோம். வாகனங்களை நிறுத்திய இடத்திற்கு பக்கத்தில் ஆயர் ஒருவரின் குடில் இருந்தது. எங்களை பார்த்தவுடன், அங்கிருந்து இரு சிறுவர்கள் எங்களை நோக்கி வந்தனர். சில உணவு பண்டங்களை அவர்களுக்கு வழங்கினோம். அந்த குடிலுக்கு சென்று அச்சிறுவர்களின் பெற்றோரை சந்தித்தோம். அந்த குடில் கடினமான கோணி துணியால் வேயப்பட்டிருந்தது. குனிந்து தான் குடிலுக்குள் நுழைய முடிந்தது. இனிமையாக பேசிய அவர்களிடமிருந்து, பால்கோவா வாங்கி உண்டோம். அவர்களை நிழற்படக்கருவிகளில் பதிவு செய்தோம். முந்நூறு கால்நடைகளுக்கு சொந்தகாரரான அந்த ஆயரின் அச்சிறு குடிலில் எல்லா வசதிகளும் இருந்தன. தொலைக்காட்சி, அதற்கான அலைவரிசையை தெளிவாக பெற அலைவாங்கி, குறுந்தகடு இயக்கி, வானொலிப் பெட்டி, மிக்ஸி எனப்படும் சிறிய அரவை இயந்திரம், சிறிய இழுவை இயந்திரம் (டிராக்டர்) என அடிப்டை வசதிகள் அனைத்தும் இருந்தன. அவர்கள் வளர்க்கின்ற ஆடுகள், நாய்கள், எருமைகள் அனைத்தையும் பார்வையிட்டோம். அந்த ஆயரின் இந்த சிறிய குடில், கால்நடைகளை மேய்ப்பதற்காக வரும்போது மட்டும் பயன்படுத்தவே. சொந்த வீடு கிராமத்தில் இருப்பதாக கூறினார்.

நீர்மின் உற்பத்தி மற்றும் மின்வசதி

லாசா ஆற்றின் வேகம் கூடுதலாக அமைகின்ற சில இடங்களில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. நீரை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்து, மக்களின் வாழ்க்கையை ஒளி ஏற்றும் முயற்சி தான் அது.

மேலும், நானூறு கிலோமீட்டர் மலை சாலையில் பயணித்தபோது மலைகள் வழியாக மின்னாற்றலை கொண்டு செல்லுகின்ற உயர் மின்னாற்றல் கம்பிகளை காணமுடிந்தது. பல கிலோமீட்டர்களுக்கு இடையில் உள்ள கிராமங்களுக்கு மின்சார வசதிகளை வழங்கவும் சிறிய மின்கம்பி இணைப்புகள் வழி நெடுக காணப்பட்டன. மக்களின் அடிப்படை வசதியான மின்னாற்றலை வழங்க எடுக்கப்படும் முயற்சிகளை நேரடியாக பார்த்து அறியமுடிந்தது. மலைகளுக்கு இடையில் உயர் மின்னாற்றலை கொண்டு செல்லும் வசதிகளை அமைத்துவிடலாம் என்று தான் வைத்துக்கொள்வோம். ஆனால் அதனை தொடர்ந்து பராமரித்து எந்த சிக்கல்களும் இன்றி செயல்பட வைப்பது அதிக செலவையும், உழைப்பாற்றலையும் உருவாக்கும் தானே. எதற்கும் துணிந்து மலை வழியாக மின்னாற்றலை வெற்றிகரமாக கொண்டு செல்லும் முயற்சியை பாராட்ட வேண்டும்.

வாகனங்கள் பயன்பாடு

நானூறு கிலோமீட்டர் கடந்து வந்தபோது, அதிக குதிரை ஆற்றல் கொண்ட வாகனங்களை தான் சாலையில் பார்க்க முடிந்தது. சிறிய ரக சீருந்துகளை அரிதாக தான் காணமுடிந்தது. டோயோட்டா லேண்ட் குருசியர் ரக பெரிய சீருந்துகளை தான் சாலையில் காணப்பட்டன. மிக விரைவாக, சீறிப்பாயும் ஆற்றலுடைய இந்த வாகனங்கள் தான் எந்த சிக்கலுமின்றி விரைவாக செல்ல முடியும் என்பதை அவற்றில் பயணம் செயத போது அனுபவித்தோம். மலையூடாக செல்லும் ஆற்றோர சாலையிலும், ஏற்ற இறக்கங்கள் உடைய சாலையிலும் போக்குவரத்திற்கு அதிக குதிரை ஆற்றல் கொண்ட இந்த ரக வாகனங்களே சிறந்தவை என்று தோன்றியது. அதனால் தான் அத்தகைய வாகனங்கள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன போலும்.

கோம்பூஜியந்தா மாவட்டம்

பயணத்தை தொடர்ந்த நாங்கள், இரண்டு இடங்களில் சற்று இளைபாறி சில நொருக்கு பண்டங்களை உண்டோம். பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணியளவில் கோம்பூஜியந்தா மாவட்டத்தின் மையப்பகுதியை வந்தடைந்தோம். அவ்வழியில் பயணம் செய்வோர் அனைவரும் காலை, மதியம் மற்றும் மலை உணவை உண்டு செல்ல அனைத்து வசதிகளும் அங்கு காணப்பட்டன. துணிக்கடை, மளிகைக் கடை காய்கறிக் கடை உள்பட அனைத்து கடைகளும் அங்கு கணப்பட்டன. கோம்பூஜியந்தா மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சிப் பரப்புரை செயலாளர் திருமதி.சுயுசெங் உணவு ஏற்பாடு செய்துவிட்டு, எங்களுக்காக உணவகத்தில் காத்திருந்தார்.

கோம்பூஜியந்தா மாவட்டத்தில் பேட்டி

சாப்பிட்டுவிட்டு கோம்பூஜியந்தா மாவட்ட காடு வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆணைய அலுவலகத்திற்கு சென்றோம். அம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காடு வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக, அவ்வாணயத்தின் மேலாண்மை நிர்வாக பொறுப்பாளரும், கட்சியின் அரசியல் பொறுப்பாளருமான திரு.சென் சியாங் வென் என்பவரிடம் பேட்டிக் கண்டோம். காடுகளை வளர்ப்பது, பாதுகாப்பது, காட்டு தீயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை அவர் விளக்கினார். முன்பு அங்குள்ள மக்கள் விறகையே எரியாற்றலாக பயன்படுத்தியதால், காடுகள் அழிய தொடங்கின. எனவே காடுகளை பாதுகாக்கும் எண்ணம் 1993 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. காடுகளை பாதுகாக்கும் எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்ல, அவர்களுக்கு மாற்று எரியாற்றல் வழங்குவதற்காக, மீத்தேன் எரிவாயு பயன்படுத்த ஊக்கமூட்டியுள்ளனர். ஏழைகளாக இருந்தால், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆணையகத்திடமிருந்து மீத்தேன் எரிவாயு உற்பத்தி செயயும் கட்டுமானத்திற்கு உதவி வழங்கப்பட்டது. அதனை அமைக்க ஆகும் செலவில் மக்கள் ஒரு பகுதி தொகையும், அரசு ஒரு பகுதியும் வழங்கி மீத்தேன் உற்பத்தி கட்டுமானங் உருவாக்கியுள்ளனர். சிலர் சூரிய ஆற்றலை பயன்படுத்தும் கருவிகளை வீடுகளின் கூரைகளில் அமைத்திருப்பதை காணமுடிந்தது. விறகுகளை பயன்படுத்திய மக்கள் படிப்படியாக மீத்தேன் எரிவாயுவை பயன்படுத்த தொடங்கினர். மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தி கொண்டிருந்தோரின் வாழ்வதற்கு ஆதாரமாக, காட்டிலுள்ள காளான்களை சேகரித்து விற்பனை செய்வதற்கு ஊக்கமூட்டியுள்ளனர். பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில் தற்போது காடுகளில் பீச் உள்பட பல்வகை பழ மரங்களையும் நடவும் தொடங்கியுள்ளனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று வழிகள் தலைசிறந்ததாய் அமைந்தால், மரங்களை வெட்டக் கூடாது, காடுகளை பாதுகாத்து வளர்ப்பது என்பது மக்களின் மனங்களில் விதையாக வேரூன்றியது. 2000 ஆம் ஆண்டு நான்கு எ நிலை தேசிய காடு வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு மண்டலமாக கோம்பூஜியந்தா மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

கோம்பூஜியந்தா மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டில் 26.29 விழுக்காடாக இருந்த காடு பரவல் விகிதம் தற்போது 92 விழுக்காட்டிற்கு மேலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு முதல் இம்மாவட்டத்தில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு முயற்சிகளால் தற்போது காலநிலை மேம்பட்டுள்ளது. இலையுதிர் காலத்தில் வண்ணமயமான காட்சிகளை காடுகளில் காணலாம். குளிர்காலத்தில் பனி அதிகமாக பெய்கிறது. பலகைகளுக்காக தற்போது வெட்டப்படுகின்ற மரங்கள் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆனவை என்றால் தான் வெட்ட அனுமதிக்கப் படுகின்றன.

தேசிய நிலை இயற்கைக் கட்சிப் பகுதி

பின்னர் கோம்பூஜியந்தா மாவட்டத்திலிருந்து லின்ச்சு மாவட்டம் நோக்கி புறப்பட்டோம். கோம்பூஜியந்தா மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சிப் பரப்புரை செயலாளர் திருமதி.சுயுசெங் எங்களுக்கு வழிகாட்ட எமது வாகன அணி தொடர்ந்தது. சுமார் ஆறு பதினைந்து மணிக்கு லின்ச்சு நகரின் பாசும் தேசிய நான்கு எ நிலை இயற்கைக்காட்சி பகுதிக்கு வந்தபோது, தூய்மையான நீரால் கடல் போன்று, பெரிய நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் பாசும் எரியை பார்த்தோம். சற்று நேரம் இளைபாறிவிட்டு செல்லாமே என்று நினைத்த எங்களுக்கு, அன்றிரவு அந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ள தங்குவீடுகளில் தங்கிவிட்டு அடுத்த நாள் புறப்டுவோம் என்பதை கேட்டபோது அகமகிழ்வு ஏற்பட்டது. அவ்விடத்தை ஏற்கெனவே வந்தடைந்திருந்த சீன வானொலி நிலையத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சாங்பூசெங், ஆசியப் பிரிவின் துணைத் தலைவர் பைஃறுசென் ஆகியோர் எங்களை வரவேற்றனர்.

முடிவாக

இரவு உணவு உண்டுவிட்டு, பாசும்சோ ஏரியின் காட்சிகளை தொலைவிலிருந்து பார்த்தபடி அறைகளுக்கு சென்றோம். அடுத்த நாள் பாசும் எரியின் இயற்கைக் காட்சிகளை பார்த்துவிட்டு, பணிப்பயணத்தை தொடரும் எதிர்பார்ப்புகள் மேலோங்க தூங்கிபோனோம்.

பாசும் ஏரி இயற்கைக் காட்சி தலத்திலிருந்து,

தமிழன்பன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040