• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐந்தாம் நாள்
  2011-08-08 09:55:48  cri எழுத்தின் அளவு:  A A A   

லோபா இன வயதான பெண்ணுடன் கலையரசியும், தமிழன்பனும்

தொடக்கமாக

காலையில் எழுந்து அறையிலேயே காலை உணவை உண்டுவிட்டு, எட்டு மணியளவில் பணிப்பயணத்தை தொடங்கினோம். பாயி நகரிலிருந்து லின்ச்சு விமான நிலையம் வழியாக யாலுசாம்பூ ஆற்றின் மறுகரையை அடைந்தோம். அந்த கரை வழியாக பயணம் தொடர்ந்தது. இதுவரை பார்த்திராத சிறந்த இயற்கைக்காட்சி தலங்களை பார்க்க போகிறேன் என அப்போது நான் எண்ணவில்லை.

இனிய பயணம்

இரு பக்கங்களும் பசுமையான பெரிய மலைத்தொடர்கள். நடுவில் யாலுசாம்பூ ஆறு. அதன் கரையில் மலையில் இடப்பட்டுள்ள இரு வாகனங்கள் செல்லுவதற்கேற்ற அகல சாலை. இளம் குளிர் காற்று மேனியை தழுவிச் செல்ல காலைப் பயணம் இதமாய் இருந்தது. மலைகளுக்கு இடையே மரங்களின் ஊடாக வந்திறங்கிய மேகங்கள் வானத்திற்கும், மலைகளுக்கும் இடையே பாலம் அமைந்தன. அதிக இடங்களில் மழை பெய்து வருவதால், யாலுசாம்பூ ஆற்று நீர் மண்ணின் வண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. சூரிய ஒளி படுகின்ற மலைப் பகுதிகள் சற்று பளிச்சென்றும், மேகங்களின் நிழல் விழும் மலைப்பகுதிகள் சற்று இருண்ட தோற்றத்தையும் வழங்கி உவகை ஊட்டின. மரங்களில் தற்போது தளிர்விட்டு வளர்ந்துள்ள முளைகள் இளம்பச்சை வண்ணத்திலும், பிற கடும் பச்சை வண்ணத்திலும் இருப்பது மலைகளின் அழகுக்கு மெருகூட்டியது. மேகங்கள் குளிர்ந்து, மலையின் உச்சியில் மழை பொழிய, மழை நீர் இருமலைகளுக்கு இடையில் வழிந்தோடியது. நுரையோடு வழிந்தோடும் மழைநீர், மலையிலிருந்து பாலை ஊற்றிவிட்டதை போல எமக்கு தெரிந்தது. சில மலைகளின் உச்சியில் பனி பொழிய அந்த வெண்பனி சூரிய ஒளி பட்டு வெள்ளியாய் மின்னியது. மண்ணின் வண்ணத்தில் நீர், இளம் பச்சை, கடும் பச்சை, வெண்மேகம், நீல வானம், பனி வண்ணம் என இயற்கையில் இவ்வளவு எழில்மிக்க வண்ணங்களா? என்று விழி மூடாமல் பார்த்து கொண்டே சென்றேன்.

இருபெரும் அனுவங்கள்

இன்றைய பணிப்பயண அனுபவங்களை இரண்டாக வரையறுக்கலாம். ஒன்று, யாலுசாம்பூ தாசியா பள்ளதாக்கு சந்திப்பு. இரண்டு, சீன முலிகை மருந்து தயாரிப்பு நிலையத்தை பார்வையிடல். இவை வேவ்வேறான அனுபவங்களை வழங்கின என்று தான் சொல்ல வேண்டும்.

01. யாலுசாம்பூ தாசியா பள்ளதாக்கு

முதல் காட்சியிடம்

மலைகளின் பின்னணியில் யாலுசாம்பூ ஆற்றின் சிறந்த தோற்றத்தை கண்டு மகிழ அப்பாதையிலுள்ள முதல் காட்சியிடத்தில் இறங்கினோம். மிக அகலமான பரப்பில் அமைதியாக நீர் பெருக்கொடுத்து ஓடுவதை பார்த்தோம். கட்டுக்கு அடங்காத அளவு நீர் ஓடிக்கொண்டிருந்தது.

மாணவர்கள் சந்தி்ப்பு

அவ்விடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சிற்றுண்டி தயார்செய்து விற்றுக்கொண்டிருந்த இரு இளம் பெண்களையும், ஒரு சிறுவனையும் அணுகினோம். அவர்களிடமிருந்து, நீராவியில் வேக வைத்த சூடான உருளைக்கிழங்கை வாங்கி உண்டோம். பின்னர், அவர்களை பற்றி அறிந்துகொள்ள வினாக்களை தொடுத்தோம். அவர்கள் பதினைந்து மூ நிலமுடைய விவசாயி ஒருவரின் எட்டு குழந்தைகளில் மூவர். எங்களிடம் பேசிய இளம்பெண் பைம்லாஜி, கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார். மருத்துவராவதே அவரது கனவு என்றார். அந்த சிறுவன் நான்காம் வகுப்பு படிப்பதாக தெரிவித்தனர். நிலத்தில் வேலை செய்ய டிராக்டர் எனப்படும் இழுவை இயத்திரம் இருப்பதாகவும் கூறினர். தற்போது கோடைகால விடுமுறை ஆனதால், தங்கள் நிலத்தில் விளைந்தவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்று படிப்பிற்கு வேண்டிய தெகையின் சிறு பகுதியையாவது பெற்றுவிட முயற்சிப்பதாக தெரிவித்தனர். அவர்களது விளைநிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சல் குடும்ப செலவுகளுக்கு சரியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். நாற்பது குடும்பங்கள் உள்ள அவர்களது கிராமத்தில், ஏறக்குறைய எல்லோரும் இவர்களை போல ஓரளவு வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறினர். விவசாயிகளின் குழந்தைகள் படித்து மருத்துவராக வேண்டும் என்று உயர் எண்ணம் கொண்டிருக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்தை அறிய முடிந்தது.

யாலுசாம்பூ தாசியா பள்ளதாக்கு

பதினொரு மணயளவில் யாலுசாம்பூ தாசியா பள்ளதாக்கு இயற்கைக் காட்சியிட நுழைவாயிலை அடைந்தோம். இப்பள்ளதாக்கு பற்றிய தகவல்களை அங்குள்ள அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டோம். யாலுசாம்பூ ஆறாக ஓடிவந்து, இவ்விடத்தில் தான் ஆழமான பள்ளதாக்கில் ஓடுகின்ற ஆறாக மாறுகிறது. தா என்றால் பெரிய அல்லது மிகவும் என்று பொருள். சியா என்றால் ஆழத்தை குறிப்பதாகும். எனவே யாலுசாம்பூ தாசியா பள்ளதாக்கு என்றால் யாலுசாம்பூ மிக ஆழமான பள்ளதாக்கு என்ற பெயர் பெறுகிறது. இந்த ஆறு மிக ஆழழான பள்ளதாக்காக மாறுகின்ற தாடோகா என்ற இடத்தில் நடப்பட்டுள்ள கற்தூணிற்கு அருகில் நின்று அழியா நினைவாக நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம்.

காதல் மரம்

யாலுசாம்பூ மிக ஆழமான பள்ளதாக்காக மாறி ஓடும் இடத்தை தாண்டி பயணித்தால், தாஷாங்சூ என்ற இடத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலற்று முக்கியத்துவம் வாய்ந்த மரத்தை காணலாம். தரைப்பகுதியிலேயே கிளைகள் படந்து, அடிப்பகுதி மிகவும் பருத்துபோய் காணப்படும் இந்த மரம் அனைவரையும் மிகவும் ஈர்க்கிறது. ஆமாம். இது காதல் மரம். இருவருடைய காதலை அடையாளப் படுத்துகிற மரம். அரசர் சொங்சென் கேம்போவும், அவரது மனைவியும் தங்கள் காதலின் அடையாளமாக இந்த மரத்தை நட்டதாக வரலாற்று முக்கியத்துவம் கூறப்படுகிறது. இந்த மரத்தின் பின்னணியில், உயர் மலைகளின் உச்சியில் படிந்திருக்கும் பனியும், அவற்றை மூடியிருக்கும் மேகங்களும் கண்கொள்ளா காட்சியை நமக்கு விருந்தாகுகின்றன.

நாம்ஜபார்வா மலை

பயணம் நின்றுவிடவில்லை. அடுத்தாக வருவது நாம்ஜாபார்வா மலை. புரியாத பெயராக இருக்கிறதே என்று திகைத்தபோது, எட்டு மலைகள் உள்ள இடம் என்ற விளக்கம் கிடைத்தது. இங்கே, மிகவும் உயர்ந்த எட்டு மலைகளின் உச்சியை பார்த்து மகிழலாம். நாங்கள் சென்றபோது, மலைகளை மேகங்கள் அதிகமாக சூழ்ந்திருந்தால், மலைகளின் உச்சியை சரியாக பார்க்க முடியவில்லை. கீழே பள்ளதாக்கில் யாலுசாம்பூ ஆறு. மேலே எட்டு உயர்ந்த மலைகள். அவற்றை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. மலைகளின் உச்சியில் பனி பொழிந்திருக்கிறது. வெள்ளி போன்று மின்னிய பனியோடு, மேகங்களின் வெண்மை, நீல வானம் ஆகியவை கலந்து சொர்க்கத்தின் காட்சி தந்தன. இந்த எட்டு மலைகளும், கடல் மட்டத்தைவிட எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளதால் மிகவும் குளிராக இருப்பவை.

கடைசி காட்சியிடம்

நாம்ஜாபார்வா மலையை கடந்து, கீழே சென்றால், யாலுசாம்பூ ஆற்றில் தண்ணீர் கடைபுரட்டோடுவதை மிக அருகிலிருந்து காணும் காட்சியிடம் வருகிறது. மலைப் பாம்பு போல் வளைந்து நெழிந்து, இரைச்சலோடு செல்லும் ஆற்றை மிகவும் அருகிலிருந்து பார்ப்தற்காக ஏற்பாடுகளை செய்துள்ளனர். தற்போது மழை பெய்வதால், மண்ணின் வண்ணத்தில் போரிட வரும் வீரர்களை போல நீர் விரைகிறது. இயற்கைக் காட்சியிடங்கள் அனைத்தையும் பார்த்த பின்னர், தயாசியா பள்ளதாக்கு நுழைவு வாயிலுக்கு அருகிலுள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம்.

02. சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையம்

பிற்பகல் நான்கு மணியளவில் பாயி நகரத்திலுள்ள சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையத்திற்கு வந்தடைந்தோம். மூலிகை மருந்து தயரி்ப்பு நிலையத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் வைத்து, கத்தா என்ற வெள்ளை வண்ண பட்டுத்துண்டை கழுத்தில் இட்டு திபெத்திய பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார்கள். இந்த சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையத்தின் முன்னாள் மேலாளரும், தற்போது லாசா சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையத்தில் பரப்புரை துறை தலைவருமான பியன்பா சு ரென் என்பவர் எங்களுக்கு கழுத்து துண்டை அணிவித்து வரவேற்றார்.

உதவும் கோட்பாடு

சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையத்தில் நுழைந்தவுடன், பிறருக்கு உதவும் இரண்டு கோட்பாடுகளை அடையாளபடுத்தும் லோகோ எனப்படும் இலட்சினைகள் இரண்டு மரத்தால் வடிவமைக்க்ப் பட்டிருந்ததை கண்டோம். நலமானோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதை முதல் இலட்சினை உணர்த்தியது. தாய் குழந்தைக்கு உதவுவதை இரண்டாவது இலட்சினை வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே சீன மூலிகை மருத்துவ நிலையத்தின் செயல்பாடுகள் இருப்பதாகவும் பியன்பா சு ரென் விளக்கினார்.

மருந்து தயாரிப்பு நிலையம்

இந்த சீன மூலிகை மருந்து தயாரி்ப்பு நிலையத்தை ஹான் இனத்தை சேர்ந்தவர் தொடங்கினார். பின்னர், மக்களும் பங்குகளை அளித்து, முதலீட்டில் பங்கேற்கும் மருந்து தயாரிப்பு நிலையமாக இது வளர்ந்துள்ளது. இங்கு நூற்றி ஐம்பது பேர் வேலை செய்கிறார்கள். ஐம்பதுக்கு மேலானோர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறி்ப்பிடத்தக்கது. திபெத்திற்கு வருகின்ற மக்களுக்கு ஆக்ஸிஐன் பற்றாக்குறைக்கு அருமருந்தான தாங்ஷான் மூலிகை மருந்து இங்குதான் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் என்ற வெளிநாடுகளில் விற்கப்பட்டாலும், சீனப் பெருநிலப்பகுதி தான் முக்கிய சந்தையாக திகழ்கிறது.

படவிளக்கம்

மருந்து தயாரிப்பு நிலையத்தின் உள்ளே அழைத்து சென்ற அவர், அங்கே சுவரில் வரையப்பட்டுள்ள படங்களை காட்டி சீன மூலிகை மருந்து உருவாவது, உடலில் செயல்டுவது, மருத்துவ அறிவை வளர்த்த மருத்துவ வல்லுனர்களான பௌத்த துறவிகள் என பல தகவல்களை விரிவாக, விளக்கமாக எங்களுக்கு விளக்கினார்.

சீன மூலிகை மருத்துவ சிகிச்சை

உடலில் நலக்குறைவு ஏற்பட்டால், வெளியில் தெரிகின்ற தலைவலி, வயிற்று்போக்கு போன்றவை வெறுமனே அறிகுறிகளே. அவற்றின் அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து, மருத்துவ சிகிச்சை வழங்கினால் தான் உடல் நலக்குறைவு முற்றிலும் நீங்கும். இந்த அடிப்படையில் தான் சீன மூலிகை மருத்துவம் நடைபெறுகிறது.

சொந்த அனுவம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், பியன்பா சு ரென்னுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார். திடீரென ஒருநாள் அவரது வயறு ஊத தொடங்கியது. பல்வேறு மருநதுகளை உண்ட பின்னரும் நலமில்லை. எனவே பெய்ஜிங் மாநகரத்திற்கு சென்று பல மருத்துவரிடம் காட்டி குணபடுத்த முடிவு செய்தார். ஆனால் அங்கு சென்றபோது, இதனை தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். உடனடியாக, பியன்பா சு ரென், அவரது பேராசிரியரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். அவரது அறிவுத்தலின்படி, நான்கு நாட்கள் மருத்துகளை உண்டவுடனே, வயிறு பழைய நிலைமைக்கு திரும்பியதை அவர் உணர்ந்தார். தொடர்ந்து ஆறு மாதங்கள் அந்த மருந்தை உண்ட அவர் முற்றிலும் குணமடைந்தார்.

நேரத்திற்கு ஏற்ற உணவும், மருந்தும்

காலைநேரத்தில் உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் உணவையும், மருந்தையும் உட்கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் சரியாக வேலை செய்ய முடியும். நண்பகலில் உடல் ஏற்கெனவே வெப்மாக இருப்பதால், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் உணவையும், மருந்தையும் உட்கொள்ள வேண்டும். வேலைசெய்து களைத்துபோன உடலை அமைதியாக்கும் உணவையும், மருந்தையும் மாலையில் சாப்பிடவேண்டும் என்று பியன்பா சு ரென் குறி்ப்பிட்டார்.

பிறருக்கு உதவி செய்ய ஆயுள்

சீன மூலிகை மருத்துவ நிலையத்தின் பணியாளர்கள் எத்தகைய கொள்கையை கொண்டிருக்க வேண்டுமென்பதையும் பியன்பா சு ரென் கதை கூறி விளக்கினார். ஆயுள் இருந்தால் தனக்கு அல்ல அடுத்தவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறினார்.

தாங்கா ஓவியம்

தாங்கா ஓவியம் திபெத் கலையின் ஒரு பகுதி மட்டுமல்ல, திபெத்திய பௌத்த மதத்தின் முக்கிய உள்ளடக்கமும் ஆகும். செறிவூட்டப்பட்ட வண்ணம் பூசுதல், அழகுபடுத்துதல் மற்றும் கை வேலைப்பாடுகளால், திபெத்திய பௌத்த மதத்தின் ஆயிரமாண்டு வரலாற்றையும், பிரமுகர்களையும், நிகழ்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது திபெத்தில் ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சியால் குறிப்பாக சுற்றுலாத் துறை வளர்ச்சியால், தாங்கா ஓவியம் சிறந்த மரபுச் செல்வமாகவும், திபெத்திய பண்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தும் புதிய முகமாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

மருத்துவ தாங்கா ஓவியம்

சீன மூலிகை மருந்து தயாரி்ப்பு நிலையத்தில் பல்வகை மருத்துவ தாங்கா ஓவியங்கள் காண்டுகின்றன. உடலில் நோய் குணமடைவதன் தத்துவம், குழந்தை உருவாகி பிறப்பது, உடல் அமைப்பு, எலும்பு அமைப்பு, உடலின் முன்பக்க மற்றும் பின்பக்க அமைப்பு என பல்வேறு மருத்துவ தாங்கா ஓவியங்களை பியன்பா சு ரென் எங்களுக்கு காட்டி விளக்கினார்.

முடிவாக

அன்றிரவு விருந்தளிக்க பியன்பா சு ரென் முன்வரவே உணவகம் சென்றோம். ஒரு கிலோ பதிநான்காயிரம் ரூபாய் விலைமதி்ப்புள்ள காளானை முதல் முறையாக உண்டு மகிழ்ந்தேன். அந்த உணவகத்தின் பக்கத்தில் இருந்த பூஜியன் பூங்காவிலிருந்து இனிய இன்னிசை ஒலித்தது. அதனை பார்க்க சென்ற எங்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வட்டவடிவ சதுக்கத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றாக நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நடனமாடி மகிழ்ந்தோம். அடு்த்த நாள் பார்க்கயிருக்கும் இடங்களை அறிந்த மகிழ்ச்சியில் ஓய்வெடுக்க சென்றோம்.

பாயி நகரத்திலிருந்து

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040