• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏழாம் நாள்
  2011-08-16 09:10:06  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

பல்வேறு இடங்களை பார்ப்பதற்கு ஆவலோடு கண்விழிக்கும் நாங்கள் இன்று, மீண்டும் திபெத் தலைநகர் லாசாவை சென்றடைய பயணத்தின் எண்ணத்தோடு எழுந்தோம். காலை எட்டு மணியளவில் காலையுணவை முடித்துவிட்டு பாயி நகரிலிருந்து புறப்பட்டோம்.

மலைகளுக்கிடையில் பயணம்

ஏழாம் நாள் பணிப்பயணம் ஆகஸ்ட் மூன்றாம் நாளின் சீருந்து பயணத்தை தான் மீண்டும் நினைவூட்டியது. லின்ச்சு வட்டத்திற்கு ஏற்கெனவே வந்திருந்த சீன வானொலி நிலைய துணைத்தலைவரும், ஆசியப் பிரிவின் துணைத் தலைவரும் எங்களோடு லாசா திரும்பினர். நான்கு சீருந்துகளில் வாகன அணியாக புறப்பட்டோம். இரு பக்கங்களிலும், மலைகள், மலைத் தொடர்கள். நடுவில் மிக பெரிய அகன்ற ஆறு. மலையின் அடிவாரத்தில் ஆற்றின் ஓரத்தில் இடப்பட்டுள்ள சாலையில் வாகனங்கள் சீறி பாய்ந்தன.

சாலை போக்குவரத்து

எமது வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கிறபோது, அந்த மலை சாலை இடப்பட்டுள்ள முறையை உற்றுக் கவனித்து கொண்டே பயணம் மேற்கொண்டேன். பொதுவாக, சாலைகள் குறிப்பிட்ட அகலத்தில் தார் சாலைகளாக தான் இருக்கும். ஆனால், நாங்கள் பயணம் செய்த சாலைகள் சற்று வேறுபட்ட வகையில் இடப்பட்டிருந்தன. சாலைகளின் இரு ஓரங்களிலும் காரை மற்றும் சல்லி கலவையால் ஏறக்குறைய ஒன்பது அங்குலம் அகலமுடைய தடுப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புக்கு சம மட்டத்தில் தர் சாலை இடப்பட்டுள்ளது. மழையோ, வெள்ளமோ வருகின்றபோது, சாலையின் இரு ஓரங்களிலும் தார் சாலை மிகவும் மோசமாகி குண்டு குழியாகாமல் இருக்க இந்த தடுப்பு உதவுகிறது. மேலும் சாலையிலுள்ள தார் அடித்து செல்லப்படாமல் இருக்கவும் இந்த கட்டுமானம் உதவுகிறது. எனவே பெரும்பாலும் நல்ல, போக்குவரத்திற்கு உகந்த சாலை வசதியை இந்த மலைப் பகுதிகளில் காண முடிந்தது. ஒரு வாகனம் போவதற்கும், இன்னொரு வாகனம் வருவதற்குமாக அமைக்கப்பட்டிருந்த இந்த சாலையிலும் நூறு முதல் நூற்றி இருபது கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடிந்தது என்றால் பாருங்களேன்!.

அதிகபட்ச உயரத்தில்

லின்ச்சு வட்டமானது லாசாவை விட கடல் மட்டத்திலிருந்து மிக குறைவான உயரத்திலேயே உள்ளது. எனவே இங்கு பொதுவாக சுவாசிக்கும் காற்று அதிக விழுக்காடு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், நாங்கள் பயணம் மேற்கொண்டு வரும்போது, கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரத்து பதிமூன்று மீட்டர் உயரத்திலுள்ள மலை வழியாக பயணம் மேற்கொண்டோம். அந்த மலையின் உச்சியில் நிறுவப்பட்டிருக்கும் உயரத்தை குறிப்பிடும் நினைவுக்கல்லுக்கு அருகில் நிழற்படங்கள் எடுத்து விட்டு அங்கிருந்து இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தோம். பின்னர் சீருந்து பயணம் தொடர்ந்தது. இவ்வளவு அதிக உயரத்திற்கு சென்றதாக, திபெத்தின் வட பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் சென்றவர்கள் தெரிவிக்கவில்லை.

பிரிந்தவர் கூடினோம்

ஆகஸ்ட் மூன்றாம் நாள் திபெத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற நாங்கள் அன்று மாலை ஒன்றாக கூடவுள்ளோம் என்ற எதிர்பார்ப்பு மனதில் ஆழமாக இருந்தது. ஏறக்குறைய பத்து மணிநேரம் நீடித்த அன்றைய சீருந்து பயணத்தில் ஆங்காங்கே இளைபாறி, மதிய உணவுண்டு பயணத்தை தொடர்ந்தோம். மாலை ஆறு மணியளவில் திபெத் தலைநகர் லாசா வந்தடைந்தோம். வட பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் சென்றவர்களும் அப்போது தான் ஆகஸ்ட் இரண்டாம் நாள் தங்கியிருந்த திபெத் பன்னாட்டு கிரண்ட் தங்குவிடுதிக்கு வந்தடைந்தனர்.

விருந்தில் சங்கமம்

இரவு ஏழரை மணிக்கு இரவு உணவின்போது, அனைவரும் சந்தித்து அவரவர் பகுதிகளின் இனிய அனுபவங்கள் பற்றி பரிமாறிக் கொண்டோம். திபெத்தின் வட பகுதிக்கு சென்றவர்கள் அனைவரும் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் ஏற்படும் சில சிக்கல்களை எப்போதும் உணர்ந்ததாக தெரிவித்தனர். அன்றைய இரவு உணவில் அனைவரும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டனர். கலகலப்பாக சிரிந்து மகிழ்ந்து உரையாடி விருந்துண்டோம்.

முடிவாக

ஆகஸ்ட் தொடக்கத்தில் லாசா சென்றடைந்தோம். இரண்டே நாளில் மூன்று குழுக்களாக பிரிந்தோம். தற்போது மீண்டும் இணைந்துள்ளோம். நாளை அனைவரும் இணைந்து எங்கு பயணம்? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் மிகுந்திருந்தது. பயண களைப்பு மேலிட அனைவரும் படுக்கைக்கு விரைந்தோம்.

லாசாவிலிருந்து,

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040