• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எட்டாம் நாள்
  2011-08-17 19:38:29  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

ஆகஸ்ட் எட்டாம் நாள். எமது திபெத் பணிப்பயணத்தின் எட்டாவது நாள். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. சீனாவை உலகமே வியப்பாய் திரும்பி பார்த்த அந்நாளை மறக்க முடியாது. அந்த நன்னாளில் லாசாவில் பார்க்க போகும் இடங்களை பற்றி அதிக எதிர்பார்ப்பு இருந்தது. காலை எட்டரை மணியளவில் தங்குவிடுதியை விட்டு புறப்பட்டோம்.

பௌத்த சிற்ப கலைக்கூடம்

முற்பகல் பத்து மணியளவில் தாட்சு மாவட்டத்தின் தேவிங் வட்டத்தின் பைனாசுன்கி கிராமத்திலுள்ள உலோக பட்டறை ஒன்றை வந்தடைந்தோம். லோசான்சிரி என்பவரின் குடும்ப தொழிற்சாலை தான் அது. பௌத்த மத சிற்பங்களை வெண்கலத்தில் மிக அழகிய கலை நுணுக்கங்களோடு வடிக்கும் சிறப்பு பெற்ற பட்டறை தான் அது. அந்த கலைக்கூடத்தில் பணிபுரியும் அனைவரும் நாங்கள் சிற்பக்கலைக்கூடத்தை பார்வையிடும் போதும் கவனம் சிதறாமல் பணியில் ஒன்றியிருந்தனர். பௌத்த மதம் தொடர்பான அனைத்து சிற்பங்களையும் அங்கே காண முடிந்தது. சாக்கியமுனி கௌதம புத்தரின் சிலை, சிறு தெய்வங்கள், குதிரைகள், யானைகள், மான்கள் போன்ற பல்வேறு சிற்பங்கள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. அந்த சிற்பக் கலைக்கூடத்தில் 24 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு எண்பது இலட்சம் யுவான் வரை இலாபம் கிடைக்கும் என்ற உரிமையாளர் லோசான்கிரி தெரிவித்தார். ஆறடி உயரமுடைய கௌதம புத்தரின் சிலையை செய்து முடிக்க ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிடும் என்று அவர் கூறினார். சீனாவின் பல மாநிலங்களிலிருந்து இந்த கலைக்கூடத்திடம் தான் பௌத்த மத சிற்பங்கள் செய்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.

முதியோர் காப்பகம்

மூத்தோர் நலம் காக்கும் சமூகம் நலமான சமூகம் என்று கொள்ளலாம். தற்போதைய சமூகத்தின் உருவாக்கத்திற்கு முன்பு சிறந்த பங்களிப்பை அதிகமாக வழங்கியோர் இக்கால முதியோர் என்பதை யாரும் என்றும் மறந்து விடமுடியாது. அவர்களது அனுபவங்கள் இக்கால சிக்கல்களை கூட எளிதாக முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் வாய்ந்தவை. அத்தகைய மூத்தோரின் (முதியோரின்) நலனை காக்கும் காப்பகம் ஒன்றை சிலு என்ற இடத்தில் சுமார் பதினொரு மணியளவில் பார்வையிட்டோம்.

ஒரு வீட்டில் இருவர் தங்குமளவு தனித்தனி வீடுகள் அமைந்த முதியோர் காப்பகம் மிகவும் சுத்தமாக, சிறப்பாக அமைந்திருந்தது. எல்லா அடிப்படை வசதிகளுடன் அறைகள் இருந்தன. வீடுகளில் சமையல் செய்து கொள்ளவும் சமயலறை இருந்தது. உணவு பரிமாறப்படும் பொதுவான உணவு அறையிலும் அவர்கள் உண்ணலாம். வெளியே காலாற நடந்து உலா வரவும், எளிய உடற்பயிற்சிகள் செய்யவும் சிறந்த வசதிகள் அங்கிருந்தன. குழந்தைகள் இல்லாத 124 முதியோர் அங்கு வாழ்ந்து வருவதாக சிலர் தெரிவித்தனர். இந்த வீடுகளில் வரவேற்பறை, இரண்டு படுக்கையறைகள், அவ்வறைக்கு அருகில் அவரவர் தனிப்பட்ட பொருட்களை வைத்து கொள்ளுவதற்கு போதுமான இடவசதி, சமயலறை, கழிவறை போன்றவை இருந்தன.

தங்களுக்கு யாருமில்லை என்று இங்கு வந்துள்ள முதியோர் சிலர், தற்போது மணமுடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். நடுவண் அரசின் அதிக நிதியுதவியிலும், மாநில அரசின் பங்களிப்பிலும் இந்த முதியோர் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நோய் வந்தால் எல்லா மருத்துவ வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த முதியோர் காப்பகத்தில் வாழ்கின்ற முதியோருடைய அதிகபட்ச வயது 80. குறைந்தபட்ட வயது 27. குறைந்தபட்ச வயதை கேட்டவுடன் அவர் இளைஞர் அல்லவா! என்று எண்ணலாம். ஆனால், அறிவு வளர்ச்சி குன்றி, சமூகத்தில் அனைவரோடு வாழ முடியாத நிலையிலுள்ள ஒருவர் தான் அவர். மூத்தோருக்கு மதிப்பளிக்கும் ஞானத்தில் மூப்பு பெற்றிருக்கும் சீன சமூகத்தை இந்த முதியோர் காப்பகம் நினைவூட்டியது.

பார்லி மது தயாரிப்பு நிலையம்

சுமார் பதினொரு முப்பது மணியளவில் சிங்குவா பார்லி மது தயாரிப்பு நிலையம் சென்று பார்வையிட்டோம். உள்ளூர் மக்களின் வேளாண்மையை பெருக்கி, அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நோக்கில் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இந்த சிங்குவா பார்லி மது தயாரிப்பு நிலையம். உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பார்லி தானியமாக வாங்கப்பட்டு, பார்லி மது இங்கு தயரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு அரை கிலோ பார்லி 50 சீனக் காசுகள் என வாங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு யுவான் எண்பது சீன காசுகள் என்பதாய் அரை கிலோ பார்லி உயர்ந்துள்ளது.

தற்போது சுமார் நான்காயிரம் விவசாய குடும்பங்கள் இந்த பார்லி மது தயாரிப்பு நிலையத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பார்லி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்ற இந்த மது தயாரிப்பு நிறுவனம், விவசாயிகள் அறுவடை செய்யும் தானியங்களை வாங்கிக் கொள்கிறது. 20 யுவான் முதல் 800 யுவான் வரை விற்பனையாகும் பார்லி மது வகைகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. பார்லி தானியத்தை சுத்தம் செய்தல், வேகவைத்தல், பின்னர் மதுவாகும் கலவையை ஊற்றி ஊறவைத்தல், முற்றிலும் ஊறிய பார்லியின் சாற்றை பிளிந்து எடுத்தல், பார்லி கழிவை கால்நடை தீவனங்கள் செய்ய பயன்படுத்தல், பார்லி சாற்றை முறைவழி செய்து, பீர் மற்றும் மதுவாக புட்டிகளில் அடைப்பது போன்ற அனைத்து நிலைகளையும் நேரில் பார்வையிட்டோம். பெரும்பான்மை வேலைகளை மனித உழைப்பால் செய்கின்ற வகையில் இந்த மது தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

அடுத்தாக, பிற்பகல் ஒன்று நாற்பத்தி ஐந்து மணியளவில் தியன்தி பசுமை பார்லி பீர் நிறுவனத்தை சென்று பார்வையிட்டோம். அனைத்துமே இயந்திரமயமாக்கப்பட்டிருந்த நவீனமான இந்த மது தாயரிப்பு நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இது லாசா நகர பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி மாவட்டத்தில் உள்ளது. 2009-2010 ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய தொழில்நுட்ப கட்டுமானம் இந்த தொழிற்சாலை தான். சீனாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பார்லியை கொள்வனவு செய்யும் இந்த தொழிற்சாலை, வெளிநாடுகளிலும் பார்லி மதுவை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

சுற்றுலா ஆணையக அலுவலகம்

தியன்தி பசுமை பார்லி பீர் மது தயாரிப்பு நிலையத்தை பார்வையிடுவதற்கு முன்பாக, ஏறக்குறைய பன்னிரெண்டு நாற்பத்தி ஐந்து மணியளவில் சுற்றுலா ஆணையக வளர்ச்சி அலுவலர் லியாவ் சின் என்பவரை சந்தித்தோம். திபெத் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை அவர் விவரித்தார். இவ்வாண்டின் முற்பாதியில் திபெத் சுற்றுலா அதிக வளாச்சி பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டர். திபெத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கான காலம் இவ்வாண்டு ஒரு திங்கள் முன்னதாக வந்திருப்பதும், திபெத்தில் காணப்படும் சிறந்த நீல வானமும், நுகர்வு ஆற்றல் அதிகரித்திருப்பதும் இதற்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. ஜனவரி திங்கள் முதல் இதுவரை 7.5 விழுக்காடு நுகர்வு அதிகரிந்துள்ளது.

மேலும், சுற்றுலா விதி பரப்புரைகளை உலகளவில் எடுத்து செல்ல நடைபெறும் பணிகளை அவர் விளக்கினார். சுற்றுலாவை வளர்கின்ற பல்வேறு தலைமை பீடங்கள், உணவு விடுதிகளில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகின்றன. திபெத் தன்னாட்சி பிரதேச கட்சிக் குழுவின் செயலாளர் சாங் ஜின் லின் சுற்றுலா துறை வளாச்சியே பொளாதார வளர்ச்சிக்கு அடிப்படை எனக் கூறியிருக்கிறார். அதன்படி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுலா மூலம் கிடைக்கின்ற வருவாய் விவசாயிகளுக்கும், ஆயர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

திபெத் சுற்றுலாவில் காணப்படும் இன்னல்களையும் லியாவ் சின் பட்டியலிட்டர். போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை நீக்குவதற்கு மேற்கு பிரதேச வளாச்சி திட்டப்பணியில் போக்குவரத்து வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் 69 விமான நெறிகள் திபெத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு எழுபது விமானங்கள் திபெத் வந்து செல்கின்றன. நாளுக்கு ஆறு இருப்பபுபாதை நெறிகள் தொடர்ந்து இயங்கிவருகின்றன. தற்போது திபெத்திற்கு வரும் பயணிகளும் அதிகரிப்தால் உபசரிக்கும் திறன் குறைவாக உள்ளதை உயர்த்தவது அறைகூவலாக இருப்பதை லியாவ் சின் ஏற்றுக் கொண்டார்.

பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில திபெத் சுற்றுலா துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. பனினெண்டாயிரம் குடும்பங்கள் சுற்றுலா பயணிகளை உபசரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முந்நூற்று பதினைந்து குடும்பங்கள் நட்சத்திர உபசரிப்பு குடும்பங்களாக உரிமம் பெற்றுள்ளன. மொத்தம் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சுற்றுலா துறையை வளர்க்கும்போது மாசுபாடுகள் ஏற்படாதவாறு, தூய்மையான, பசுமையான சுற்றுலாவை வளர்க்கும் போக்கினையும் அவர் விவரித்தார்.

சிரா பௌத்த மடம்

மதிய உணவுக்கு பின்னர், மூன்று முப்பது மணிக்கு லாசாவின் வட பகுதியிலுள்ள சிரா பௌத்த மடத்தை பார்வையிட்டோம். லாசாவில் டியிபுங் பௌத்த மடம், கன்டன் பௌத்த மடம், சிரா பௌத்த மடம் என மிகவும் புகழ்பெற்ற மூன்று பௌத்த மடங்கள் உள்ளன. சீரா பௌத்த மடம் ,திபெத் பௌத்த மத பிரிவுகளில் ஒன்றான கலுக்பா அல்லது மஞ்சள் தொப்பி பிரிவினருடையது. இந்த பிரிவு சொங்காப்பா என்பவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய சீடர் ஜாம்சென் சோஜே மிங் வம்ச காலத்தில் 1419 ஆண்டு இந்த பௌத்த மடத்தை கட்டினார். சிரா என்றால் காட்டு ரோஜா என்ற பொருள்படுகிறது. இந்த பௌத்த மடம் கட்டப்பட்டபோது, அதற்கு பின்னாலுள்ள மலையில் காட்டு ரோஜாக்கள் பூத்து குலுங்கியதால் இந்த பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

சிரா பௌத்த மடம் ஒரு இலட்சத்து பதினான்காயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஆறு சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது. சொசென் அரங்கு, ஸஹாசாங் எனப்படும் பௌத்த மத கல்லூரி மற்றும் காம்சுன் எனப்படும் துறவிகள் தங்குமிடம் ஆகியவை மிக முக்கிய கட்டிடங்களாகும். தங்கத்தூளால் புனித நூல்கள், கலை நுட்பங்களுடன் கூடிய சிலைகள், அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் அங்கே காணப்படுகின்றன.

பௌத்த துறவியர் கல்லூரி

பௌத்த துறவியராக மாற விரும்புகின்ற இளைஞர்கள் சிரா பெத்த மடத்திலுள்ள கல்லூரியில் பௌத்த மத கல்வி பயின்று வருகின்றனர். பௌத்த மதத்தில் துறவியர் படிப்பை முடிக்க மொத்தம் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த பௌத்த மடத்தில் 530 துறவிகள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு துறவியாக படித்து தனது 24வது ஆண்டு கடைசி தேர்வை சந்திக்க இருக்கும் புபூ சி ரென் துறவிகள் எங்களுக்கு சிரா பெளத்த மடத்தை சுற்றிக்காட்டி, கோயிலை பற்றிய எல்லா விளக்கங்களையும் வழங்கினார்கள்.

சிரா பௌத்த மட கோயில்

இங்குள்ள கோயில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது, கோயிலில் செப்பனிடும் பணிகள் நடைபெறுவதால், எல்லா தலைசிறந்த வண்ண சுவர் ஓவியங்களை எங்களால் பார்க்க முடியவில்லை. நான்கு கோடியே அறுபது இலட்சம் யுவான் செலவில் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருவதாக புபூ சி ரென் துறவிகள் எங்களுக்கு விளக்கினார். பல்வண்ண சுவர் ஓவியங்கள் கண்களை பறித்தன. கௌதம புத்தர் சிலை, அவரது எட்டு சீடர்களின் சிலை, ஐந்தாவது தலாய் லாமா தீட்டிய தாங்கா ஓவியம் ஆகியவற்றை பார்க்க முடிந்தது. கேயிலின் பல இடங்களில் அணையா விளக்குகள் பல ஏற்றப்பட்டிருந்தன. தீமையை விரட்டுகின்ற, அச்சுறுத்தும் தோற்றத்தில் பல சிலைகள் காணப்படுகின்றன.

தெய்வத்தின் தலையின் மேல் குதிரை தலையுடைய சிலை ஒன்று, இந்த கோயிலில் காணப்படும் தனிசிறப்புமிக்க சிலையாக கருதப்படுகிறது. இதனை சிறப்பாக வழிபட்டு, நமது தலையை அச்சிலையின் பாதத்தில் முட்டிக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ஆயிரத்துக்கு மேலான பெத்த துறவிகளின் சிலைகளும், பல்வேறு மறைநூல் விளக்கங்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் கைகளுடைய சாக்கியமுனி புத்தரின சிலை பிரமாண்டமான காட்சியாக உள்ளது. செப்பனிடும் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகள் பார்வைக்கு தடுக்கப்பட்டிருந்தாலும், அக்கோயில் மற்றும் பௌத்த மடம் பற்றி, புபூ சி ரென் துறவிகள் மிகவும் விளக்கமாக எங்களுக்கு தெரிவித்தார்.

துறவிகளின் பௌத்த மறைநூல் கல்வி

கோயிலைவிட்டு வெளியேறியவுடன், மரங்கள் நெருங்கி வளர்ந்துள்ள வளாகம் ஒன்றில், ஐம்பதுக்கு மேலான இளம் பௌத்த துறவியர் மறைநூல்களை பற்றி விவாதம் நடத்தி கொண்டிருந்தனர். ஒருவர் நிலத்தில் உட்கார்ந்திருக்க, இன்னொருவர் நின்று கொண்டு கேள்விகளை தெடுக்கிறார். தரையில் உட்கார்ந்து இருப்பவர் அதற்கு பதில்களை அளிக்கிறர். காலையில் நடத்தப்பட்ட மறைநூல் தத்துவங்களை அவர்கள் கேள்வி பதிலாக விவாதித்து கற்றுக் கொள்வதாக எங்களுக்கு கூறப்பட்டது. கைத்தட்டிக் கொண்டு நிற்பவர் கேள்வி கேட்க, தரையில் அமர்ந்திருக்கும் இளம் துறவியர் பதில் சொல்லும் காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து இரசித்துக் கொண்டே இருந்தனர். அந்த விவாதம் முடிந்த பிறகு இரவு ஏழு முதல் ஒன்பது மணிவரை மறைநூல் தத்துவங்களை அந்த இளம் துறவியர் வாசிப்பார்களாம். ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதகின்ற இவர்கள் மொத்த இருபத்தி நான்கு ஆண்டுகள் படித்து துறவியர் பட்டம் பெறுவர். இங்குள்ள பௌத்த துறவியா திருமணம் செய்வதில்லை.

ஜோகாங் கோயில்

பிற்பகல் நான்கு நாற்பத்தி ஐந்து மணிக்கு, லாசாவில் புனித தலமாக கருதப்படும் ஜோகாங் கோயிலுக்கு வந்தோம். போத்தலா மாளிகை பக்கத்தில மக்கள் பலர் முகம் குப்புற விழுந்து வணங்குவது, ஜோகாங் கோயிலுக்கு வருவதற்கான ஆயத்தம் என்று அங்கு எங்களுக்கு விளக்கப்பட்டது. திபெத்தின் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆண்ட முதல் மன்னரான சொங்சென் காம்போ, நேபாள மன்னரின சகோதரியான இளவரசி ஃபாரிகுடியை முதலாவதாக, 630 களில் மணந்தார். பின்னர், தாங் வம்சத்து இளவரசி வென் சென்னை 641யில் மணந்தார். இரு மனைவியரும் திபெத்தில பௌத்த மதத்தை பரப்புவதில் முக்கிய பங்காற்றினர். அவர்கள் கொண்டு வந்த புத்த சிலைகளை வைக்க ஜோகாங் கோயில் கட்டப்பட்டது.

முதலாவதாக நடைபெற்ற கட்டுமானங்களில் எட்டு திரு அறைகள் மட்டுமே இருந்தன. பின்னர், யுவான், மிங், சிங் வம்ச காலங்களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் பணிகளால் தற்போதைய ஜோகாங் கோயில் உருவாகியது. போத்தலா மாளிகையின் நிர்வாக பணியகமே இந்த கோயிலையும் நிர்வகித்து வருகிறது.

கௌதம புத்தரின் எட்டு. பதினைந்து, இருபத்தி ஐந்து வயது தோற்றங்களில் வடிக்கப்பட்ட சிலைகள் கலப்பு தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. தலைவரான புத்தரை எப்போதும் பார்ப்பது எப்படி என்று சீடர்கள் கெளதம புத்தரை கேட்டபோது, எனது சிலையை பார்ப்பது என்னை பார்ப்பதற்கு சமம் என்று புத்தர் பதிலளித்தார். எனவே கௌதம புத்தரின் பன்முக தோற்றங்களுடைய சிலைகள் இங்க காணப்படுகின்றன. புத்தர், அவரை, அவரது கையால் வடித்த இரண்டு சிலைகள் லாசாவிலுள்ளதாக விளக்கப்பட்டது. இந்த கோயிலின் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மட்டுமே அறுநூறு ஆண்டுகால பழமையுடைது. புத்தரின் 12 வயது சிலை இங்க காணப்படும் தனிசிறப்பு மிக்க சிலையாக கருதப்படுகிறது.

திபெத் வசந்த விழாவின்போது, திபெத் நாள்காட்டியின்படி எட்டாம் திங்கள் இருபத்தி ஐந்தாம் நாளின்போதும் துறவிகள் வழிபாடு இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. நாங்கள் ஜோகாங் கோயிலை சுற்றி பார்த்த நாள் ஐந்தாம் பான்சாங் இறந்த நினைவு நாளாக இருந்ததால், அவருக்கான நினைவு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. துறவிகள் பலர் வரிசையாக அமர்ந்து மந்திரங்கள் ஓத, இறைவேண்டல் பல மணிநேரங்கள் நடைபெற்றன.

முடிவாக

அதிக இடங்களை, வரலாற்று முக்கியத்துவம் வாய்நத சிறப்பு இடங்களை ஒரே நாளில் சந்தித்துவிட்ட மனநிறைவு மாலையில் எம்முள் எழுந்தது. ஜோகாங் கோயிலின் முன்னாலும், சுற்றிலும் உள்ள பர்கோர் வீதியை அடுத்த நாள் சுற்றி பார்த்து பொருட்கள் வாங்க வாய்ப்பு உள்ளதை அறிந்த நாங்கள் இரவு உணவுக்கு பின்னர் ஓய்வெடுக்க சென்றோம்.

லாசாவிலிருந்து,

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040