• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒன்பதாம் நாள்
  2011-08-19 16:20:06  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

ஆகஸ்ட் ஒன்பது. திபெத்திய தலைவர்கள் சிலரை சந்தித்து, எமது திபெத் பணிப்பயணம் பற்றி விவரிக்கும் நாள். அதிகாலையில் எழுந்து, தமிழில் நான் வாழங்க போகும் அனுபவ பகிர்வை, சரி படுத்தி அதனை பவர் பாயிண்ட கோப்பாக திரையில் வெளியிட்டு விளக்கும் முறையில் மாற்றிக் கொண்டேன். காலை உணவுக்கு பின்னர், எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு, புறப்பட்டோம்.

லாசா தங்குவிடுதி

லாசா தங்குவிடுதியில் முற்பகல் பதினொரு மணிக்கு, திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் தலைவர்கள் சிலரோடு, திபெத் பணிப்பயணம் பற்றிய பகிர்வு இருந்தது. எம்மை முன்பே தயார் செய்து கொள்ளும் பொருட்டு, தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசியும், நானும் முற்பகல் பத்து மணிக்கெல்லாம் லாசா தங்குவிடுதியை அடைந்தோம். லாசா தங்குவிடுதி சிறந்த விடுதியாக இருந்தது. அதிக நேரம் இருந்ததால் "இன்றைய திபெத்" நிகழ்ச்சி ஒன்றிற்கு முன்கூட்டியே ஒலிபதிவு செய்துவிட்டு திபெத் தன்னாட்சி பிரதேச பிரமுகர்களின் வருகைகாக காத்திருந்தோம்.

பணிப்பயண அனுபவ பகிர்வு

சரியாக பதினொரு மணிக்கு சீன வானொலி செய்தியாளர்களின் திபெத் பணிப்பயண அனுபவ பகிர்வு தொடங்கியது. இக்கூட்டம், திபெத் தன்னாட்சி பிரதேச கட்சி பரப்புரை பிரிவின் துணை அமைச்சர் வாங் தலைமையில் நடைபெற்றது. திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் சில முக்கிய பிரமுகர்கள், திபெத் வானொலி நிலைய இயக்குனர் மற்றும் தலைவர்கள் உள்பட பலர் இதில் பங்கேற்றனர். சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குனர் ட்சாங் ஃபுஷெங் எமது திபெத் பணிப்பயணத்தை அறிமுகம் செய்தார். .

பணிப்பயண ஒளிப்படம்

அதன் பின்னர், திபெத்தின் கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, வடக்கு பகுதி இடங்களுக்கு சென்று திரும்பிய சீன வானொலி நிலைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்தியாளர்களின் பணிகளை ஒளிப்படமாக விளக்கும் படம் திரையிடப்பட்டது. ஏறக்குறைய பன்னிரெண்டு நிமிடங்கள் திரையிடப்பட்ட ஒளிப்படத்தின் முடிவில் அனைவரும் கரவோலி எழுப்பி பாராட்டினர்.

வெளிநாட்டவர் அனுபவ பகிர்வு

வெளிநாட்டு செய்தியாளரின் பணிப்பயண அனுபவ பகிர்வு தொடர்ந்தது. முதலாவதாக, ஆங்கில மொழிப் பிரிவின் நிபுணரான திரு.டர்கி, திபெத்தில் வட பகுதியில் பெற்ற அனுபவத்தை விளக்கினார். அவரது உரையை அவரது உடன் பணியாளர் சீன மொழியில் மொழி பெயர்த்தார். பின்னர், ஜெர்மனி மொழி நிபுணர் திரு.லூக்காஸ் மேற்கு பகுதியில் பெற்ற தனது அனுபவத்தை சீன மொழியில், மிக அழகாக வழங்கி, பாராட்டு பெற்றார். பின்னர், இத்தாலிய மொழிப்பிரிவு நிபுணர் கபிரியேலா அம்மையார் கிழக்கு பகுதியில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள, அவரது உடன் பணியாளர் அவரது உரையை சீன மொழியில் மொழி பெயர்த்தார்.

உலகின் கூரையில் தமிழ்

ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பணிப்பயண அனுபவ பகிர்வை தமிழில் வழங்க என்னிடம் கோரியிருந்தனர். திபெத்தில் நேரடியாக கண்ட அனைத்தையும் ரெத்தின சருக்கமாக வடித்து, தமிழில் உரை வழங்கினேன். அதனை தமிழ்ப்பிரிவின் தலைவர் தி.கலையரசி சீன மொழியில் மொழிபெயர்த்தார். திரையில், தமிழிலும், சீன மொழியிலும் பவர் பாயிண்ட கோப்பு ஓடிக் கொண்டிருக்க, வாசிக்கப்பட்ட உரையின் அம்சங்களை அனைவரும் எளிதாக புரிந்து கொண்டனர். உலகின் கூரையாக கருதப்படும் திபெத்தில் தமிழில் உரை வழங்கியதில் பெருமிதம் கொண்டேன்.

வெளிநாட்டு செய்தியாளருக்கு மதிப்பளிப்பு

அடுத்தாக, திபெத் தன்னாட்சி பிரதேச கட்சி பரப்புரை பிரிவின் துணை அமைச்சர் வாங் தலைமையுரை ஆற்றினார். திபெத்தின் பல இடங்களுக்கு சென்று, நேரடி அனுபவங்களை சிறப்பாக வெளிப்படுத்தியதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அத்தகைய அனுபவங்களை பெற இன்னல்களையும் பாராது, முயற்சிகளை பெற்ற செய்தியாளர்களை மிகவும் நேசிப்பதாக அவர் கூறினார். அவரது தலைமை உரைக்கு பின்னர், வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் திபெத்திய பாணியில் கத்தா பட்டுத்துணியை மலையாக அணிவித்து, நினைவுப் பரிசுகளையும் துணை அமைச்சர் வாங் வழங்கினார். நாடுகளுக்கிடை நட்புறவை வளர்க்க செய்தியாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, திபெத்திற்கு மீண்டும் வருகை தந்து அதன் வளர்ச்சியை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

விருந்து

திபெத்தில் பணிப்பயணம் என்ற பதாகையோடு, சீன வானொலி செய்தியாளர்கள் அனைவரும், துணை அமைச்சர் வாங்குடன் நிழற்படம் எடுத்துக் கொண்டோம். பின்னர், அவர்கள் எங்களுக்கு விருந்து வழங்கி உபசரித்தார்கள். இனிய பல்சுவை உணவுகளை சுவைத்துக் கொண்டே, ஒவ்வொரு மேசைக்கும் சென்று "சஸிதெழ" என்று திபெத்திய மொழியில் மங்களம் தெரிவித்து வாழ்த்தி மகிழ்ந்தோம். எங்கள் அனைவரிடமும் தனித்தனியாக உரையாடி, மது கோப்பையை தட்டி வாழ்த்தினார் துணை அமைச்சர் வாங்.

பாகோர் வீதி

பிற்பகல் மூன்று மணியளவில், பர்கோர் வீதியை அடைந்தோம். பர்கோர் வீதி ஜோகாங் கோயிலை சுற்றியுள்ள மிகவும் பழமையான வீதியாகும். திபெத்திய மன்னர் சொங்சென் கோம்போ, ஜோகாங் கோயிலை கட்டியவுடன் அது புனித தலமாகி பலரும் அங்கு புனிதப்பயணம் மேற்கொள்ள தொடங்கினர். அதன் விளைவாக தான் இந்த பர்கோர் வீதி உருவானது. இன்றும், இறைவேண்டல் சக்கரங்களை சுழற்றிக் கொண்டே ஜோகாங் கோயிலை சுற்றிவரும் பக்தர்கள் பலரை இந்த வீதியில் பார்க்க முடியும்.

சுற்றுலா பயணிகளுக்கு, லாசாவின் தொடக்க நிலைமையை வெளிக்காட்டு வீதியாக இது திகழ்க்கிறது. இந்த வீதி மிகவும் விரிவாக இல்லாமல் இருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் இதில் உலா வருகின்றனர். இந்த வீதியின் இரு பக்கங்களிலும், பல்லாயிரக்கணக்கான கடைகள் காணப்படுகின்றன. கையணிகள், காதணிகள், திபெத்திய பாணி கத்திகள், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், துணிகள், பௌத்த மத பொருட்கள் அனைத்தையும் இந்த வீதியிலுள்ள கடைகளில் பெற்றுக் கொள்ள முடியும். தாங்க ஓவியங்கள் கூட இங்கே விற்கப்படுகின்றன. பர்கோர் வீதி முழுவதும் சுற்றி வந்தோம். வழியில் பிடித்த பல்வகை பொருட்களையும், நினைவுப் பொருட்களையும் பேரம்பேசி வாங்கினோம். உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மிகவும் மலிவாக இருந்தன. இந்தியா, நேபாளம் நாடுகளிலுள்ள பொருட்களும் இந்த வீதியில் விற்கப்படுகின்றன.

பாரம்பரிய திபெத்திய தேனீர் கடை

மாலை ஆறு முப்பது மணிவரை பாகோர் வீதியை சுற்றிவந்த நாங்கள், சற்று இளைப்பாற, பாரம்பரிய திபெத்திய தேனீர் கடை ஒன்றில் நுழைந்தோம். ஒரு தெர்மாஸ் குடுவை நிறைய பால் கலந்த தேனீரை சூடாக வழங்கினார்கள். அனைவரும் ஒரு குவளை குடித்து போக இன்னும் ஒரு குவளை குடிக்கும் அளவு தேனீர் அதில் இருந்தது. திபெத்தில் ஒரு குவளை தேனீர் என்ற அளவு இல்லை. இவ்வாறு பல குவளை தேனீரை மொத்தமாக வாங்கி குடிக்கும் முறை தான் உள்ளதாம். எனவே, தேனீரை அளவோடு தான் குடிக்க வேண்டும் என்றில்லை.

முடிவாக

பொழுது சாய்ந்திருந்தது. அங்கிருந்து தங்குவிடுதிக்கு வாடகை சீருந்தில் செல்லலாம் என்றிருந்த எங்களுக்கு, எல்லா வாடகை சீருந்துகளும் ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்ததை பார்த்ததும், பொது பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவித்து பார்க்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. நாங்கள் தங்கியிருக்கும் தங்குவிடுதி பாதையில் செல்லும் பேருந்தில் ஏறினோம். ஒரு யுவான் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டோம். ஏறக்குறைய பெய்ஜிங்கிலுள்ள பேருந்துகள் கொண்டிருக்கும் அனைத்து வசதிகளும் அந்த பேருந்தில் இருந்தது. இரவு உணவுக்கு பின்னர் படுக்கைக்கு சென்றோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040