தொடக்கமாக
திபெத்தை சுற்றிவந்த நினைவுகளோ புறப்படும் நாள் இந்நாள். அதிகாலையில் எழுந்து, பெட்டியில் அனைத்தையும் அடுக்கி வைத்துவிட்டு காலை உணவு உண்டோம். பின்னர் எட்டு மணியளவில் லாசா கொங்கா பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கி சீருந்துகளில் வாகன அணியாக புறப்பட்டோம். காலை மழை பெய்து கொண்டிருந்தது. மழை தூறலில் சிறந்த இயற்கைக்காட்சிகளை இரசித்தவாறு பயணித்தோம்.
விமானம் தாமதம்
பத்து நாட்கள் கண்குளிர பார்த்த இயற்கைக் காட்சிகளையும், இயற்கை மணம் மாறா இடங்களையும் விட்டு செல்ல மனம் வரவில்லை தான். ஆனால்...... என்ன செய்வது? எங்களையும் விரைவாக அனுப்பிவிட திபெத்திற்கு எண்ணமில்லை போலும். அன்று பெய்த மழை நாங்கள் பிரிந்து செல்வதற்கு திபெத் வடித்த கண்ணீர் போல தோன்றியது. மேலும், நாங்கள் அதிக நேரம் திபெத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே முற்பகல் பதினொரு மணிக்கு என்றிருந்த விமானம் தாமதமாகியது போல் தோன்றியது. பிற்பகல் ஒன்று முப்பது மணியளவில் விமானம் புறப்பட்டது. இனிய நாட்களை, வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தந்த திபெத்திற்கு பிரியாவிடை தெரிவித்து பயணம் தொடர்ந்தோம்.
மீண்டும் சென்துவில்
சரியாக இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிச்சுவானின் தலைநகர் சென்து சுவாங்லியு பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்து இறங்கினோம். அங்குள்ள சுங்கவரியற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் சில பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் விமானம் ஏறினோம். மாலை சரியாக ஆறு மணிக்கு வானில் எழுந்து பறந்த விமானம் பெய்ஜிங் நோக்கி பயணமானது.
பெய்ஜிங்கில்
இரவு எட்டு மணிக்கு பெய்ஜிங் பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தோம். எமது பொதிகளை பெற்றுவிட்டு சீன வானொலி வாகனங்களில் விமான நிலையத்திலிருந்து ஒன்பது மணியளவில் புறப்பட்டோம்.
முடிவாக
இரவு பத்து மணிக்கு சீன வானொலி நிலையத்தை அடைந்தோம். எதையோ இழந்துவிட்ட உணர்வுடன், கால்கள் வீட்டை நோக்கி நடைபோட்டன. அப்போதும், திபெத் காட்சிகள் தான் எண்ணங்களில் நிறைந்திருந்தன.