• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மகிழ்ச்சி தரக் கூடிய 4 மணி பள்ளி
  2011-10-28 14:00:02  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, நகரத்தில் வேலை செய்யும் விவசாயிகளின் குழந்தைகள் சீனச் சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதற்காக, ஜியாங்சூ மாநிலத்தின் ச்சென்ஜியாங் நகரத்தின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டி, இளமைக்குக் கவனம்—ச்சென்ஜியாங் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டி விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அன்பு காட்டும் தன்னார்வச் சேவை என்ற நடவடிக்கையை செயல்படுத்துகிறது. பெற்றோர்களோடு ச்சென்ஜியாங்கின் நகரப் பகுதிக்கு வந்த குழந்தைகளும் கிராமப்புறத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளும் ஆக 22 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளிடையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மேலதிக விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் அன்பையும் கவனத்தையும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

செப்டம்பர் திங்கள் தொடக்கத்தில் கல்விக்காலம் துவங்கிய பின், பெற்றோரான விவசாயத் தொழிலாளர்கள் பலர் கவலைப்படத் துவங்கினர். ஏனென்றால், நாள்தோறும் மாலை 4 மணிக்கு வகுப்பு முடிந்த பின்னும், குழந்தைகளைப் பராமரிக்கும் யாரும் இல்லாத நிலை. குழந்தைகளைப் பராமரிப்பதில் இன்னல் மிகுந்த குடும்பங்களுக்கு உதவியளிக்கும் வகையில், மேற்கூடிய தன்னார்வச் சேவை மூலம், 4 மணி பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியைச் சார்ந்த இப்பள்ளி, ச்சென்ஜியாங் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. குடியிருப்பு நகரவாசிக் குழுவும் தன்னார்வத் தொண்டர் சேவை நிலையமும் பள்ளியின் அன்றாட இயக்கத்துக்குப் பொறுப்பேற்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள், துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் இளம் ஆசிரியர்கள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டர்களை அவை ஒட்டுமொத்தமாக ஏற்பாடு செய்கின்றன. விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளில் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு முடிந்ததற்குப் பிந்தைய பராமரிப்பு, கல்வி உதவி, பொழுது போக்கு ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

ச்சென்ஜியாங் நகரில் இந்த குழந்தைகள் வகுப்புக்குப் புறம்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 மணி பள்ளி ஒன்றிற்கு எமது செய்தியாளர் சென்றிருந்தார்.

மாலை 4 மணிக்கு, ச்சென்ஜியாங் நகரத்தின் ச்சோங்ஹுவா வீதி துவக்கப் பள்ளியின் வாசலில், சிவப்பு தொப்பி அணிந்த தன்னார்வத் தொண்டர் ஒருவர் காத்திருக்கிறார். ஆசிரியரிடமிருந்து குழந்தைகளை தம்மோடு அழைத்துச் செல்கிறார்.

ச்சோங்ஹுவா வீதி துவக்கப் பள்ளியிலிருந்து 10 நிமிடம் நடந்து 4 மணி பள்ளியை அடையலாம். இங்குள்ள வகுப்பறை சிறியதாக இருந்தாலும், குழந்தைகள் பலரைப் பொறுத்தவரை, பள்ளி படிப்பு முடிந்ததற்குப் பிந்தைய மகிழ்ச்சி தரக் கூடிய தேவலோகமாக இருக்கிறது. இங்கே தன்னார்வத் தொண்டர்களின் துணையுடன், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்து, நூல்களை வாசித்து, விளையாடவும் செய்கின்றனர்.
மாணவி ஒருவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது—
"இங்கே விதவிதமான செயல்பாடுகளில் கலந்து கொள்ளலாம். மேலும், கணினி, நூல்கள், சதுரங்கம் முதலியவையும் இருக்கின்றன. இவையனைத்தையும் நாங்கள் நன்றாக அனுபவிக்கலாம்" என்று அவர் கூறினார்.
இந்த 4 மணி பள்ளியில், வெளிப்புற வகுப்பானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் நிகழ்ச்சியாகும். தன்னார்வத் தொண்டர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி, புதிருக்கு விடை காண்கின்றனர். அவர்கள் வெகுவிரைவில் நல்ல நண்பர்களாகின்றனர்.

2008ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல், ச்சென்ஜியாங் நகரத்தின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டி ஏற்பாடு செய்து நடத்திய 4 மணி பள்ளி 14 ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்பு நகரவாசிக் குழு இலவசமாக இடத்தை வழங்குகிறது. உள்ளூர் உயர் கல்வி நிலையங்களிலிருந்து வந்த மாணவர்கள், துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற முதியோர் ஆகியோர் தன்னார்வத் தொண்டர்களாக, விடுமுறை அல்லது ஓய்வு நேரத்தைக் கைவிட்டு, குழந்தைகளுக்கு பாடத்திட்டம் சாரா பல்வகை வேடிக்கையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றனர். வெளியூரிலிருந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்த பின் பராமரிப்பு பெற முடியாது என்ற வெற்றிட நிலை இத்தகைய கட்டுக்கோப்பான ஏற்பாட்டின் மூலம் நிரப்பப்படுவதோடு, பெற்றோர்களின் கவலையும் நீக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு, பெற்றோர்களான தொழிலாளர்கள் பலர் பணி முடித்து, 4 மணி பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர்.
"4 மணி பள்ளி குழந்தைகளைப் பொறுத்தவரை வேடிக்கையானது. பாடத்துக்குப் புறம்பான ஆர்வங்களை வளர்ப்பதில் இது அவர்களுக்குத் துணைபுரியும்" என்றார் பெற்றோர்களில் ஒருவர்.
"இது நல்லது. முதலில் இப்பள்ளி இலவசமானது. இதர நிறுவனங்களில் சேர்ந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளியிலிருந்து இங்கே வந்து 2 மணி நேரம் தங்கியிருக்கலாம். பணியில் ஈடுபட வேண்டிய எங்களுக்கு பள்ளி முடித்து திரும்பும் குழந்தையைப் பராமரிக்க போதிய நேரம் இல்லை" என்று மற்றொருவர் கூறினார்.

ச்சென்ஜியாங்கிலுள்ள ஒவ்வொரு 4 மணி பள்ளியும், மாணவர்களைப் பதிவு செய்யும் முறையை நிறுவி, முறைமைமயமாக்க பள்ளியாக இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பெற்றோர்கள் குழந்தைகளை கொண்டு வரும் போதும், அழைத்து செல்லும் போதும் பெயர் பதிவு செய்ய வேண்டும்.
ச்சென்ஜியாங் நகரத்தின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டியின் துணைச் செயலாளர் வாங் வெய்ஹுவா எடுத்துக் கூறியதாவது—
"எமது 4 மணி பள்ளிகள் அனைத்தும் கண்டிப்பான பதிவு முறையை நிறுவியுள்ளன. பள்ளிக்கு வந்த ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் பெயரை பதிவு செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதும் யாரால் அழைத்துச் செல்லப்பட்டாலும் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

4 மணி பள்ளியின் வகுப்பறையில் மகிழ்ச்சியும் மலர்ந்த முகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த உயிர்த்துடிப்பான கட்டுப்பாட்டு முறையை மிகவும் விரும்புவதாக குழந்தைகள் தெரிவிக்கின்றனர். 2 மணி நேரம் விரைவில் ஓடிவிடுகிறது. தன்னார்வத் தொண்டர்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்த போது, பெற்றோரின் முகத்தில் புன்சிரிப்பு காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040