• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழு
  2011-10-28 13:59:36  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்பு என்ற குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழு 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ரத்த தானம் செய்வது பற்றிய பரப்புரை திரைப்படம் எடுப்பதற்காக தன்னார்வத் தொண்டர்கள் சிலர், செங்தூ நகரின் இளம் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த அன்பு என்ற பொது நல நாடகக் குழுவை உருவாக்கினர். பரப்புரை திரைப்படம் நல்ல பயன் பெற்றதால், திரைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்ற சிறப்புத் துறையினரும் பேரார்வம் கொண்டவர்களும் இந்நாடகக் குழுவில் சேர்ந்தனர். 2010ஆம் ஆண்டு இந்த பொது நல நாடகக் குழு, செங்தூ நகரிலுள்ள ஜின்ஜியாங் பிரதேசத்தின் அன்பு குடியிருப்பு பண்பாட்டு வளர்ச்சி மையமாக பதிவு செய்தது. லீயூ ஃபெய் அம்மையார், இம்மையத்தின் தலைவர். பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகளுக்காக, குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழுவை இம்மையம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

பொது நலச் சேவையில் லீயூ ஃபெய் அம்மையார் உற்சாகத்துடன் ஈடுபடுகிறார். 2006ஆம் ஆண்டு முதல், Qiong Lai மாவட்டத்தில் வாழும் சியௌ சின் எனும் ஒரு சிறுமிக்கு அவர் பண உதவி வழங்கத் துவங்கினார். பெற்றோரோடு வாழாத சியௌ சின், இசைத் துறையில் ஆர்வம் கொள்கிறார். ஆர்மோனியம், பியானோ போன்ற மின்னணு இசைக் கருவி ஒன்றை லீயூ ஃபெய் அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஓராண்டுக்குப் பின், சியௌ சின்னை லீயூ ஃபெய் சென்று பார்த்தார். சியௌ சின் மகிழ்ச்சியுடன் இவ்விசைக் கருவியில் லீயூ ஃபெய் அம்மையாருக்காக இசை ஒன்றை வாசித்தார். ஆனால், வழிகாட்டல் ஆசிரியர் இல்லாமல், சியௌ சின் இசைக் கருவியை இசைக்கும் முறை சரியாக இருக்கவில்லை. ஓராண்டு காலமாக அவர் தாமாகவே பயிற்சி செய்து வந்தார். பெற்றோரின்பணி காரணம் அவர்களை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு பொருட்களை மட்டும் வழங்கினால் போதாது. உண்மையாக அவர்களுக்கு உதவியளிக்க வேண்டுமாயின், மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் லீயூ ஃபெய் அறிந்து கொண்டார். அவர்களுக்கு என்ன தேவை என்று அவர் யோசிக்கத் தொடங்கினார்.

அப்போது, விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அன்பு காட்டுவது பற்றிய திரைப்படம் எடுக்க, சிச்சுவான் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் கமிட்டி ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இத்தகவலை அறிந்து கொண்ட லீயூ ஃபெய் மற்றும் இதர தன்னார்வத் தொண்டர்கள், இத்திரைப்படம் எடுக்க விண்ணப்பம் செய்து, அனுமதி பெற்றனர். இதற்கென, அன்பு என்ற பொது நல நாடகக் குழு, குழந்தை மகிழ்ச்சி குழுவை உருவாக்கி, மிகச் சிறந்த எதிர்காலம் என்ற பொது நலத் திரைப்படத்தை எடுக்கத் தொடங்கியது.

செங்தூ நகரத்தின் ஜியாகுவான் மாவட்டத்திலுள்ள யூபா கிராமம் இத்திரைப்படம் எடுக்கப்பட்ட இடமாகும். பெற்றோரின் கவனம் மற்றும் அன்பைப் பெற வேண்டிய குழந்தைகளின் ஆவல், அங்கே சென்றடைந்த லீயூ ஃபெய் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

மிகச் சிறந்த எதிர்காலம் என்ற திரைப்படத்தில், கழிவுப் பொருட்கள் திரட்டும் மன்னர் என அழைக்கப்பட்ட குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கதை, உண்மை வாழ்க்கை அனுபவக் கதையாகும். அவரது வயதிலான குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் சேரவில்லை. மற்ற குழந்தைகளுடன் நண்பர்களாக பழக விரும்பவில்லை. புட்டிகளைத் திரட்டி விற்பனை செய்து பணம் பெறுவது என்பது, அவரது ஒரே எண்ணமாகும். பணம் சம்பாதிக்கும் பொருட்டு, பெற்றோர் தன்னையும் சொந்த ஊரையும் விட்டுச் சென்றனர் என்று அவர் கருதுகிறார். பணம் இருந்தால் அனைத்தும் இருக்கும். பெற்றோர் வெளியூருக்குச் சென்று வேலை செய்ய வேண்டாம். தாம் பெற்றோர்களோடு வாழ முடியும் என்றும் அவர் எண்ணுகிறார். பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகள் பலர் இத்தகைய எண்ணம் கொள்கின்றனர் என்று லீயூ ஃபெய் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் கள ஆய்வில் அறிந்து கொண்டனர். லீயூ ஃபெய் கூறியதாவது—

"இந்த கிராமத்தில் ஆய்வு செய்த போது, 'உங்கள் லட்சியம் என்ன' என்று குழந்தைகளிடம் கேட்டோம். பணம் சம்பாதிப்பது என அவர்களில் 50 விழுக்காட்டினர் எங்களிடம் கூறினார். பிரச்சினைகள் அனைத்தும் பணத்தினால் ஏற்படுகின்றன. பணம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என அவர்கள் கருதுகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு அவர்களுடன் இணைந்து வாழும் குடும்பத்தினர் தேவை. அவர்களுக்கு சரியான சிந்தனையை வழங்கக் கூடியவர் தேவை" என்று லீயூ ஃபெய் கூறினார்.

பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகளுக்கு உதவியளிக்க மேலதிக மக்களை அணி திரட்டுவது என்பது, இத்திரைப்படம் எடுப்பதன் நோக்கமாகும். திரைப்படத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் இதன் மூலம் மனநிறைவு கொண்டனர். லீயூ ஃபெய் கூறியதாவது—

"மகிழ்ச்சி நாடகக் குழு என்ற திட்டப்பணி பல முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியத்தின் பண உதவிக்கு விண்ணப்பம் செய்துக் கொள்கின்றோம். பள்ளி அல்லது குடியிருப்புப் பகுதி ஒன்றில் இத்திட்டப்பணியை நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும் என விரும்புகின்றோம். பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்கு, பணம் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது என கருதுகின்றேன். ஒன்றிரண்டு முறை அன்பு காட்டுவதும் இப்பிரச்சினையை தீர்க்க உதவாது. சிறப்பு துறையினரின் பங்கேற்பு, முறைமையாக்கம், குறிப்பிட்ட காலத் திட்டப்பணி ஆகியவை தேவைப்படுகின்றன" என்று அவர் கூறினார். ஜியாகுவான் மாவட்டத்தின் யூபா கிராமத்தில் மேற்கொண்ட இத்திட்டப்பணி தவிர, சு போ, வென் ஜியாங், தா யூவான் ஆகிய 3 இடங்களிலும் குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழு தனித்தனியாக திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலதிக இடங்களுக்குச் சென்று பெற்றோரின் பணி காரணம் அவர்களோடு வாழாத குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை தர அன்பு என்ற பொது நல நாடகக் குழு திட்டமிட்டுள்ளது.

பொருள் சார் உதவி மட்டுமல்லாமல், இத்தகைய குழந்தைகளுக்கு அன்பையும் கவனத்தையும் வழங்க வேண்டும். அவர்கள் லட்சிய சிந்தனை, சீரான வாழ்வு இலக்கு மற்றும் மகிழ்ச்சியுடன் வளரச் செய்யவது என்பது, அன்பு என்ற பொது நல நாடகக் குழுவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களின் விருப்பமாகும். நேயர்கள் இதுவரை, குழந்தை மகிழ்ச்சி நாடகக் குழு பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், சீனத் தன்னார்வத் தொண்டர்கள் என்ற சிறப்பு நிகழ்ச்சியின் 6வது கட்டுரை நிறைவு பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040