தற்போது சீனாவில் 4 தேசிய நிலை மீவேக கணினி மையங்கள் உள்ளன. அவை முறையே சியேன் ச்சின், சென் ச்சென், சான் சா, ச்சி நான் ஆகிய 4 நகரங்களில் அமைந்துள்ளன. மேலும் பெய்ஜிங், ஷாங்காய், சென் ச்சென், ஹாங்சோ, வூ சி ஆகிய 5 நகரங்களில் கிளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும் திரள் கணிமை அல்லது கொளுவுக் கணிமை கட்டுமானத் திட்டப்பணி ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனத்தேசிய மீவேக கணினி தியேன் ச்சின் மையத்தின் துணைத் தலைவர் ரோ ச்சுன் அண்மையில் சின்குவா செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
மீவேக கணினி தற்போதைய தகவல் தொழில் நுட்பத்தின் மிக உயர் தரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அது ஒரு நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலையும் வெளிப்படுத்தலாம். பெரிய அளவுடைய அறிவியல் அல்லது பொறியியல் கணக்கீட்டுத் திட்டப்பணிகளுக்கு மீவேக கணினி இன்றியமையாத வசதியாகக் கருதப்படுகிறது.
தியேன் ச்சின் மீவேக கணினி மையம், சீனத் தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் தியேன் ச்சின் புதிய பின்காய் பிரதேசத்தால் கட்டியமைக்கப்பட்டது. "tian he-1" என்னும் வினாடிக்கு 10 கோடி கோடி முறை கணக்கிடக் கூடிய சீனாவின் முதலாவது மீவேக கணினி இந்த மையத்தில் தான் உள்ளது.
தற்போது, எண்ணெய் வள கண்டுபிடித்தல், உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, கேலிச்சித்திர வடிவமைப்பு, நாணய அபாய ஆய்வு முதலிய துறையில் "tian he-1"கணினி மூலம் தியேன் ச்சின் மையம் 200க்கு அதிகமான வணிக பயனாளர்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் எனும் கொளுவுக் கணிமை சேவை புரிகிறது. தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இவ்வாண்டின் ஜுலை திங்கள், HP,Tencent உள்ளிட்ட 35 புதிய உயர் அறிவியல் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களுடன் இந்த மையம் கொளுவுக் கணிமை கூட்டணியை உருவாக்கியது.
சீன சென் ச்சென் மீவேக கணினி மையத்தின் முக்கிய கணினி தொகுதி, சீன அறிவியல் கழகத்தின் கணக்கீட்டுத் தொழில் நுட்ப ஆய்வகத்தால் ஆராயப்பட்டு, shuguang பெய்ஜிங் தகவல் கூட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் கணக்கீட்டுத் திறன், வினாடிக்கு 10 கோடிகோடி முறையை எட்டியுள்ளது. தென் சீனா, ஹாங்காங், மக்கௌ, தைவான், தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இது சேவை புரிகிறது. பல்வகை பெருமளவுடைய அறிவியல் கணிக்கீடு மற்றும் திட்டப்பணி கணக்கீட்டுக் கடமைகளை இது நிறைவேற்றலாம்.
சீன சான் சா மீவேக கணினி மையம், ஹுநான் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. சீனத் தேசியப் பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் அதற்கு வசதி மற்றும் தொழில் நுட்ப ஆதரவை வழங்குகிறது.
சீன ச்சி னான் மீவேக கணினி மையம் 2011ம் ஆண்டு அக்டோபர் திங்கள் திறக்கப்பட்டது. சீனாவால் தயாரிக்கப்பட்ட CPU மற்றும் கணினி மென்பொருளால் உருவாக்கப்பட்ட 10 கோடி கோடி கணக்கீட்டுத் திறன் கொண்ட சீனாவின் முதலாவது கணினி இதுவாகும். சான் துங் மாநிலத்தின் அறிவியல் கழகம் அதற்கு இயக்க மற்றும் வசதி ஆதரவு வழங்குகின்றது.
சீனாவில் மீவேக கணினி மற்றும் பொளுவு கணிமைச் சேவை சுறுசுறுப்பாக வளர்ந்து வருகிறது. இருந்த போதிலும் இத்துறையில் சீனாவுக்கும் உலக முன்னேறிய நாடுகளுக்கும் இடையில் இன்னும் இடைவெளி நிலவுகிறது என்று தியேன் ச்சின் மீவேக கணினி மையத்தின் துணைத் தலைவர் ரோ ச்சுங் கூறினார். குறிப்பாகப் பயன்பாட்டுத் துறையில் மேலும் அதிக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.