மின்தூக்கியை அடிக்கடி பயன்படுத்துவோர் ஒரு பிரச்சினை பற்றி யோசிக்கக் கூடும். அதாவது, இந்த மின்தூக்கி திடீரென வடம் அறுந்து கீழே விழுந்தால் என்ன செய்வது? இந்த விபத்தின் போது மின்தூக்கி தரையில் மோதும் அதே வேளையில் உள்ளே நிற்பவர் குதித்தால், அபாயத்தைக் குறைக்கலாம் என்று சிலர் கூறினர். ஆனால், இந்த வழிமுறை பயன் தராது என்று ஜெர்மன் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
ஜெர்மன் கோட் நிதியத்தின் புவி ஈர்ப்பு ஆற்றல் ஆய்வகத்தின் பொருளியலாளர் இநேஸ் ஹான்செர் அதற்கு 3 காரணங்களை முன்வைத்தார்.
ஒன்று, மின்தூக்கி விபத்துக்குள் சிக்கி கீழே விழுகின்ற நேரம் மிகக் குறைவுத் தான். எனவே மனிதர்கள் விபத்தின் போது உடனடியாக எதிர் நடவடிக்கை மேற்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இரண்டு, விபத்தின் போது மின்தூக்கி தரையில் மோதும் சரியான நேரத்தைக் கணித்து, அந்த வேளையில் குதிக்கும் வாய்ப்பைக் கைப்பற்றுவது மிகமிக கடினம்.
மூன்று, ஒரு வேளை அந்த வாய்ப்பை பற்றிக் கொண்டு சரியான வேளையில் குதித்தாலும், மனிதனின் குதிக்கும் வேகம் மின்தூக்கி விழுகின்ற வேகத்தை அடைய முடியாது. ஆகையால், அபாயத்தை முற்றிலும் தவிர்ப்பது முடியாது.
இதனிடையில், மின் தூக்கி வடம் அறுந்து கீழே விழும் போது, உள்ளேயிருப்பவர்கள் மின்தூக்கியின் தரையில் படுத்துக் கொண்டால், எலும்பு முறிவைத் தவிர்க்கலாம் என்று வேறு சிலர் கருத்து தெரிவித்தனர். மின்தூக்கி கீழே விழுகின்ற தொலைவு ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தால் மட்டுமே, இந்த வழிமுறை பயன் தரும் என்று மேற்கூறிய ஜெர்மன் ஆய்வாளர் கூறினார்.