நண்பர்களே, நீங்கள் அலுவலகம் அல்லது பள்ளிக்குச் செல்ல எந்த வகை பயண வசதிகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சீருந்தைக் கைவிடுவது அனைவருக்கும் தெரிந்த ஒரு வழிமுறை. ஆனால், இந்தத் தேர்வு தங்கள் உடல் நலத்திற்கு நன்மை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
BMC பொது உடல் நலம் என்ற பிரிட்டனின் இதழ் அண்மையில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டது. நாள்தோறும் நடந்து அல்லது மிதிவண்டி மூலம் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்களின் உடல் நலம், பேருந்து அல்லது சீருந்தைப் பயன்படுத்தும் மக்களின் உடல் நலத்தை விட சிறப்பாக உள்ளது என்று இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது.
ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 20 ஆயிரத்துக்கு மேலான மக்களின் பயண வழக்கத்தை ஆராய்ந்தனர். பரிசோதனையில் கலந்து கொண்டவர் 18 முதல் 65 வயது வரையானோர். அவர்கள் வாரத்துக்கு குறைந்தது 30 மணி நேரம் பணி புரிந்தவர்களாக இருந்தனர். நாள்தோறும் அவர்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமிடை வழியில் அதிக நேரம் செலவிட்டனர்.
அவர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினர் சீருந்து, பேருந்து அல்லது இருப்புப் பாதை மூலம் அலுவலகத்துக்குச் சென்று வீட்டுக்கு திரும்பினர். மற்றொரு குழுவினர் நடந்து அல்லது மிதி வண்டி மூலம் பயணம் செய்தனர். அவர்கள் மீதான ஆய்வு முடிவின் படி, பிந்தைய குழுவினரின் தூக்க தரம், உடல் நலம் முதலியவை முதல் குழுவினரின் நிலைமையை விட சிறப்பாக இருந்தன.
இந்த முடிவுக்கான காரணம் பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக ஆய்வாளர் எலிக் கான்சன் கூறினார். பல்வேறு பயண வடிவங்களில் மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நிலைமையும் உளம் சார்ந்த அழுத்தமும் வேறுபட்டவை என்று அவர் கூறினார்.
மேலும் சீருந்து அல்லது பேருந்து மூலம் பயணம் செய்தவர்களில் நாள்தோறும் வழியில் 60 நிமிடத்துக்கு மேல் செலவிட்டவரின் உடல் நலம், 30 முதல் 60 நிமிடங்கள் வரை செலவிட்டவரின் உடல் நலத்தை விட ஓரளவு சிறப்பாக இருந்தது. வாகனத்தில் கூடுதலான ஓய்வு நேரம் கிடைப்பது அதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.