ஆஸ்பிரின் எனும் மருந்தை நீண்டகாலமாக உட்கொள்வது குடல் புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்புகளை அதிகளவில் குறைக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வு காட்டுகின்றது. lancet எனும் பிரிட்டனின் மருத்துவயியல் இதழின் இணையத்தில் அண்மையில் இது பற்றி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
பிரிட்டனின் நியூகாஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1999ம் ஆண்டு இது பற்றிய இந்த ஆய்வை மேற்கொள்ளத் துவங்கினர். 800க்கு அதிகமான மக்கள் 2 குழுக்காகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினர் குறைந்தது 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக நாள்தோறும் 600 மில்லி கிராம் ஆஸ்பிரினை உட்கொண்டனர். பிறகு இரு குழுவினர்களின் நிலைமையை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இவ்வாய்வு 2010ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆஸ்பிரினை உட்கொண்ட குழுவில் குடல் புற்றுநோய்க்குள்ளானவர்கள் எண்ணிக்கை மற்ற குழுவில் இருந்ததை விட சுமார் 50 விழுக்காடு குறைவு.
புற்றுநோயை தவிர்ப்பதில் நீண்டகாலமாக ஆஸ்பிரினை உட்கொள்வது பயன் தரும் என்று ஆய்வு முடிவு காட்டுவதாக ஆய்வுக்குழுவின் தலைவர் முனைவர் ஜான் பெர்ன் கூறினார்.
ஆனால், இந்த மருந்துக்கு பக்க விளைவு உண்டு. எடுத்துக்காட்டாக இரைப்பை புண்ணை இது ஏற்படுத்தும். ஆகையால், மக்கள் சொந்த உடல் நலத்தின் நிலைமைக்கிணங்க ஆஸ்பிரினை உட்கொள்ளத் தெரிவு செய்யலாம் என்று அவர் முன்மொழிந்தார்.