பொதுவாக மக்கள் மிகவும் மதிப்பளிக்கப்பட்ட வைரம் உண்மையில் கார்பனின் தனிப்படிக வடிவமாகும். புவியில் இப்படி பெருமளவு மதிப்பு கொண்டுள்ள வைரம் புறஅண்டவெளியில் அதிகமாக காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? நமது புவியிலிருந்து 4000 ஒளிஆண்டுகள் அப்பாலுள்ள இடத்தில் ஒரு கிரகம் உள்ளது. உயர் அடர்த்தியுடைய இந்தக் கிரகம் தனிப்படிக கார்பனால் தான் உருவானது. ஆம், இது ஒரு மிகப் பெரிய வைரக் கிரகமாக இருக்கக் கூடும்.
இந்தக் கிரகம் J1719-1438 என்ற பெயருடைய துடிப்பு விண்மீனைச் சுற்றி செல்கிறது. துடிப்பு விண்மீன் என்பது ஓர் உயிரிழக்கும் நட்சத்திரமாகும். மீ ஒளிர் விண்மீன் வெடிப்பு நிகழ்ந்த பின் எஞ்சிய பகுதியாகும். துடிப்பு விண்மீன் வழக்கமான கடும் மின்காந்த கதிர் வீசுகிறது.
மேற்கூறிய இந்த வைரக் கிரகம் J1719-1438 என்ற துடிப்பு விண்மீனைச் சுற்றி செல்லும் போது, அதன் மின்காந்த கதிர்வீச்சு வைரக்கிரகத்தில் படுகிறது. இந்தக் கதிர்வீச்சு புவியையும் அடையலாம். ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வானியல் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வாளர்கள் இந்தக் கதிர்வீச்சைக் கண்டறிந்தனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்வென்பர்ன் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் வானியல் தொலைநோக்கிகள் மூலம் கிடைத்த தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்தனர். இனம் தெரியாத இந்த கிரகத்தின் எடை வியாழன்கிரகத்தை விட ஓரளவு அதிகமானது. ஆனால். அதன் அடர்த்தி வியாழன்கிரகத்தின் 20 மடங்காகும் என்று வானிலை அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆகஸ்ட் திங்கள் 26ம் நாள் வெளியான அறிவியல் எனும் அமெரிக்காவின் இதழில் இது பற்றி அவர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். இந்த கிரகம் தனிப்படிக கார்பனால் உருவாக்கப்பட்டது. அதாவது அதன் முக்கிய பகுதி வைரமாகும் என்று கட்டுரை கூறியது.