தமிழ் மொழியோ, சீன மொழியோ, ஏன் ஆங்கில மொழியோ, ஒருவரது சொந்த மொழி தாய்மொழியாக அழைக்கப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் ஒரு மனிதக் குழுவில் மொழியின் வளர்ச்சியில் தாய்மார்களுடன் ஒப்பிட்டால் தந்தையர்களின் செல்வாக்கு மேலும் அதிகம் என்று மரபணுவை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஆய்வு முடிவு காட்டுகின்றது.
அமெரிக்காவின் அறிவியல் எனும் இதழில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். உலகில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்களிடையில் மொழிகளின் தனிச்சிறப்பு குறித்து அவர்கள் களஆய்வு மேற்கொண்டனர். மொழிகளின் மாற்றத்தில் தாய்வழி மற்றும் தந்தைவழியின் தாக்கத்தை அவர்கள் மரபணு முறை மூலம் பகுத்தாராய்ந்து மேற்கூறிய முடிவை எடுத்துள்ளனர்.
மனிதருக்கு பெற்றோரிடமிருந்து வருகின்ற மரபணுக்களில், Y குரோமோசோம் எனப்படும் Y நிறமி தந்தையிடமிருந்து மட்டும் வருகின்றது. மைட்டோகாண்டிரியா எனப்படும் இழைமணி, தாயியிடமிருந்து மட்டும் வருகின்றது. மொழியின் தனிச்சிறப்பை, Y நிறமி, இழைமணி ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதன் மூலம், மொழியின் வளர்ச்சியில் தாய்வழி மற்றும் தந்தைவழி செல்வாக்கு பற்றி அறிந்து கொள்ளலாம்.
மொழியின் வளர்ச்சியுடன் தந்தைவழி மரபணுவின் தொடர்பு மேலும் அதிகமானது என்று முழு உலகிலும் வேறுபட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் குழுக்கள் மீது மேற்கொண்ட ஆய்வு முடிவு காட்டுகின்றது.
எடுத்துக்காட்டாக, பப்புவா நியூ கினியின் நியு கினி தீவின் கடலோரப் பிரதேசத்தில் முன்பு ஆர்மீனிய மக்கள் வசித்திருந்தனர். பிறகு, பெலினீசிய மக்கள் அங்கு குடியமர்ந்தனர். தற்போது, ஆர்மீனிய மொழி இத்தீவில், முக்கிய மொழியாகும். பாலினீசிய மொழியைப் பயன்படுத்தும் சில இடங்களும் உள்ளன. எந்த மொழியில் பேசினாலும், உள்ளூர் மக்களிடையில் பாலினீசிய மக்களின் தாய்வழி இழைமணிகளின் விகிதம் சம நிலையில் உள்ளது. இருந்தபோதிலும், ஓரிடத்து மக்களிடையில் பாலினீசிய மக்களின் உடலில் தந்தைவழி Y நிறமியின் விகிதம் அதிகரிப்பதற்கிணங்க, அவ்விடத்தில் பாலினீசிய மொழி மேலும் பரவலாக இருக்கிறது.
அதற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வரலாற்றில் குடியேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஆண்கள் பெண்களை விட வலுவானவர். வேறுபட்ட மொழிகளைப் பயன்படுத்தும் மக்கள் திருமணம் செய்த பிறகு, குழந்தைகள் தந்தைகளின் மொழியை மேலும் அதிகமாக கற்றுக்கொள்கின்றனர். காலஞ்செல்லச் செல்ல, மொழிகளில் ஆண்களின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.
பல மொழிகளில் தாய்மொழி என்ற சொற்கள் உள்ளன. இந்தக் கருத்து மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆகையால், மொழிகளில் தந்தைகளின் செல்வாக்கு மேலும் அதிகம் என்ற உண்மையில் மக்கள் பொதுவாக கவனம் செலுத்தவில்லை என்று ஆய்வாளர்களில் ஒருவரான பிட் போஃஸ்ட் கூறினார்.