அமெரிக்கக் கண்டச் சந்தையில் பங்கெடுக்கும் 13 திட்டப்பணிகளின் மொத்த அளவு 200 மெகா வாட்டைத் தாண்டியுள்ளதாக சின்ச்சியாங் சின் போன் அறிவியல் தொழில் நுட்பப் பங்கு வரை நிலைக் கூட்டு நிறுவனம் ஜனவரி 9ம் நாள் அறிவித்தது. உலகில் மிகப் பெரிய DC டிரைவ் நிரந்தர காந்த காற்றாற்றல் மின்னாக்கி தயாரிப்புக் கூட்டு நிறுவனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டப்பணிகள் அமெரிக்கா, ஈக்வடார், சிலி ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
சர்வதேச ஒத்துழைப்பு மூலம் கூட்டு நலன்களைப் பெறுவது எமது நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பச்சை எரியாற்றல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உலகளவிலான காற்றாற்றல் மூலவளங்களைக் கண்டறிந்து, உலக காற்றாற்றல் துறை சந்தையின் வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக சின் போன் கூட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் வாங் காய் போ தெரிவித்தார்.
இதுவரை இந்தக் கூட்டு நிறுவனம் வெளிநாடுகளில் 10க்கு மேற்பட்ட கிளைகளை ஆரம்பித்துள்ளது. வட அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பிரதேசங்களில் அவை அமைந்துள்ளன.
2010ஆம் ஆண்டின் தரவுகளின் படி, சீனாவில் காற்றாற்றல் மின்னாற்றல் உற்பத்தி ஆண்டுக்கு 3 கோடியே 50 இலட்சம் கிலோவாட்டை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் காற்றாற்றல் உற்பத்தி அளவு மிக விரைவாக வளர்ந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் வணிகப் போட்டியும் தீவிரமாக மாறியுள்ளது. ஆகையால், சில காற்றாற்றல் மின்னாற்றல் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிவதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகின்றன.