சீனாவில் தயாரிக்கப்பட்ட கடல் படுக்கையில் பயன்படுத்தப்படும் ஒளி வடம் அண்மையில் முதன்முதலாக அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைக்குள் நுழைந்துள்ளது. தலைமையகம் ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள சுங் தியேன் அறிவியல் தொழில் நுட்பக் குழுமம் அண்மையில் அமெரிக்காவின் அலாஸ்காவிலுள்ள ஒரு தொலைபேசி கூட்டு நிறுவனத்துக்கும் இத்தாலியைச் சேர்ந்த ஒரு கடல் எண்ணெய் platform திட்டப்பணிக்கும் 230 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் படுக்கையிலான ஒளி வடத்தை ஏற்றுமதி செய்தது. அவற்றின் மொத்த மதிப்பு 4 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
1985ம் ஆண்டு உலகில் முதலாவது கடல் படுக்கையிலான ஒளி வடம் பயன்படுத்தப்பட்டது. பொருளாதாரம் மற்றும் தகவல் உலக மயமாக்கத்தின் வேகமான வளர்ச்சியுடன், தற்போது, முழு உலகிலும் கடல் படுக்கையில் மொத்தம் 10 இலட்சம் கிலோமீட்டர் நீளமான ஒளி வடம் பயன்படுத்தப்படுகின்றது. 2000 முதல் 2010ம் ஆண்டு வரை சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இத்துறையிலான முதலீட்டை மென்மேலும் அதிகரித்து, அவற்றின் மதிப்பு 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
கடல்படுக்கையிலான ஒளி வடம், இணைய வலைப்பின்னலின் மத்திய நரம்பு மண்டலமாகக் கருதப்படுகிறது. அதன் உற்பத்தியும் இடுதலும் சிக்கலான உயர் அறிவியல் தொழில் நுட்பப் பணியாகவும் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இத்துறையின் ஆய்வில் சுங் தியேன் குழுமம் பல பத்து கோடி யுவானை முதலீடு செய்தது. இக்குழுமத்தின் பத்துக்கு மேற்பட்ட கடல்படுக்கையிலான ஒளி வட வகைகள் சர்வதேச விற்பனை அனுமதியைப் பெற்றுள்ளன.