அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து புற அண்டவெளி ஆய்வைப் பற்றிய நடவடிக்கை கோட்பாட்டைக் கூட்டாக வகுக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டன் அம்மையார் ஜனவரி 17ம் நாள் தெரிவித்தார்.
புறஅண்டவெளியின் ஆய்வும் பயன்பாடும் மனிதச் சமூகத்துக்குப் பல நன்மைகளைக் கொண்டு வரும். ஆனால், இப்பிரதேசத்தின் நீண்டகால தொடரவல்ல வளர்ச்சி, தீவிரமாக அதிகரித்து வரும் விண்வெளிக் கழிவுப் பொருட்கள், பொறுப்பற்ற நடவடிக்கைகள் முதலியவற்றால் ஏற்பட்ட அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது என்று கிளிண்டன் அம்மையார் கூறினார். முறையான நடவடிக்கை கோட்பாட்டைச் சர்வதேசச் சமூகம் வகுப்பது, புற அண்டவெளியின் தொடரவல்ல வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்குத் துணை புரியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஆனால், இந்தக் கோட்பாடு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நலன்களைப் பேணிக்காப்பதைக் கட்டுப்படுத்தினால், அமெரிக்கா அதில் கையொப்பமிடப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
புற அண்டவெளி பயன்பாடு பற்றிய சர்வதேச நடவடிக்கைக் கோட்பாட்டை வகுக்க வேண்டுமென ஐரோப்பி ஒன்றியம் 2009ம் ஆண்டு முன்மொழிந்தது. அண்மையில், ரஷியாவால் கைவிடப்பட்ட ஒரு கழிவு இராணுவச் செயற்கைக் கோள், அமெரிக்காவின் ஒரு செய்தித் தொடர்புச் செயற்கைக்கோளுடன் மோதிய பிறகு, விண்வெளி கழிவுப் பொருட்களின் மேலாண்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புப் பிரச்சினையில் சர்வதேசச் சமூகம் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவின் படி, நடவடிக்கைக் கோட்பாட்டில் கையொப்பமிட்ட நாடுகள் புறஅண்டவெளியை அமைதி நோக்கிற்காகப் பயன்படுத்துவதற்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். அதேவேளையில், விண்வெளியிலுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் பறக்கும் விண்கலங்களின் பாதுகாப்பையும் முழுமையையும் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.