சீன அறிவியல் கழகத்தின் சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு விருது ஜனவரி 18ம் நாள் பெய்ஜிங்கில் வழங்கப்பட்டது. டென்மார்க் ஓஹுஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிஃலைமின் பெசண்பாஹ், அமெரிக்க ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லாண்னி டோம்சன், ஜப்பானின் உயர் ஆற்றல் துரிதமாக்கு வசதி ஆய்வு அமைப்பின் முனைவர் குரோகாவா ஷினிச்சி ஆகிய 3 பேர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பிஃலைமின் பெசண்பாஹ் சர்வதேசப் பொறியியல் துறையிலும் நானோ அறிவியல் துறையிலும் மிக உயர்ந்த புகழ் பெற்றவர். முதுகலை மாணவர்களின் மேம்பாடு பற்றிய சீன-டென்மார்க் கூட்டுத் திட்டம், நானோ அறிவியல் தொழில் நுட்ப ஆய்வில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு முதலியவற்றில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். பேராசிரியர் லாண்னி டோம்சன் சீன அறிவியல் கழகத்தின் சிங்காய்-திபெத் பீடபூமி ஆய்வகத்தால் பரிந்துரை செய்யபட்டவர் ஆவார். அவர் உலகில் மிகவும் புகழ்பெற்ற பனிமலை சூழல் ஆய்வாளராக விளங்குபவர் ஆவார். 1984ம் ஆண்டு தொட்டு, அவர் சீன அறிவியலாளர்களுடன் ஒத்துழைக்கத் துவங்கினார். முனைவர் குரோகாவா ஷினிச்சி சீன அறிவியல் கழகத்தின் உயர் ஆற்றல் இயல்பியல் ஆய்வகத்தால் பரிந்துரை செய்யபட்டவர். உலக துகள் துரிதமாக்குதல் வசதி ஆய்வுத் துறையில் அவர் புகழ்பெற்றவராவார். ஜப்பான் மற்றும் சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறை ஒத்துழைப்பை அவர் மும்முரமாக விரைவுபடுத்தி, சீன அறிவியல் கழகத்தின் வசதிக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புத் துறையில் முக்கிய பங்காற்றிய சிறந்த வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்ப மற்றும் மேலாண்மை வல்லுனர்களைப் பாராட்டி, சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் துறை ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றும் வகையில், சீன அறிவியல் கழகம் 2007ம் ஆண்டு இவ்விருதை நிறுவியது. இதுவரை 14 வெளிநாட்டு வல்லுனர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
சீன அறிவியல் கழகத்தின் தலைசிறந்த அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றப் பரிசும் அதேநாள் வழங்கப்பட்டது.