6700 ஆண்டுகளுக்கு முன்னர் தான், பெரு அருகிலுள்ள கடலோரப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் பாப்கார்னைச் சாப்பிடத் துவங்கியுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. மக்கள் இதுவரை நமபிவந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருவின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோரப் பிரதேசத்தின் இரண்டு இடங்களில் ஓர் ஆய்வுக் குழு மக்காச்சோள இலை, மக்காச்சோள பற்கள் முதலியவற்றின் படிமங்களைக் கண்டறிந்தது. 3000 ஆண்டுகள் முதல் 6700 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு முன்பு மக்கள் மக்காச்சோளத்தைச் சாப்பிடத் துவங்கினர் என்று இது காட்டுகிறது. அமெரிக்க வண்டேர்பில்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டோம் தலேஹாய் மற்றும் பெரு தேசிய வரலாற்று ஆய்வகத்தின் ஆய்வாளர் துசிஓ பெர்னவியா இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் சமைக்கப்பட்ட மக்காச்சோளம், பார்கார்ன், மக்காச்சோள மாவு ஆகிய வழிமுறைகளில் மக்காச்சோளத்தைச் சாப்பிட்டனர். ஆனால், அப்போது மக்காச்சோளம் அவர்களின் முக்கிய உணவு வகையாக இல்லை என்று கண்டறியப்பட்ட படிமங்களை ஆய்வு செய்த பிறகு ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர்.
சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன், மெக்சிகோ மக்கள் முதன்முதலில் மக்காச்சோளத்தைப் பயிரிடத் துவங்கினர். சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த பயிர் தென் அமெரிக்காவுக்குப் பரவியது. அது மட்டுமல்ல, புதிய மக்காச்சோள வகைகளும் தோன்றின. இதுவரை மக்காச்சோள வகைகளின் எண்ணிக்கை சில நூறாக மாறியுள்ளது. தற்போது, இது ஆண்டியன் பிரதேச மக்களின் முக்கிய உணவு வகையாக உள்ளது என்று ஆய்வுக் குழு கூறியது.