இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் சில நாடுகள் தொடர்ச்சியான கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, ரஷியாவில் பல பிரதேசங்களில் தட்பவெப்ப நிலை கடந்த பல ஆண்டுகளில் இருந்த சராசரி நிலையை விட 10 முதல் 17 திகிரி செல்சியஸ் குறைந்தது. கடும் குளிர் மற்றும் பனி வானிலையால், அனைத்து துவக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளையும் பிப்ரவரி 8ம் நாள் முதல் 10ம் நாள் வரை தற்காலிகமாக மூடுவதென பல்கேரிய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது. பல நாடுகளில் பயணியர் விமான நிலையங்கள் பனியால் சிக்கலுக்குளாகின.
இத்தகைய காலநிலை பற்றி அறிவித்த போது, பனிப்பாறை காலம், உலகில் மிகக் குளிரான குளிர்காலம், உலக வெப்பமேறல் மாறியுள்ளது ஆகிய சொற்களை பல செய்தி ஊடகங்கள் அடிக்கடி பயன்படுத்தத் துவங்கியுள்ளன. அது சரியல்ல என்று பல வல்லுனர்களும் உலக வானிலை அமைப்பும் கருத்து தெரிவித்தன. காரணம், தற்போதைய குளிர் வானிலை பற்றி தவறாக விளக்குவது, தீவிர காலநிலையைச் சமாளிக்கும் மனித குலத்தின் முயற்சி திசைக்கு தவறாக வழிகாட்டும் என்று அவர்கள் கூறினர்.
ஐரோப்பாவில் தோன்றிய தாழ்ந்த தட்ப வெப்ப நிலை பற்றி கூறுகையில், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி திங்களில் ஐரோப்பாவில் ஒட்டுமொத்த தட்ப வெப்ப நிலை கடந்த பல ஆண்டுகளில் இருந்ததை விட உயர்வாக இருந்தது என்று உலக வானிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நலீஸ் பிப்ரவரி 4ம் நாள் தெரிவித்தார். குறிப்பட்ட சில இடங்களில்தான் வரலாற்றில் மிகத் தாழ்ந்த தட்ப வெப்பம் தோன்றியது என்று அவர் கூறினார்.
அதேவேளையில், புவியின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள அர்ஜென்டீனா மிக உயர்ந்த தட்ப வெப்பத்தால் அல்லல்பட்டது. பிப்ரவரி 7ம் நாள் தலைநகர் புயினெஸ் எரிசில் உயர் தட்ப வெப்பம் 40 திகிரி செல்சியஸைத் தாண்டியது. மேற்கு பகுதியிலுள்ள லாலிவொஹா மாநிலத்தில் 50 திகிரி செல்சியஸ் என்ற நிலைமை தோன்றியுள்ளது. அதேவேளையில், ஐரோப்பாவின் பல நாடுகளைப் போல் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் கலிபோஃனியாவில் Long Beach விமான நிலையத்தின் தட்ப வெப்பம் 30 திகிரி செல்சியஸைத் தாண்டி, கடந்த 40 ஆண்டுகளில் மிக உயர்ந்த பதிவாகியது.
காலநிலை நிலைமை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. தற்போதைய குளிர் நிலைமையைப் பார்த்து, உலக வெப்பமேறல் என்ற உண்மையைப் புறக்கணிக்க முடியாது என்று பிரிட்டனின் வானிலை ஆணையம் கருத்து தெரிவித்தது. குளிர் தட்ப வெப்பம் ஒரு சில இடங்களில் தோன்றிய தற்காலிக நிகழ்வாகும். உலக வெப்பமேறல் இன்னும் நீண்டகால வளர்ச்சிப் போக்காகும் என்று அவ்வாணையத்தின் செய்தித் தொடர்பாளர் டான் விலின்ஸ் கூறினார்.
உலக காலநிலை வெப்பமாகி வருகிறதா, குளிராகி வருகிறதா என்பது பற்றி உறுதிப்படுத்தி விளக்க ஒரு சில நிகழ்வுகள் போதாது. நீண்டகால வானிலை தகவல்களைத் தொகுத்து பகுத்தாராய வேண்டும். தற்போது, அறிவியல் துறையில் உலக வெப்பமேறல் என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கும் தற்போதைய குளிர் நிலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை.
உண்மையில், ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளில் குளிரான குளிர்காலமே நிலவியது. ஆனால், உலக வானிலை அமைப்பு வெளியிட்ட மிகப் புதிய அறிக்கையின் படி, உலக மிக வெப்பமான ஆண்டுகள் என்ற வரிசையில் இருந்த முதல் 13 ஆண்டுகளும், கடந்த 15 ஆண்டுகளில் அடங்கியுள்ளன. உலக வெப்பமேறல் மாறவில்லை. வட துருவப் பிரதேசத்திலுள்ள பனிப் பரப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது.
காலத்தைப் பார்த்தால், உலக வெப்பமேறல் சமனற்ற நிலையில் உள்ளது. குறிப்பிட்ட குளிர் காலமும் குறிப்பிட்ட வெப்ப காலமும் உள்ளன என்று பல வானிலை வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆகையால், சில இடங்களில் தோன்றிய மிகக் குளிரான நிலைமை, இதர பிரதேசங்களின் வெப்பமேறல் நிலைமையை மாற்ற இயலாது என்று அவர்கள் கூறினர்.
உலக வெப்பமேறல் போக்குடன், எதிர்காலத்தில் தீவிர வானிலை நிலை மேலும் அதிகமாக தோன்றும். அவற்றின் வலிமையும் அதிகரிக்கும். தாக்கப்பட்டப் பிரதேசங்களும் அதிகரிக்கும் என்று உலக வானிலை அமைப்பு முன்னெச்சரிக்கை வழங்கியது.
வெப்பமேறலால், வட துருவப்பிரதேசத்திலுள்ள பனித் தகடுகளின் தொகுதி கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 20 விழுக்காடு குறைந்துள்ளது. துருவப் பிரதேசத்திலுள்ள கடற்பரப்பு பனித் தகடுகளின் மூடியை இழந்தால், அதன் மேல் இருக்கும் வெப்பமான காற்று மேலும் குளிரான உயர் இடத்திற்கு இடம் மாறும். அதனால், துருவப் பிரதேசத்தின் காற்று சூழற்சி மாறிவிடும். அதன் விளைவாக துருவப் பிரதேசத்தின் குளிர் காற்று உயர் அழுத்தத் தொகுதியால் வடக்கு அரைக்கோளத்திலுள்ள நிலப்பரப்புக்கு இடம் மாறும். ஆகவே, அப்பிரதேசத்தின் தட்ப வெப்பம் தீடீரென குறையும்.
உலக வெப்பமேறல் மிக அதிக தீவிர காலநிலைகளை ஏற்படுத்தும். ஆகையால், மனித குலம் இப்பிரச்சினையைக் கவனமாகக் கையாள வேண்டும்.