வானிலை மற்றும் காலநிலைத் தகவல்களைப் பற்றிய புதிய அமைப்புமுறையை உலக வானிலை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. உலக வானிலை அமைப்புகளின் தகவல் தொகுதி என்று அழைக்கப்படும் இந்தப் புதிய அமைப்புமுறை, கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த உலகக் காலநிலைக் கண்காணிப்பு வலைப்பின்னலுக்குப் பதிலாக செயல்படத் துவங்கியுள்ளது.
புதிய அமைப்புமுறையில் செய்தித் தொடர்புத் துறை தொடர்புடைய தொழில் நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. உலக வானிலை அமைப்பின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் தொடர்புடைய அறிவியல் ஆய்வு நிறுவனங்களுக்கிடையில் வானிலை, காலநிலை, நீரியல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் திறனை இது உயர்த்தி, தகவல் பரிமாற்றச் செலவைப் பெரிதும் குறைக்கும் என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்தது.
வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் நீக்கம், உணவுப் பாதுகாப்பு முதலிய துறைகளுக்கு இந்தப் புதிய அமைப்புமுறை சிறப்பாகச் சேவை புரியும். தொடர்புடைய தகவல்கள் வானிலை அமைப்புகள் சாராத பயன்பாட்டாளர்களுக்கும் வினியோகிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.