மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் என்பது, அறிவியல் வழிமுறை மூலம் ஒரு வகை உயிரினத்திலிருந்து தேவையான மரபணுவை எடுத்து, அதனை மற்றொரு வகை உயிரினத்துக்குள் மாற்றும் தொழில் நுட்பமாகும். 1996ம் ஆண்டு உலகில் முதலாவது மரபணு மாற்று வேளாண் பயிர் அதிகாரப்பூர்வமாக உற்பத்தி செய்யப்படத் துவங்கியது. 2011ம் ஆண்டு உலகம் முழுவதிலும் மரபணு மாற்று வேளாண் பயிர்களின் வளர்ப்பு நிலப்பரப்பு 16 கோடி ஹெக்டேரை எட்டியுள்ளது. 2010ம் ஆண்டில் இருந்ததை விட இது 8 விழுக்காடு அதிகம் என்று சர்வதேச வேளாண் துறை உயிர் தொழில் நுட்பப் பயன்பாட்டுச் சேவை அமைப்பு பிப்ரவரி திங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டில் உலகில் 29 நாடுகளில் மரபணு மாற்று வேளாண் பயிர்கள் பயிரிடப்பட்டன. அவற்றில் 19 வளரும் நாடுகளும், 10 வளர்ந்த நாடுகளும் உள்ளன. அமெரிக்காவில் மிக அதிக மரபணு மாற்று வேளாண் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றின் வளர்ப்பு நிலப்பரப்பு 6 கோடியே 90 இலட்சம் ஹெக்டேராகும். மக்காச்சோளம், அவரை, பருத்தி, எள் ஆகியவை மிக அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசில், அர்ஜெடீனா ஆகியவை மரபணு மாற்று வேளாண் பயிர்களைப் பயிரிடுவதில் 2ம் மற்றும் 3ம் இடத்தை வகிக்கின்றன. இந்தியா, கனடா, சீனா, பாரகுவே, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளிலும் மரபணு மாற்று வேளாண் பயிர்களின் வளர்ப்பு நிலப்பரப்பு 10 இலட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது.