சீனாவின் புதிய தலைமுறை இணை சுற்றுவட்டப்பாதை வானிலைச் செயற்கைக் கோளான பூஃன்யூன்-4 பற்றிய ஆய்வு மாதிரி தயாரிப்புக் கட்டத்தில் நுழைந்துள்ளது. அதன் ஆய்வுத் திறன், தொழில் நுட்பத் திறன் முதலியவை சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டப்படி, 2015ம் ஆண்டு வாக்கில் முதலாவது ஆய்வுச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும் என்று சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்பக் குழுமக் கூட்டு நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. அதேவேளையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 10 வானிலைச் செயற்கைக்கோள்களை சீனா அனுப்பவுள்ளது. பூஃன்யூன் செயற்கைக் கோள்கள் தொகுதி மக்களுக்கு மேலதிக சேவை புரியும்.
கிழக்காசியப் பருவப் பெயர்ச்சிக் காற்று மண்டலத்தில் சீனா அமைந்துள்ளது. அதன் இயற்கை நிலைமை சிக்கலானதாக உள்ளது. உலகில் மிகக் கடுமையான இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். சீனாவில் ஏற்பட்டிருக்கும் வானிலைச் சீற்றங்களின் வகை, வலிமை, நிகழ்வெண்ணிக்கை ஆகியவை உயர்வானவை. பல்வகை இயற்கைச் சீற்றங்களில் அவை வகிக்கும் விகிதம் 70 விழுக்காட்டுக்கு மேலாகும்.
கடந்த 41 ஆண்டு கால வளர்ச்சியுடன், சீனாவின் வானிலைச் செயற்கைக் கோள்கள் ஆய்வு முறையிலான பயன்பாட்டு வகையிலிருந்து தொழில் சேவை வகையாக மாறியுள்ளன.
இதுவரை மொத்தம் 12 வானிலைச் செயற்கைக் கோள்களைச் சீனா செலுத்தியுள்ளது. அவற்றில் 7 செயற்கைக் கோள்கள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிதானமாக இயங்கி வருகிறன.
வானிலை முன்னறிவிப்பு, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மூலவளக் கண்டறிதல், அறிவியல் ஆய்வு முதலிய பல முக்கிய துறைகளில் பூஃன்யூன் வானிலைச் செயற்கைக் கோள் தொகுதி பரந்தளவில் சேவை புரிகிறது. தவிர, கடல் வேளாண்மை, வனம், நீர்ச் சேமிப்பு, போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, விண்வெளிப்பயணம் முதலிய பல துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் 60வது தேசிய விழா, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கான வானிலை முன்னறிவிப்புச் சேவையிலும், வென்சுவான் மற்றும் யுசூ பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம், சோ சூ மண் அரிப்பு முதலிய திடீர் இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புதவிக்கான சேவையிலும், வானிலைச் செயற்கைக் கோள்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன.
தற்போது, பூஃன்யூன் வானிலைச் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த தரவுகள் சீனாவில் பல்லாயிரக்கணக்கான பயன்பாட்டு நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. முழுமையடையாத புள்ளிவிபரங்களின் படி, 2010ம் ஆண்டு சீனாவில் வானிலைச் செயற்கைக் கோள்கள் தொகுதிக்கான செலவு அதன் மூலம் கிடைத்த நலன்களின் மதிப்புத் தொகையில் 2 விழுக்காடு மட்டுமே ஆகும்.
பூஃன்யூன் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் உலகில் அதே வகை செயற்கைக் கோள்களின் முன்னேறிய தரத்தை எட்டியுள்ளன. அதேவேளை, புவியின் இணை சுற்றுவட்டப் பாதை மற்றும் சூரிய சின்க்ரோனஸ் கோளப்பாதைக்குச் செயற்கைக் கோள்களை அனுப்பக் கூடிய 3வது நாடாக சீனா மாறியுள்ளது.
தற்போது, உலக வானிலை அமைப்பு சீனாவின் பூஃயுன் தொகுதியை உலகத் தொழில் பயன்பாட்டு வானிலைச் செயற்கை கோள்களின் வரிசையில் சேர்த்துள்ளது. அதேவேளையில் உலக ஒட்டுமொத்த புவிக் கண்காணிப்புத் தொகுதியின் முக்கிய உறுப்பினராக சீனா உருவெடுத்துள்ளது. பூஃன்யூன் தொகுதி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வானிலைச் செயற்கைக் கோள்களைப் போலவே, புவியின் காற்று, கடல்பரப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீது கண்காணித்து வருகின்றது.
இதுவரை, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட சுமார் 100 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் சீனாவின் பூஃன்யூன் வானிலைச் செயற்கைக் கோள்கள் வினியோகிக்கும் தரவுகளைப் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றன.
2015ம் ஆண்டுக்குள், பூஃன்யூன் 2, பூஃன்யூன் 3 ஆகியவை மூலமான உயர் மற்றும் தாழ்வு இரட்டை செயற்கைக் கோள்களைக் கொண்ட கண்காணிப்பு வலைப்பின்னலை சீனா உருவாக்கும் என்று சீன விண்வெளிப் பயண அறிவியல் தொழில் நுட்பக் குழுமத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறினார். 2020ம் ஆண்டு, சீனாவின் புதிய தலைமுறை வானிலைச் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். காலைச் செயற்கைக் கோள், மாலைச் செயற்கைக் கோள், மழை நீர் அளவைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக் கோள் ஆகிய 3 வகைகளைக் கொண்ட வலைப்பின்னல் உருவாக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் சீனாவின் 3வது தலைமுறை சூரிய இணை சுற்றுவட்டப் பாதை மற்றும் சின்க்ரோனஸ் கோளப்பாதை செயற்கைக் கோள் வலைப்பின்னலை சீனா கட்டியமைத்து, முழு உலகளவில் கண்காணிப்புத் தொகுதியை உருவாக்கும்.
வானிலை முன்னறிவிப்பின் துல்லியம், வானிலை மாற்றத்தைச் சமாளித்தல், இயற்கைச் சீற்றத் தடுப்பு, சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, உலகில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு முதலிய துறைகளில் சீனாவின் வானிலைச் செயற்கைக் கோள்கள் மேலதிகமான தெளிவான பயன்களை அளிக்க உள்ளது உறுதி.