சீன அறிவியல் கழகத்தின் குளிர் மற்றும் வெப்ப மண்டலச் சூழல் மற்றும் பொறியியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இவ்வாண்டு முதல் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பை ஒத்த சின்காய்-திபெத் பீடபூமி மற்றும் அதற்கு அருகிலுள்ள பாலைவன நிலப்பரப்பில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் துவங்குவர்.
இதுவரை செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட நில அமைப்புகளில் பெரும்பாலானவை புவியில் கண்டறியப்படலாம் என்று மேற்கூறிய ஆய்வகத்தின் ஆய்வாளர் துங் ச்சிபாவ் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சின்காய்-திபெத் பீடபூமி மற்றும் அதற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் குறிப்பாக குவாய்டாம் வடிநிலம், கும்தாக பாலைவனம் ஆகியவற்றில் காணப்படும் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பை ஒத்த நில அமைப்பு படிப்படியாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புவியுடன் ஒப்பிட்டால், செவ்வாய் கிரகத்தில் தாழ்ந்த காற்று அழுத்தம், தாழ்ந்த தட்பவெப்பம், வறட்சி ஆகியவை உள்ளன. உலகின் இதர பாலைவனப் பிரதேசங்களை ஒப்பிடும் போது, சின்காய் திபெத் பீடபூமி மற்றும் அதற்கு அருகிலுள்ள பாலை வனப் பிரதேசங்கள் அதே தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளன.
சர்வதேச ஒத்துழைப்புடன், உலகில் முன்னேறிய ஆய்வு அனுபவம் மற்றும் தொழில் நுட்பங்களின் அடிப்படையில், சீன ஆய்வாளர்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை ஒத்த நில அமைப்பின் நிகழ்வு, வளர்ச்சிச் சூழ்நிலை, வளர்ச்சிப் போக்கு முதலியவை பற்றி ஆராய்வர். சீனாவில் புவி மற்றும் செவ்வாய் கிரகச் சூழ்நிலை ஆய்வுக்கு இந்த ஆய்வுத் திட்டப்பணி முக்கிய அடிப்படையை உருவாக்கும்.