ExoMars எனும் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டப்பணியை அமெரிக்காவுக்குப் பதிலாக ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையத்துடன் இணைந்து கூட்டாக நடைமுறைப்படுத்த ரஷிய விண்வெளிப் பயண ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. இரு தரப்புகளின் தொடர்புடைய பொறுப்பாளர்கள் ஏப்ரல் 6ம் நாள் மாஸ்கோவில் இதற்கான விருப்ப உடன்படிக்கை ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.
அது பற்றிய இறுதி ஆவணம் இவ்வாண்டின் டிசம்பர் திங்களில் எட்டப்படும் என்று இரு தரப்புகளும் எதிர்பார்க்கின்றன. இறுதி ஆவணத்தில் இரு தரப்புகளும் ஏற்க வேண்டிய கடமைகளும் நிதிச் செலவும் உறுதிப்படுத்தப்படும்.
ExoMars என்பது ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையம் 2005ம் ஆண்டு நிறைவேற்றிய செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களைத் தேடி ஆய்வு மேற்கொள்ளும் திட்டமாகும். 2009ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஐரோப்பியத் தரப்புடன் சேர்ந்து இத்திட்டப்பணியை மேற்கொண்டிருந்தது. இதற்கான மொத்தச் செலவு 140 கோடி அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டப்பணியிலிருந்து விலகுவதாக நாசா நிறுவனம் இவ்வாண்டின் பிப்ரவரி திங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிறகு, இத்திட்டப்பணியில் ஒத்துழைக்கும் படி ஐரோப்பியத் தரப்பு ரஷியாவுக்கு அழைப்பு விடுத்தது. விண்கலத்தை ஏவுகின்ற பொறுப்பை ரஷியா ஏற்பதைத் துவக்க நிலை ஆலோசனை மூலம் இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டன.