காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.
குறிப்பாக டாஸ்கன் டெக் மற்றும் ஸ்டுடர் கன்சோல்களைப் பார்த்து வியந்தேன். காரணம் இது போன்ற கன்சோல்கள் ஒலிபதிவின் தரத்தினைக் கூட்டக் கூடியது.
அதன் பின் சக பணியாளர்களுக்கு நான் திருநெல்வேலியில் இருந்து வாங்கிச் சென்ற தனிச் சிறப்பான இனிப்பினை வழங்கினேன். அனைவரும் அதனை சுவைத்து பார்த்து மகிழ்ந்தனர்.
மதியம் வாணி, சரஸ்வதி மற்றும் தேன்மொழி ஆகியோருடன் இணைந்து மதிய உணவினை சீன வானொலியின் பிரத்தியேக உணவகத்தில் உண்டோம். உணவின் சுவை மற்றும் மணத்தினை பிரிதொரு பதிவில் நிச்சயம் கூறுவேன்.
மதியம் எனது சுற்றுலாவின் முதல் இடமான 'சொர்கக் கோவிலுக்கு' நிறைமதியுடன் நிறைந்த மனதுடன் சென்றேன். சீன வானொலிக்கு சொந்தமான பிரித்தியேக மகிழ்வுந்திலேயே என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த வாகனத்தின் முன் புறம் சீன வானொலியின் முத்திரையோடு 'சீன வானொலி நிலையம்' என்று எழுதப்பட்டு இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. காரணம் இது போன்ற வானொலிக்கு சொந்தமான வாகனங்களில் செல்வது ஒரு தனி மகிழ்ச்சியையும் மரியாதையையும் எனக்குள் ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தேன்.
சீனாவின் மிக முக்கிய இடமான சொர்கக் கோவில் பற்றி விரிவான கட்டுரையை எழுத வேண்டும் எனவே அந்த அனுபவத்தினை வேறு ஒரு பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்.