இன்று எனது சீனப் பயணத்தின் 2வது நாள். திபெத்திற்குப் புறப்படும் வகையில், காலை 6 மணிக்கு நண்பர் வாணியுடன் பெய்ஜிங் விடுதியில் தயாராகக் காத்திருந்தேன். பின்பு, 7 நேயர் உட்பட மொத்தம் 20 பேர் அடங்கிய பயணக்குழு பெய்ஜிங் விமான நிலையம் சென்றடைந்து, காலை 9:30 மணிக்கு இன்றைய பயணத்தைத் துவக்கினோம். திபெத்தை பற்றி சீன வானொலி மூலமாக கூடுதலான தகவல்களை அறிந்து கொண்டிருந்த போதிலும், உலகின் உச்சியில் அமைந்த இடத்திற்குச் செல்வதால் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை என் மனதில் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டிருந்தது. பின்னர், 2 மணி நேரத்துக்குப் பின், சி ச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங் துவில் ஒரு மணி நேரம் கழித்த பின்னர், பயணம் தொடர்ந்தது.
பிற்பகல், சரியாக 3:30 மணிக்குத் திபெத்தின் கொங்கா விமான நிலையத்தை அடைந்தோம். பின்பு, வேன் மூலமாக நாங்கள் லாசா நகரம் நோக்கி புறப்பட்டோம்.
வழியில் கண்ட 500 ஆண்டுகால வரலாறுடைய புத்தர் சிலை, சாங்சாங்பு ஆறு, லாசா ஆறு, முன்னேறிய கிராம வாழ்க்கைச் சூழல் திபெத் பிரதேசத்தின் 8 புனித மலைகளுள் ஒன்றான தாவர வடிவ மலை ஆகியவற்றைக் கண்டுரசித்தவாறு லாசா வந்தடைந்தோம். நான் கண்ட காட்சி யாவும், அடுத்த ஒரு வார பயணத்தின் மீதான என் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளன.
லாசா நகரில் போத்தலா மாளிகைக்கு அருகில் ஓர் அழகான விடுதியில் நாங்கள் அனைவரம் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
திபெத்திற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், எனது உடல் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நான் நலமுடனும் இயல்பான என் மனவுறுதிவுடனும் எனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றுவேன். திபெத் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் அடுத்து வரும் நாட்களில் கூடுதலான தகவல்களை அறிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.