பிரேசிலில் சீனாவின் தடுப்பூசி பற்றிய குழப்பமான சம்பவத்துக்குப் பின்...
2020-11-15 17:00:28

பிரேசிலில் சீனாவின் சைனோவேக் உயிரின தொழில் நுட்ப நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி சோதனையில் கலந்து கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்ததால், 9ஆம் நாள் இச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்தன. பிரேசில் அரசியல்வாதி ஒருவர் இந்த உயிரிழப்புக்கான புலனாய்வின் முடிவு வரும் முன், இதனை சீனத் தடுப்பூசியின் தரத்துடன் இணைத்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். ஆனால் உள்ளூர் காவற்துறையின் கணிப்பின்படி அந்த தன்னார்வலரின் உயிரிழப்புக்கு தற்கொலை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு,  சைனோவேக் நிறுவனத்தின் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையில் பிரச்சினை இல்லை. தன்னார்வலரின் உயிரிழப்புக்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று புடான்டான் ஆய்வு நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவித்தது.

இச்சம்பவம், தன்னைத் தானே தாக்கிக் கொள்வது போன்ற எளிதான சம்பவம் அல்ல. பிரேசிலின் சில ஊடகங்கள் தெரிவிப்பதைப் போல், அதற்குப் பின் அரசியல் காரணிகள் உள்ளன.

முதலில் இச்சம்பவம் நிகழ்ந்த போக்கில் ஐயங்கள் அதிகம். பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு பணியகம் கூறுகையில், தன்னார்வலரின் உயிரிழப்பு அக்டோபர் 29ஆம் நாள் தான் ஏற்பட்டது. ஆனால் இணையத் தாக்குதலின் காரணமாக, நவம்பர் 9ஆம் நாள் இச்சம்பவம் தொடர்பான புடான்டான் ஆய்வு நிறுவனத்தின் அதிகார மின்னஞ்சல் கிடைத்தது என்று தெரிவித்தது. ஆனால் புடான்டான் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நவம்பர் 10ஆம் நாள் இக்கூற்றை மறுத்தார்.

இரண்டாவதாக, இசம்சம்பவம் நிகழ்ந்த நேரம் ஐயத்துக்கு உரியது. அமெரிக்காவின் பிஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசியின் பயன் தரும் விகிதம் 90 விழுக்காடு என்று தெரிவித்தவுடன், பிரேசிலில் சீனாவின் தடுப்பூசி தொடர்பான மோசமான செய்தி வெளியிடப்பட்டு, அதற்கான சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவதாக, இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு, மேலை நாட்டு ஊடகங்கள் கூட்டாக சீனத் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை மீது குற்றஞ்சாட்டின. சைனோவேக் நிறுவனத்தின் தடுப்பூசி பாதுகாப்பாக இல்லை என்று அவசரமாக அறிவித்ததன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைரஸுக்கு அரசியல் நிலைப்பாடு இல்லை. தடுப்பூசியை அரசியலுடன் இணைப்பது தீங்குவிளைவிக்கும்.

தற்போது கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகிறது. பொது மக்கள் தடுப்பூசியின் பயன்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தடுப்பூசி ஆய்வில் உலகின் முன்னிலையிலுள்ள சீனா, பல நாடுகளில் 4 வகை தடுப்பூசிகளின் 3ஆவது கட்டச் சோதனையை மேற்கொண்டு வருகிறது. நல்ல பாதுகாப்புத் தன்மையை வெளிப்படுத்தியுள்ள அவை சர்வதேச சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.