சின்ச்சியாங்கில் உய்கூர் இனமக்கள் தொகை அதிகரிப்பு - சின்ச்சியாங் அதிகாரிகள்
2021-01-13 10:48:42

சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம், ஜனவரி 11ஆம் நாள் பெய்ஜிங்கில் சின்ச்சியாங் பிரதேசம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தை  நடத்தியது. அதில் அமெரிக்காவின் சி என் என், புலூம்பேர்க் செய்தி நிறுவனம், ஜப்பானின் என் எச் கே சங்கம், பாகிஸ்தான் கூட்டுச் செய்தி நிறுவனம் உட்பட, சுமார் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கலந்து கொண்டன. சின்ச்சியாங்கில் சீனா பெருமளவு கண்காணிப்பு, வலுக்கட்டாய உழைப்பு, உய்கூர் இன ஒழிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருவதாக சீனாவுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூற்றை, சின்ச்சியாங் பிரதேசத்தின் பரப்புரைத் துறைத் தலைவர் ஷு குவேய் ஷியாங்  உண்மை மற்றும் தரவுகளைக் காண்பித்து மறுத்துரைத்தார்.

சின்ச்சியாங் பிரதேசத்தின் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி அவர் கூறுகையில், 2010 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இப்பிரதேசத்தின் உய்கூர் இன மக்கள் தொகை 1 கோடியே 1 இலட்சத்து 71 ஆயிரத்து 500 என்னும் நிலையிலிருந்து 1 கோடியே 27 இலட்சத்து 18 ஆயிரத்து 400ஆக உயர்ந்து 25.04 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், அதே காலத்தில் ஹான் இன மக்கள் தொகை 88 இலட்சத்து 29 ஆயிரத்து 900 த்தில் இருந்து 90 இலட்சத்து 6 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து 2 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உய்கூர் இன மக்கள் தொகையின் அதிகரிப்பு விகிதம், முழு சின்ச்சியாங் பிரதேசத்தின் மக்கள் தொகை, இதர சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை மற்றும் ஹான் இன மக்கள் தொகையின் அதிகரிப்பு விகிதத்தை விட அதிகம் என்பது தெளிவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.