புத்தாண்டை முன்னிட்டு சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் தொலைபேசி தொடர்பு
2021-02-11 18:20:34

வசந்த விழாவுக்கு முந்தைய 11ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். மாடு ஆண்டின் வசந்த விழா குறித்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், இருதரப்புறவு, முக்கியமான சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்த பைடன், செழுமை மற்றும் வளர்ச்சியைப் பெறவும் வாழ்த்தினார். அமெரிக்க அரசுத் தலைவராக பைடன் பதவியேற்றதற்கு மீண்டும் வாழ்த்துகள் தெரிவித்த ஷிச்சின்பிங், இருநாட்டு மக்களும் மாடு ஆண்டில் இன்பம் மற்றும் மங்கலத்தைப் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், ஒத்துழைப்பானது இருதரப்புக்கு ஒரேயொரு சரியான தெரிவாகும். இருநாடுகள் ஒத்துழைத்தால் இருநாடுகள் மற்றும் உலகிற்கு நன்மை தரக்கூடிய பலவற்றை நிறைவேற்ற முடியும். சீன அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, இருநாட்டு மக்கள் மற்றும் பன்னாட்டுச் சமூகத்தின் பொது விருப்பமாகும். சீனாவும் அமெரிக்காவும் கூட்டு முயற்சி மூலம் இருநாட்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வந்து, உலகப் பொருளாதார மீட்சிக்கும் பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பைடன் கூறுகையில், சீனா, நீண்ட வரலாறு மற்றும் மகத்தான நாகரிகமுடைய நாடாகும். இருநாடுகள் மோதல்களைத் தவிர்த்து, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சீனாவுடன் இணைந்து ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் திறந்த மனதுடன் செயலாக்கமுடைய பேச்சுவார்த்தையை நடத்தி, புரிந்துணர்வை அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த இருதரப்பும் ஒப்பு கொண்டுள்ளதற்கான ஆக்கப்பூர்வ சமிக்கையாக இந்தத் தொலைபேசி தொடர்பு உலகிற்கு வெளிக்காட்டும் என்றும் அவர்கள் கருதினர்.