சீன-ஆசியான் உறவை நெருக்கமாக உருவாக்குவதற்கான சீனாவின் முன்மொழிவுகள்
2020-11-27 20:30:24

தற்போது, கரோனா தொற்று காரணமாக உலகப் பொருளாதாரம் தேக்க நிலையில் சிக்கியுள்ளது. தொடர்புடைய சர்வதேச நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, இவ்வாண்டு உலகளவில் அதிகரிப்புடன் வளரக் கூடிய ஒரேயொரு பொருளாதார மண்டலம் கிழக்காசியா. இதன் பின்னணியில், சீனா-ஆசியான் கண்காட்சியும் சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடும் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் உயர் நிலையிலான திறப்புக் கொள்கையைப் பின்பற்றி, ஆசியானுடனான ஒத்துழைப்பை ஆழமாக்கும் சீனாவின் மனவுறுதியை இது காட்டுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், சீனா-ஆசியான் இடையே மேலும் நெருக்கமான உறவை உருவாக்குவது எப்படி என்பது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் காணொளி மூலம் உரைநிகழ்த்துகையில் 4 அம்ச முன்மொழிவுகளை வழங்கினார். அதில்,  ஒன்றின் மீது ஒன்று நெடுநோக்கு நம்பிக்கையை மேம்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களின் இணைப்பை அதிகரிப்பது, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை அதிகரித்து, பிராந்திய பொருளாதாரத்தின் மீட்சியை வலுப்படுத்துவது,  அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தி, எண்முறைப் பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்குவது, தொற்று நோய்க்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்தி, பொதுச் சுகாதாரத் திறனைப் பலப்படுத்துவது ஆகியவை அடக்கம்.

சீனா-ஆசியான் தடையில்லா வர்த்தக மண்டலம் அமைக்கப்பட்டு இவ்வாண்டுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. கூடுதலாக, விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு  ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. இவை, இரு தரப்பு ஒத்துழைப்பை ஆழமாக்கி முன்னெடுப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், சீனாவின் இந்த முன்மொழிவுகளுடன், சீனா-ஆசியான் இடையேயான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கு புதியொரு தங்க தசாப்தக் காலம் தொடங்கி வைக்கப்படும் என்று நம்புகின்றோம்.