நவீனத் தொழில் நுட்பத்தோடு இயற்கை விவசாயம் சார்ந்து முன்னேறி வரும் சீனா
2021-02-25 11:28:33

ஒரு நாடு சிறந்த வளர்ச்சியை அடைய வேண்டுமானால் கிராமப் புறங்கள் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். கிராமப்புறங்கள் வளர வேண்டுமாயின் கிராமங்களின் முக்கியத் தொழிலாக இருந்து வரும் விவசாயம் வளர வேண்டும். குறிப்பாக சீனா, இந்தியா போன்று பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் விவசாயத்துறை சார்ந்து காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து வருதல், போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பிற பணிகளுக்குச் சென்றமை என அண்மைக்காலமாக விவசாயம் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம். இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டுமானால் பாரம்பரியத் தொழிலான வேளாண் துறையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியது மிக மிக அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்தே சீன நடுவண் அரசு அண்மையில் விவசாயம் தொடர்பாக 2021ஆம் ஆண்டுக்கான “ஒன்றாம் எண் ஆவணம்’’ ஒன்றை வெளியிட்டுள்ளது. வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் இந்த ஆவணம் முதன்முதலாக 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இவ்வாவணம் வெளியிடப்பட்டு வருகின்றது. கிராமப்புறங்களின் உயிராற்றலை முன்னெடுத்துச் செல்வது, வேளாண் துறையில் நவீனமயமாக்கத்தைத் துரிதப்படுத்துவதன் வழி விவசாயிகளுக்கு அருமையான எதிர்காலத்தை வழங்குவது ஆகியனவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டின் “ஒன்றாம் எண் ஆவணம்’’  உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீன அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகு முயற்சியால் உலகளவில் விவசாயத்துறை சார்ந்து பெரும் வருமானம் பெறும் நாடுகளில் முதலாவது இடத்தில் சீனா உள்ளது. சீனாவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

உலகின் மிகப் பெரிய விவசாய நாடாகத் திகழும் சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 55 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வாழ்பவர்களாகவும் அவர்களுள் பெரும்பான்மையோர் விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, சீன அரசானது வேளாண்மை மற்றும் ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. புள்ளிவிவரங்களின் படி, சீனாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 54.8 விழுக்காட்டு நிலமானது விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மாறுபட்ட காலநிலைகளைக் கொண்ட சீனாவில் கோதுமை, அரிசி, தேயிலை, பால் பொருட்கள், தானியங்கள் ஆகியன அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் சுமார் 20 விழுக்காட்டுப் பொருட்களானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப் பெரும் விவசாய நாடு என்னும் பெருமைக்குரிய சீனாவின் மொத்த வருமானத்தில் சற்றேறக்குறைய 68 இலட்சம் கோடி ரூபாய் விவசாயத்தின் மூலம் மட்டுமே கிடைக்கின்றது.

சீனாவைப் போன்றே பெரும் விவசாய நாடாகத் திகழும் இந்தியாவில் கிட்டதட்ட 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் 50 விழுக்காட்டினர் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா வெங்காயம், தக்காளி, தேயிலை போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்தியாவானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கிட்டதட்ட 24 இலட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா ஒரு மடங்கு அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்து சற்றேறக்குறைய மூன்று மடங்கு அதிக வருவாயை ஈட்டுகின்றது. சீனாவின் இந்தப் பெரும் வளர்ச்சிக்கான அடிப்படை வேளாண் துறையின் நவீனமயமாக்கமும் அத்துறை சார்ந்து சீனா கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையும் தான் என்றால் மிகையில்லை. சீனா, 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒன்றாம் எண் ஆவணத்தில் கூட விவசாயத்துறையில் 2025ஆம் ஆண்டு வரை செய்ய வேண்டிய விரிவான திட்டப் பணிகளைத் தொலைநோக்குப் பார்வையோடு முன்வைத்துள்ளதாகச் சீன வேளாண் மற்றும் ஊரகத் துறை அமைச்சர் டாங் ழென் ஜியன் கூறியிருப்பது கவனித்தக்கது. மேலும், வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களினால் தொடர்ந்து 17 ஆண்டுகளாகப் பெரும் அறுவடையைப் பெற்று வருவதாகவும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் சீனாவின் தானிய உற்பத்தி 650 பில்லியனைத் தாண்டியிருப்பாதாகவும்  டாங் ழென் ஜியன்  புள்ளிவிவரங்களோடு தெரிவிக்கின்றார்.

வேளாண் துறை பெருமளவில் நவீனப்படுத்தப்பட்டு வரும் சீனாவில் வேளாண்மை மற்றும் அறுவடையின் போது 71 விழுக்காட்டுப் பணிகள் இயந்திரங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. அதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளாக பயிர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டு அளவு குறைந்து வருவது சீன வேளாண்மை நவீனத் தொழில்நுட்பத்தோடு இயற்கை விவசாயம் நோக்கி முன்னேறி வருவதை எடுத்துக் காட்டுகின்றது.