கரோனா காலத்திலும் புதிய சாதனை படைத்த சீனத் திரைத்துறை
2021-03-04 14:35:24

உலகம் இதுவரை கண்ட பெரும் பேரிடர்களுள் ஒன்றாக கரோனா தொற்றும் மாறியிருக்கின்றது. கரோனாவினால் பல்வேறு தொழிற்துறைகளும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. அப்படி சரிவைச் சந்தித்த துறைகளுள் திரைத்துறையும் ஒன்று. கரோனா தொற்று குறித்த அச்சம், ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் காரணமாக திரையரங்குகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்ததால் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திரைத் துறையினர்கள் மாற்று ஏற்பாடாக ஓ.டி.டி எனப்படும் இணைய வழி ஒளிபரப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இந்தப் போக்கானது திரைப்படத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் – திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் மனக் கசப்பை உருவாக்கியது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைத் திரையிட முடியாததால் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க முடியாது என்பதைக் காரணம் காட்டி திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி. என்னும் இணையவழித் திரையிடலுக்கு மாறினர். ஆனால், இந்தப் போக்கு விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளரிடையே மனக் கசப்பைத் தோற்றுவித்தது. கரோனாவால் ஏற்கனவே நசிந்து போயிருக்கும் திரையரங்குகள் இதனால் மேலும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கின்றது. திரைத்துறை சார்ந்த இப்பிரச்சினைகளைச் சரியாகக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றது சீனா.

சீனாவில் அண்மையில் மாடு ஆண்டு பிறந்தது. சீனர்களின் பெருவிழாவாகக் கருதப்படும் வசந்த விழாவில் சீனர்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இந்நிகழ்வானது உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு எனச் சுட்டப்படுகின்றது. பயணங்களால் கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இப்புத்தாண்டின் போது சீனர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே வசந்த விழாவைக் கொண்டாட வேண்டும் என்று சீன அரசு முன்வைத்த வேண்டுகோளை ஏற்று பலரும் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர்த்தனர். இக்காலத்தில் திரைப்படங்களைப் பார்ப்பதென்பது சீனர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறியது. இதனால் இவ்வாண்டு வசந்த விழா விடுமுறையின் போது சீனத் திரைத்துறை பெரும் வசூலைப் பெற்றுள்ளது. சீனத் தேசியத் திரைப்படப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டு வசந்த விழாக் காலத்தில் மட்டும் சீனத் திரைப்படங்களின் வசூல் 750 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அது போன்றே இவ்வாண்டின் முதல் ஒன்றரை மாதங்களில் திரையரங்குளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் நடைபெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு மொத்த வசூலின் பாதியளவாகும்.

சீனாவில் திரைப்படங்களை இணையவழித் திரையிடுவதில் பைடூவின் ஐட்சீயீ, டென்சென்ட் வீடியோ, அலிபாபாவின் யூகூ ஆகிய மூன்றும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவையன்றி பிலிபிலி முதலான வேறு சில நிறுவனங்களும் இணைய வழியில் திரைப்படங்களைத் திரையிட்டு வருகின்றன. திரைப்படங்களைத் திரையிட இத்தனை இணையவழி மேடைகள் இருந்தும் கரோனா காலத்திலும் கூட திரையரங்குகள் பெரும் வசூலைக் குவிப்பதற்குப் பின்னால் சீனாவின் கரோனா தடுப்புப்பணி முக்கியமான ஒன்றாகச் சுட்டப்படுகின்றது. கரோனா தொற்று ஏற்பட்டவுடனேயே கடும் கட்டுப்பாடுகளை விதித்த சீனா, சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது தளர்வுகளை அறிவித்ததோடு திரையரங்குகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது. அதோடு, மக்கள் அச்சமின்றி திரையரங்குகளுக்கு வந்து திரைப்படம் பார்ப்பதற்குரிய பாதுகாப்பான சூழலையும், அதற்கான கட்டுப்பாடுகளையும் சீனா உருவாக்கியது. இதன் காரணமாக நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு வருகை தரத் தொடங்கினர். இதனாலேயே கரோனா காலத்திலும் சீனத் திரைத்துறை பெரும் வசூலுடன் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றது.