மனித உரிமைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் மேலை நாடுகள்
2021-03-25 12:55:06

ஐ.நா. மனித உரிமைச் செயற்குழுவின் 46ஆவது கூட்டத் தொடரின் போது மார்ச் 23ஆம் நாள் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், மனித உரிமை சார்ந்து ஒற்றுமை மற்றும் கூட்டு வெற்றியை முன்னேற்றும் வகையில் சீனா முன்வைத்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில் பல்வேறு நாடுகளும் பலதரப்புவாதத்தை நிலைநிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சீனா, மனித உரிமைத் துறையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி மூலம் பொதுச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்னும் கருத்தையும் முன்வைத்துள்ளது. தற்போது ஐக்கிய நாடுகள் அவையில் மொத்தமாக 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் சில நாடுகளைத் தங்களின் கைக்குள் வைத்திருக்கும் மேற்கத்திய நாடுகள், சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மீது வேண்டுமென்றே மனித உரிமைக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. அவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் தத்தமது நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறந்து விடுகின்றன. மார்ச் 23ஆம் நாள் சீனாவின் குய்லின் நகரில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, மேலை நாடுகளின் குரல்கள் மட்டுமே  ஒட்டுமொத்த உலகின் குரலாக இருக்க முடியாது என்னும் கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் மனித உரிமை என்ற பெயரில் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பைடனின் நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகச் சீனாவின் மீது குற்றம் சாட்டும் வகையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதல் என்னும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. ஆனால், தற்போது வரை உலகின் எந்தவொரு முஸ்லீம் நாடும் சீனாவுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உய்கூர் மக்களுக்கு எதிரான நடவடிக்கைளில் சீனா ஈடுபட்டிருக்குமேயானால், முஸ்லீம் நாடுகள் அதை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்குமா? என்னும் கேள்வி எழுகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் குற்றச்சாட்டுகள் சீனாவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனித உரிமை என்ற பெயரில் திட்டமிட்டு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்பதைச் சர்வதேசச் சமூகம் புரிந்து கொண்டிருக்கின்றது.

சின்ஜியாங்கில் வசிக்கும் உய்கூர் மக்கள் தங்களுக்கென்று தனித்த மொழியைக் கொண்டவர்கள். அவர்களால் சரளமாக சீன மொழியைப் பேச முடியாது. எனவே, உரையாடும் போது தவறானப் புரிதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தகு தவறான புரிதல்களைக் கொண்டே மேலை நாடுகள் சீனாவின் மீது திட்டமிட்டு பழி சுமத்துகின்றன. உண்மையில் சின்ஜியாங்கின் பிரச்சினை என்பது அதன் பொருளாதாரத்தோடு ஆழமான தொடர்பு கொண்ட ஒன்று. முறையான வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களைச் சில வெளிநாட்டுச் சக்திகள் தங்களின் கைப்பாவைகளாகப் பயன்படுத்தித் திட்டமிட்ட வனமுறைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இது மாற வேண்டுமானால் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டியது அவசியம். அதற்கு அப்பகுதி இளைஞர்களைப் பல்வேறு துறைகளிலும் திறன்மிக்க மனிதர்களாக உருவாக்க வேண்டும். அத்தீவிர வன்முறைச் சிந்தனையைத் தடுக்கும் வகையில் ஐ.நா. முன்மொழிந்துள்ள செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே சின்ஜியாங்கின் உள்ளூர் அரசு அம்மக்களுக்கான தொழில் பயிற்சி மையங்களைத் திறந்துள்ளது. பல்வகைத் தொழிற்பயிற்சிகளோடு சீன மொழியும் கற்றுத் தரப்படுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மேலதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். சீனாவின் இத்தகு முயற்சிகளையே அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இது தொடர்பாகச் சீன அரசு ‘’அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடந்த மனித உரிமை மீறல்கள்’’ என்னும் தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள், ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளையின மேலாதிக்கவாதத்தைச் செயல்படுத்தும் அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவம் உள்ளிட்ட பலவற்றில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் எனப் புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காடாக இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 28 விழுக்காட்டினர் வெள்ளையினக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகு அநீதிகளை மறந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது மனித உரிமை என்னும் பெயரில் திட்டமிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை அந்நாடு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒருவிரல் நோக்கி மற்றவர்களைக் குறைசொல்லும் போது மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருக்கும் என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனைக் காலம் உணர்த்தும்.