பசுமை வளர்ச்சியில் கவனம் செலுத்தும் சீன இணையத்தொழில்துறை
2021-03-31 11:27:15

சீனாவின் இணையத் தொழிலானது கடந்த சில பத்தாண்டுகளாக வலுவான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இதனால், இணைய நிறுவனங்களின் தரவு மையங்கள், சேவையகங்கள் மற்றும் செல்லுலார் அடிப்படை மையங்கள் ஆகியன எரியாற்றலை வேகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இவற்றுக்கான பசுமைத்தீர்வுகளை எட்டும் போக்கில் சீன இணையத் தொழில் துறை பயணிக்கத் தொடங்கியுள்ளது. சீன அரசின் மின் எரியாற்றல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள தரவு மையங்கள் மட்டும் 200 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் எனவும், இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 2.7 விழுக்காடு எனவும் தெரிய வந்துள்ளது. 2030 ஆண்டில் இந்த அளவானது 400 பில்லியன் கிலோவாட்டாக உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பெய்ஜிங்கில் ஜியாவ்தொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங்யுவன்ஃபெங், ‘’சீனாவில் இணையத் தொழில்துறையானது ஒவ்வொரு ஆண்டு பத்து விழுக்காடு வளர்வதாகவும், இன்னும் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விழுக்காடு இரட்டிப்பாகக்கூடும்’’ எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இணையத் தொழில்துறை அதிக அளவில் எரியாற்றலை நுகரும் துறையாக மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகு சூழலில் அதிக எரியாற்றலை நுகரும் இணைய நிறுவனங்களின் கரிஉமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான கடமையாக இருக்கின்றது. எனவே, சீன இணையத் தொழில்நிறுவனங்கள் பசுமை இணையக் கட்டமைப்பை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

சுற்றுச்சூழலியலைக் கருத்தில் கொண்டு சீனாவின் இருபெரும் இணைய நிறுவனங்களான ஹுவாவெய் மற்றும் டென்சென்ட் ஆகிய இரண்டும் பூஜ்யம் விழுக்காடு கரி உமிழ்வு என்னும் இலக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. 2021 ஆம் ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற உலக மொபைல் மாநாட்டில், பசுமை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பூஜ்யம் கரி உமிழ்வு கட்டமைப்பைக் கொண்ட சிறு அடிப்படை நிலையங்கள், சேவை அறைகள் மற்றும் தரவு மையங்களை உருவாக்க உள்ளதாக ஹுவாவெய் நிறுவனம் அறிவித்துள்ளது.

டென்சென்ட் நிறுவனமானது பசுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தியைக் கொண்ட சீனாவின் வடபகுதியில் உள்ள ஹுவாலய் என்னும் இடத்திலும், நீர் மின்னாற்றல் கொண்ட குவாங்தொங்கின் ட்சிங்யுவான் என்னுமிடத்திலும் தரவு மையங்களைக் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதோடு ட்சிங்யுவான் பகுதியில் இருக்கும் இயற்கையான குளிர் மூலவலங்களைப் பயன்படுத்தி இலவசக் குளிரூட்டும் தொழில்நுட்பத்தைக் கட்டமைத்து எரியாற்றல் பயன்பாட்டுத் திறனை 1.25 விழுக்காடாகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றது.

எரியாற்றல் பயன்பாட்டுத் திறன் என்பது கணினி தரவு மையங்கள் பயன்படுத்தும் எரியாற்றல் திறனைக் குறிக்கும் அளவுகோலாகும். இந்த அளவைக் குறைத்துப் பயன்படுத்தும் தரவு மையங்கள் பசுமைத் தரவு மையங்கள் எனச் சுட்டப்படுகின்றன.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில் சீனத் தொழில்துறை மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய அரசு அலுவலகங்கள் பணியகம் மற்றும் எரியாற்றல் பணியகம் ஆகியன ஒன்றிணைந்து பசுமைத் தரவு மையங்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டன. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள பெரிய மற்றும் மிகப்பெரிய தரவு மையங்களின் எரியாற்றல் பயன்பாட்டுத் திறனானது 1.4 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவானது சீனா உயர்தர பசுமை வளர்ச்சியை அடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

பசுமை வளர்ச்சியை வளர்த்தெடுக்கும் வகையில் டென்சென்ட் தன்னுடைய தரவு மையங்களில் ட்ரை சப்ளை என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3500 டன் நிலக்கரியை மிச்சப்படுத்த முடிவதோடு 23,300 டன் கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும். இந்தக் குறைப்பானது, ஆண்டுக்கு 36000 மரங்களை நடுவதற்குச் சமமான ஒன்றாகும்.

ஹுவாவெய் நிறுவனமானது திறன்மிக்க ஃபோட்டோவோல்டிக் திட்டத்தையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் இணைத்து சூரிய ஒளியிலிருந்து வழக்கமாக எடுக்கும் மின்னாற்றலை விட 18.7 விழுக்காடு அதிகம் மின்சாரம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும் நிலையில் அந்நிறுவனம் ஆண்டொன்றுக்கு 325 மில்லியன் கிலோவாட் மின்சாரத்தைத் தயாரிப்பதோடு பத்து மில்லியன் கிலோவாட் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும். இது, 220 மில்லியன் மரங்களை நடுவதற்குச் சமமான ஒன்றாகும்.

இணையத்துறை வளர்ச்சியில் உலக அளவில் முன்னணி நாடாகத் திகழும் சீனா, அதன் வளர்ச்சிப் போக்கோடு பசுமை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருவது மிக முக்கியமான ஒன்று. வளர்ச்சி என்பது இயற்கையை அழித்துப் பெறுவதல்ல என்பதை உணர்ந்திருக்கும் சீனா, பசுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து சுற்றுச்சூழலின் மேம்பாட்டிற்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றது.