தேசியவாத முழக்கம் அமெரிக்காவுக்குள்ளாகவே அமெரிக்காவை வழிதவறச் செய்யும்
2021-04-09 10:21:26

அமெரிக்காவின் சாலைக் கட்டுமானம் தொடங்கி மின்னேற்று நிலையங்கள் வரையிலான மேம்பாட்டுக்கும் அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டை மேம்படுத்தும் பொருட்டும் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் 2 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவித் திட்டத்தைக் கடந்த புதன் கிழமை அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் இதனை அமெரிக்கா சீனாவை வெல்வதற்கானது என்றும் மக்களாட்சி அமைப்புமுறையே சிறந்தது என்பதை மெய்ப்பிப்பதற்குரிய சான்று என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது காணப்படும் பெரும்பான்மையான கட்டமைப்புகள் மிகவும் பழமையானவை. இந்தக் கட்டமைப்பை மேம்படுத்தும் பேரார்வத்துடன் முன்னாள் அரசுத் தலைவர் ஒபாமா சில முன்மொழிவுகளை வழங்கினார். தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்த அவரின் காலத்தில் அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஒபாமாவுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த டிரம்பும் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கைகளை வழங்கினார். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது மூன்றாவது முறையாக பைடன் அதற்கான திட்டத்தை தீவிரத்துடன் வகுத்திருக்கின்றார். ஆனால், பைடனின் இத்திட்டத்திற்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் இத்திட்டம் சீனாவுக்கான பரிசு என்றும், 2 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியைத் திரட்ட வரி விதிப்பை உயர்த்துவது அமெரிக்க உற்பத்தித் துறையை அழிக்கும் செயல் என்றும் விமர்சித்துள்ளார். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது சரியான முடிவு என்று அனைவரும் ஆமோதித்துள்ள அதேவேளை, இந்த இலக்கை எப்படி நிறைவேற்றுவது, அதற்கான பணத்தை எப்படித் திரட்டுவது என்னும் பழைய சிக்கலில் பைடனும் கடுமையாக மாட்டிக் கொண்டிருக்கின்றார்.

அமெரிக்கச் சமூகம் கடுமையாகப் பிரிந்து கிடப்பதால் அந்நாட்டில் நடக்கும் பெரிய அளவிலான நிகழ்வுகள் பெரும் அரசியல் போராட்டங்களை உருவாக்குகின்றன. இத்தகு போராட்டங்கள் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை விழுங்கி விடுகின்றன. இது தான் அமெரிக்காவில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குமான மூலம். உள்நாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதில், நலன் பெறுவதற்காக பல்வேறு தரப்புகளுக்கிடையில் ஏற்படும் போட்டியை விட உளகட்டமைப்பில் பெரும் ஆர்வம் இருப்பது முக்கியமானதாகும். ஆனால், இன்றைய அமெரிக்கா அப்படிப்பட்டதாக இல்லை. இத்தகு சூழலில் அமெரிக்கா சீனாவை வெல்வதென்பது சற்றும் நடவாத காரியாமாகும்.

சீனா உள்நாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அதிவிரைவுத் தொடர்வண்டிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பியது. அதற்கான அடிப்படை வலைப்பின்னலையும் உருவாக்கியது. இவற்றையெல்லாம் தன் சொந்தச் செயல்திட்டங்களாக நடைமுறைப்படுத்தியதே அன்றி, அமெரிக்காவை வெல்வதற்கானது என்னும் முழக்கத்தை முன்வைத்து அல்ல. இதனால் இவற்றுக்கான முதலீட்டு ஆற்றல் வலுவாக இருந்ததோடு மக்களின் பேராதரவும் கிடைத்தது.

தேசியவாதக் கொள்கையைச் செயல்படுத்தி வரும் அதற்கான கச்சாப் பொருளாக அமெரிக்கா ‘’தேசியப் பாதுகாப்பு’’ என்னும் முத்திரையைப் பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் அந்நாட்டின் தொழில்துறையில் ஏற்படும் கோளாறுகளுக்குச் சீனாவே காரணம் என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசியவாதத்தின் பங்கு மிகச்சிறிய ஒன்று. இதனால் காலப்போக்கில் அமெரிக்கா குழப்பமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்.

அமெரிக்கா முன்னேற வேண்டுமானால் சீனாவை மறந்து விட வேண்டும். அந்நாட்டில் உயர்வேக இருப்புப் பாதை கட்டுமானத் திட்டம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் ஒரு கிலோமீட்டர் அளவு கூட இத்தகு கட்டுமானத்தை உருவாக்க முடியவில்லை. டிரம்ப் பதவியேற்றவுடன் ஒபாமாவின் பல கொள்கை முடிவுகளைப் புறந்தள்ளியது போலவே, பைடன் டிரம்பின் பல கொள்கை முடிவுகளைப் புறந்தள்ளுகின்றார். அமெரிக்காவின் இத்தகைய செயல்களுக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

இரு நாடுகளுக்கிடையில் தோன்றும் கருத்து முரண்கள் கற்றுக் கொள்வதற்கான மிகப் பெரும் வாய்ப்பு. இதனைப் பயன்படுத்தி வாஷிங்டன் சீனாவின் சில முக்கிய அனுபவங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா உள்கட்டமைப்புக்கான முதலீட்டில் உச்சத்தை எட்டுவதைக் காண சீனச்சமூகமும் விரும்புகின்றது. அமெரிக்கா தன்னுடைய சந்தைத் தேவையை விரிவாக்க இது போன்ற நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது சீனாவின் பொருளாதார விரிவாக்கத்துக்கான ஒரு சாதகமான காரணியாகும்.

இந்த உண்மைகள் வாஷிங்டனின் கவனத்தால், இரு நாடுகளுக்கிடையில் கடும் போட்டியை விட ஒத்துழைப்பானது மேலதிக நலன்களைக் கொண்டு வரும் என்று உணரலாம். அமெரிக்கா விரும்பும் பட்சத்தில் அந்நாடு சீனாவை எதிரியாக அல்லாமல் தன்நாட்டு வளர்ச்சிக்கான கூட்டு சக்தியாக சேர்த்துக் கொள்ள முடியும். இது ஒன்றே தன் இதயத்தில் எதிரியாக இருக்கும் நாட்டை மோதலின்றி வெல்வதற்கான ஒரேயொரு வழியாகும்.