குவங்சியில் கட்சி உறுப்பினர்களின் சேவையால் சிறப்புமிகு “சன் யுயே சன்” கொண்டாட்டம்
2021-04-16 15:23:06

குவங்சியில் கட்சி உறுப்பினர்களின் சேவையால் சிறப்புமிகு “சன் யுயே சன்” கொண்டாட்டம்_fororder_webwxgetmsgimg (2)

இந்தியாவின் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் புத்தாண்டைப் போலவே, சீனாவின் குவங்சி சுவங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் அதே காலத்தில் “சன் யுயே சன்” என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. சீன நாட்காட்டியின்படி 3ஆவது மாதம் 3ஆம் தேதி வருவதால் இதற்கு “சன் யுயே சன்” என்று அழைக்கப்படுகிறது.

சீனப் புத்தாண்டைப் போலவே, இக்கொண்டாட்டத்திலும் மக்கள் அனைவரும் ஒன்றாக குடும்பத்துடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்து, சுவையான உணவு உட்கொண்டு இந்நாளைக் கழிப்பது வழக்கம். அத்துடன், விழாவன்று நடைபெறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதன் முக்கியமான ஒரு பகுதியாகும். சுவங் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடையை அணிந்து குழுவாக ஓரிடத்தில் கூடி ஆடிப்பாடுவர்.

குவங்சியில் கட்சி உறுப்பினர்களின் சேவையால் சிறப்புமிகு “சன் யுயே சன்” கொண்டாட்டம்_fororder_webwxgetmsgimg (1)

சுவங் இன மக்களின் பாடல்களைக் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். நான்கு வரிகளை கொண்ட பொருள் பொதிந்த இப்பாடல், ஏற்ற இறக்கத்துடன் பாடுவதைக் கேட்டால், இசை மீது நாட்டம் கொண்டவர்கள், கண்டிப்பாக தங்களின் மனதைப் பறி கொடுத்து விடுவர். விழாவன்று மட்டுமல்ல, புதிதாக ஒரு விருந்தினர் வீட்டுக்கு வந்தால்கூட சிறந்த விருந்தோம்பலின் அடையாளமாக விருந்தினர்களை வரவேற்றுப் பாடுவதுதான். பன்ஜியே என்ற சிறந்த பெண் பாடகர், பல பாடல்களை வரவேற்கப் பாடியது என் மனதில் இன்றும் நீங்காமல் உள்ளது.

பாடல் பாடி காதலன் அல்லது காதலி தேடுவது என்பது இவ்விழாவின் மிக முக்கியமான அம்சமாகும். இளம் ஆண்களும், பெண்களும் தனித்தனிக் குழுவாகத் திரண்டு, தனக்குப் பிடித்த பெண்ணைச் சுட்டிக்காட்டி ஆண் பாடலைத் தொடங்குவார். பெண்ணுக்கு விருப்பம் என்றால் பெண்ணும் பாடலைத் தொடருவார். வெற்றி அடைந்த ஆண், சீனர்கள் மங்கலகரமாக நினைக்கும் முட்டை கோர்க்கப்பட்ட ஒரு நூல் மாலையை பெண்ணின் கழுத்தில் சூடுவார், பெண்ணும் தன்னிடம் உள்ள முட்டை நூல் மாலையை ஆணின் கழுத்தில் சூடி இணைவார். பாரம்பரிய நடைமுறை என்றாலும் இன்றளவும் அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குவங்சியில் கட்சி உறுப்பினர்களின் சேவையால் சிறப்புமிகு “சன் யுயே சன்” கொண்டாட்டம்_fororder_webwxgetmsgimg

அதனைத் தவிர, குச்சி தாண்டுதல், பந்து எறிதல், நடனமாடுதல் என கலைநிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. காலையில் கூடும் மக்கள் பொழுது சாய்ந்த பிறகு, சிறப்புமிகு விழா உணவை உட்கொண்டு விட்டுத்தான் வீடு திரும்புவர். இப்பெருவிழாவில் யிஜோ நகரில் உள்ள மாஷன்டங் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்தது என்றும் என் நினைவில் இருந்து மறையாது. குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்களின் பாசமிகு வரவேற்பு மற்றும் நலம் விசாரிப்பு மனதை நெகிழ வைத்தது. இரவு உணவை முடித்து விட்டு மக்களிடம் இருந்து விடைபெறும்போது மனது மிகவும் கனமாக இருப்பதை உணர முடிந்தது. இவ்விழா, சுவங் இன மக்களின் விழாவாகத் தெரியவில்லை, எனது சொந்த ஊரில் நடைபெற்ற ஒரு திருவிழா போன்ற உணர்வே எனக்கு நிறைந்திருந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றது. கட்டுக்கோப்பான முறையில் பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை கட்சியின் செயல்பாடு எவ்வாறு இயங்குகிறது என்பது யிஜோ நகரில் உள்ள மாஷன்டங், குவென் உள்ளிட்ட கிராமங்களைப் பார்த்தே அறிந்து கொள்ள முடிகிறது. அரசு வகுக்கும் திட்டங்கள் கடைக்கோடியில் உள்ள குடிமகனுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் அடிப்படைப் பணியாக உள்ளது. 2018இல் தீவிர வறுமையிலிருந்து மீண்ட குவென் கிராமம் சிக்கலான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, நன்கு அமைக்கப்பட்டுள்ள வேளாண் நிலங்கள், குடியிருப்புக்கு கான்கிரீட் வீடுகள், கான்கிரீட் சாலைகள் என வசதியான ஒரு கிராமமாக மாறியுள்ளது என்றால் அதில் கிராமந்தோறும் இருக்கும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவை அடங்கியுள்ளது.

யிஜோ நகரின் மாபெரும் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழுக்குழுவாக நடனமாடுவதைக் காண முடியும். தொழில் முனைவோர்களாகவும், அலுவலகப் பணியாளர்களாகவும், இல்லத்தரசிகளாகவும் இருக்கும் அவர்கள், மாலையில் ஒன்றுகூடி ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இத்தகைய சூழலை நாடு முழுவதும் காண முடியும். அவர்களின் முகங்களில் மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியே, ஒரு நாட்டு அரசின் செயல்பாடும், எப்பாதையில் நாடு பயணித்துக் கொண்டுள்ளது என்பதற்கும் தக்க சான்றாக விளங்குகிறது.