ஜப்பானின் தன்னலம் சார்ந்த முடிவை உலக நாடுகள் எச்சரிக்கையோடு அணுக வேண்டும்
2021-04-21 14:09:17

உலகம் சுற்றுச்சூழல் சார்ந்து கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், ஜப்பான் அந்நாட்டின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் சேமித்து வைத்திருந்த கதிர்வீச்சுடன் கூடிய 12.5 இலட்சம் டன் நீரைப் பசிபிக் கடலில் கலக்கவுள்ளதாக தெரிவித்திருப்பது உலகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் டோக்கியோ மின் நிறுவனத்தினால் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை பராமரிக்கப்பட்டு வருகின்றது. அந்நாட்டில் 2011ஆம் ஆண்டு நடந்த பெரும் நிலநடுக்கம் மற்றும் அதே ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சுனாமித் தாக்குதல் ஆகியவற்றால் இந்த அணு உலைக்குள் கடல்நீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அணு உலைக்குள் புகுந்த கடல்நீரானது மின்னாக்கிகளைத் தாக்கியதால் குளிரூட்டிகள் செயலிழந்து அணு உலையின் வெப்பம் அதிகரித்து சுற்றுப் புறங்களில் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியது. அணு உலையால் ஏற்படவிருந்த பேராபத்தைத் தடுக்கும் பொருட்டு அதன் வெப்பத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான நீரானது பயன்படுத்தப்பட்டது. கழிவு நீராக மாறிய இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு அணு உலையில் உள்ள தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. இந்தக் கழிவு நீரையே சுத்திகரிப்பு செய்து பசிபிக் கடலில் கலக்கவுள்ளதாக ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், ஐ.நா.வின் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் மேற்பார்வையில் விதிகளுக்குட்பட்டு பாதுகாப்புடன் இப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் இரண்டாண்டுகளுக்குள் இப்பணி நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

கழிவுநீரைக் கடலில் கலப்பது என்பது வெறுமனே ஜப்பான் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமன்று. அது உலகளாவிய பிரச்சினை. ஆனால், ஜப்பானின் இம்முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனிதகுலத்தின் நன்மைக்கும் பெரும் தீமையைக் கொண்டு வரும் ஜப்பானின் இத்திட்டத்தை அமெரிக்கா வரவேற்றிருப்பது சர்வதேச அளவிலான கடமைகளை நிறைவேற்றும் போது இரு நாடுகளும் மேற்கொள்ளும் இரட்டை வரையறையைக் காட்டுவதாக உள்ளது. ஜப்பானின் முடிவை ஆதரிக்கும் அமெரிக்காவின் செயலுக்குப் பின்னால் பசிபிக் பிராந்தியத்தில் தலையிட முயன்று வரும் அதன் நீண்டகாலக் கொள்கை இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். கதிரியக்கத்துடன் கூடிய கழிவுநீரைக் கடலில் கலப்பதால் கடலின் சூழல் பெரியளவில் பாதிக்கப்படுவதோடு உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் இடர்ப்பாடு ஏற்பட்டு மானுட இறப்புகள் ஏற்படும் என்பதும் வலுவான கடல் நீரோட்டத்தினைக் கொண்ட பசிபிக் கடலில் கலக்கப்படும் கதிரியக்கத்துடன் கூடிய கடல் நீரானது 57 நாட்களுக்குள் பசிபிக் கடலின் பெரும்பாலான பகுதியில் கலப்பதோடு அடுத்த பத்தாண்டுகளில் உலகில் உள்ள அனைத்துக் கடலிலும் கலந்து விடும் என்பதும் வாஷிங்டன்னுக்குத் தெரியாதவை அல்ல என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், ஜப்பானின் முடிவுக்கு அதன் சொந்த மண்ணிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, பசிபிக் பெருங்கடல் சுற்றுச்சூழல் நெருக்கடியினால் வளத்தை இழந்து வரும் நிலையில், ஜப்பானின் முடிவானது ஜப்பானிய மீனவர்களை மேலும் நலிவடையச் செய்யும் என அந்நாட்டு மீன்வளக் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முடிவினால் அதன் அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதோடு தங்கள் ஆழமான கவலையையும் வெளிப்படுத்தியுள்ளன. ஜப்பானின் முடிவானது பொறுப்பற்ற செயல் என்றும், இதனால் அதன் அண்டை நாடுகளுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் சீனா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. அது போன்றே, ஜப்பானின் முடிவு குறித்து கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ஆம் நாள் நடைபெற்ற சீன – தென்கொரிய பெருங்கடல் விவகார ஒத்துழைப்புக் கூட்டத்தில் ஜப்பானின் முடிவுக்கு இரு நாடுகளும் மீண்டும் பகிரங்க எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உலகச் சுற்றுச்சூழல் நிறுவனமான கிரின்பீஸ் நிறுவனம், அணு உலையின் கழிவுநீரைக் கடலில் கலப்பதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு மனிதர்களின் மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையோடு உலக நாடுகள் ஜப்பானின் முடிவை அணுக வேண்டும். ஏனெனில் ஜப்பானின் முடிவானது அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி உலகிற்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.