பருவநிலைப் பிரச்சினையைச் சமாளித்து அழகான உலகைப் படைக்கச் சர்வதேசச் சமூகம் ஒன்றிணைய வேண்டும்
2021-04-28 16:15:15

பருவநிலை மாற்றப் பிரச்சினை ஒன்றிரண்டு நாடுகளின் பிரச்சினையன்று. மானுட இனம் காலதாமதமின்றி கூட்டாகச் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உலகளாவிய பிரச்சினையாகும். உலகமயமாதல் எதிர்ப்பு, பெருந்திரள்வாதம், ஒருதலைச்சார்பு மற்றும் பாதுகாப்புவாதம் ஆகிய அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொள்ளும் இந்த வேளையில் பரந்த அளவிலான உலக ஒத்துழைப்புக்கான வாய்ப்பாக பருவநிலை மாற்றப் பிரச்சினை அமைந்துள்ளது.

பருவநிலைப் பிரச்சனை குறித்த உச்சிமாநாட்டில் காணொலி வழி கலந்து கொண்டு பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மானுடர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் சிறந்த வாழ்வை உருவாக்குவது குறித்து பசுமை வளர்ச்சி, முறையான ஆளுகை, பொதுவான கொள்கைகளின் அடிப்படையிலான வேறுபட்ட பொறுப்புகள் உள்ளிட்ட ஆறு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

உலகின் மிகப்பெரும் வளரும் நாடான சீனா, காலநிலைப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. அதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தில் உச்சத்தை அடையும் சீனா, 2060 ஆம் ஆண்டுக்கு முன்பாகக் கார்பன் சமநிலையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பருவநிலைப் பிரச்சினை தொடர்பாக சீனா பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஃபிஜியின் தலைநகர் சுவோவில் உள்ள தெற்குப் பசிபிக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் காஷ்மீர் மகுன், சீனா, உலகம் முழுவதிலும் உள்ள பசுமைத் திட்டங்களுக்கு அதிக நிதியளிப்பதை முக்கியமான ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். இத்தகு நிதியின் மூலம் புதைபடிவ எரிபொருட்களை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் படிப்படியாக மாற்று சுற்றுச்சூழல் நோக்கி நகர்வதற்குரிய வாய்ப்பைச் சீனா உருவாக்கித் தருகின்றது எனக் குறிப்பிடுகின்றார். இதற்குச் சான்றாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் தூய்மை எரியாற்றல் திட்டங்களில் அக்கண்டத்தின் மிகப்பெரும் இருதரப்புறவு கூட்டாளியாகச் சீனா திகழ்வதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நாடுகள் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிடும் மகுன், பருவநிலைப் பிரச்சினைகளில் முன்னெடுக்கப்படும் சர்வதேச ஒத்துழைப்புகள் பசுமை வளர்ச்சிக்கு வழிவகுத்து, இறுதியில் இந்தப்பூமிக்குப் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகுன் போன்றவர்களின் கருத்துக்கேற்ப சீனா பருவநிலைப் பிரச்சினையில் சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து போராட பெரும் முயற்சிகளை எடு்த்து வருகின்றது.

உலகம் கரோனா தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கார்பனற்ற உலகை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருக்கும். இதன்பொருட்டு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் இவ்விரு நாடுகளும் பருவநிலைப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளன.

பருவநிலைப் பிரச்சினையைப் புவிசார் அரசியலுக்கான பேரமாகவோ, பிற நாடுகளைத் தாக்குவதற்குரிய காரணமாகவோ கொள்ளாமல் கையோடு கைகோர்த்து அதனைச் சமாளிக்க வேண்டும். இதற்கு மாறாக பருவநிலைப் பிரச்சினையை வாய்ப்பாகக் கொண்டு பிறநாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு காணப்படுமாயின் அதற்கு எந்த ஒரு நாடும் ஆதரவளிக்கக்கூடாது.

பருவநிலைப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குரிய பொதுவான கொள்கையை முன்வைத்து அந்தத் திசை நோக்கிப் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து உதவி புரியும் தன்மையோடு செய்லபடும் போது, உலகம் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சிறப்பாக எதிர்கொண்டு எதிர்காலத் தலைமுறையினருக்குத் தூய்மையான அழகான உலகை விட்டுச்செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பருவநிலைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் இந்த நேரத்தில் சர்வதேசச் சமூகம்  சிறந்த, அழகான உலகைப் படைக்கும் இலக்கை நனவாக்கும் வகையில் செயலாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.