அமெரிக்காவின் கரோனா தடுப்பூசி அரசியல்
2021-05-07 12:50:40

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையானது அடுத்து வரும் சில மாதங்களுக்குள் 6 கோடி டோஸ் அல்ட்ராஜெனிகா மருந்தை வெளிநாடுகளுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கடும் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்ட ஒன்று என சர்வதேச அளவில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, பைசர் தடுப்பூசியை வழங்காமல் அஸ்ட்ராஜெனிகாவை வழங்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் இன்னும் சில நிறுவனங்களும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதால் இலேசான இரத்த உறைவு ஏற்படும் என்பதை உறுதி செய்திருக்கின்றன. அமெரிக்காவும் இத்தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு உரியதாக ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நலையில் தாங்கள் பயன்படுத்தாத இத்தடுப்பு மருந்தை அமெரிக்கா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உலகின் வாயை அடைக்க முயல்கின்றதா என்னும் கேள்வியும் எழுகின்றது.  

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து குறித்த பாதுகாப்பினை மறு ஆய்வு செய்த பின் அம்மருந்து வெளிநாடுகளில் கிடைக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இத்தடுப்பு மருந்து வெளிநாட்டவர்களுக்கானது என்பதால் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மிகவும் சாதாரணமாகவே இருக்கும் என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் அந்நாட்டின் பால்டிமோர் நகரில் அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வந்த நிறுவனம் ஒன்று மருந்து தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏப்ரல் மாதம் மருந்து உற்பத்தியை நிறுத்தியது. அதோடு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 15 மில்லியன் டோஸ் ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு அற்றவை எனக் கைவிடப்பட்டன. பல இலட்சக்கணக்கான டோஸ் அல்ட்ராஜெனிகா மருந்தும் பயன்பாட்டுக்கு அற்ற நிலையில் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகக் குறிப்பிடும் மருந்துகள் இது போன்ற தரமற்ற தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுமா என்னும் ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும் தடுப்பூசிகள் விவகாரத்தில் அமெரிக்காவினைச் சர்வதேசச் சமூகம் சந்தேகக் கண்களுடனேயே அணுகுகின்றது. அமெரிக்கா வழங்குவதாகக் குறிப்பிடும் தடுப்பூசிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் மருந்து நிறுவனங்களுக்கேயுரிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் தயாரிக்க முடியுமா? அவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பனவைகளாக இருக்குமா? என்னும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. மேலும், அமெரிக்கா தன்னிடம் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் மக்களைத் தரம் பிரித்து அவர்களை இனப் பாகுபாட்டோடு நடத்துகிறதா? என்றும் ஐயம் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் சிஎன்என் மற்றும் பிற ஊடகங்கள் அமெரிக்கா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய நிலையிலிருந்து உலகளாவிய தடுப்பூசிக்குத் தலைமையேற்கும் நாடாக மாறியுள்ளதாக பாரட்டு தெரிவித்துள்ளன. இத்தகு செய்திகள் அமெரிக்கா தொடர்ந்து உலகை வழி நடத்த விரும்புவதைத் தெரிவிக்கின்றன. அதோடு, தரமான தடுப்பூசிகள் மூலம் தான் முதலில் நோய்த்தடுப்புத் திறனை அடைந்த பின்னர், தரமற்ற தடுப்பூசிகளை உலகிற்கு வழங்க அந்நாடு திட்டமிட்டடுள்ளது. இந்நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்னும் அதன் அடிப்படைச் சித்தாந்தமும் தெளிவாகியுள்ளது.

அமெரிக்க அரசியலை நன்கு புரிந்திருக்கும் சில அறிஞர்கள், தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பைடனின் முடிவு எதிர்மறையாக இருக்காது என்றும், அமெரிக்கத் தேர்தல் அவருக்கு அத்தகைய அழுத்தத்தைக் கொடுத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். அதோடு, அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அமெரிக்கர்கள் தடுப்பூசிக்கு அளிக்கும் முன்னுரிமையைப் பரப்புரை செய்ய முயல்கின்றது. அமெரிக்காவின் இத்தகு அரசியல் சுயநலம், அதன் தனிப்பட்ட சுயநலத்திலிருந்து விரிந்த ஒன்றாகும்.

அமெரிக்காவின் இந்த மேலாதிக்கவாதப் போக்கானது அமெரிக்க – வெளிநாட்டு உறவுகளின் அனைத்து நிலைகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. இப்போக்கிலிருந்து, டாலரின் முக்கியத்துவத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, தேசியப் பாதுகாப்பு என்னும் பெயரில் அந்நாடு கொண்டிருக்கும் பேராசை மற்றும் வக்கிரப்புத்தியையும் விலக்க முடியாது.

தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்குவதன் வழி, தொற்றுநோயக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கியப் பங்கைக் காணச் சர்வதேசச் சமூகம் தயாராக இருக்கின்றது. ஆனால், அது நியாமான வழிமுறையில் அமைந்த ஒன்றாக இருக்க வேண்டும். சீனாவும் இரஷ்யாவும் தடுப்பூசி இராஜதந்திரத்தைச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் அமெரிக்கா, தனக்கிருக்கும் சர்வதேச சமூகத்தின் அதிருப்தியைச் சமாளிக்க அதே தடுப்பூசி இராஜதந்திரத்தையே பயன்படுத்தி வருவது நகைமுரணான ஒன்று. இப்பிரச்சினையில் அந்நாடு புவிசார் கணக்கீடுகளை விடுத்து தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உண்மையான அக்கறையோடு செயல்பட வேண்டும். மிக முக்கியமாக, பன்னாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இப்போதேனும் அமெரிக்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.