திரு ப்ளிங்கென், அமெரிக்க மக்களுடன் இணைந்து நிற்க
2021-06-04 20:56:34

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி ப்ளிங்கென் 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், ஹாங்காங்கின் மனித உரிமை நிலைமை பற்றி பல தவறான கருத்துக்களைத் தெரிவித்து, சீன மக்களுடன் இணைந்து நின்று வருவதாகக் கூறினார். இது பெரிய கேலிப்பேச்சுதான்.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய் பாதிப்பினால் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர் செயல்படுகிறார். 1997ஆம் ஆண்டில் ஹாங்காய் தாய்நாட்டுக்குத் திரும்பிய பிறகு, ஹாங்காங் அடிப்படைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் நடைமுறையாக்கத்தையும், ஹாங்காங் தேர்தல் முறைமையை மேம்படுத்தும் நடவடிக்கையின் வெளியீட்டையும் அவர் கண்டும் காணாமல் இருப்பது போல், மனித உரிமை, ஐனநாயகம் ஆகியவற்றைச் சாக்குப்போக்காகக் கொண்டு, சீனாவின் உள்விகாரத்தில் தலையிட்டு வருகிறார். அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் தொற்று நோய்க்கு முன் தனது அரசியல் நலனை பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்கு மேல் வைக்கும் அசிங்கமான தோற்றத்தை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், ஓராண்டுக்கும் மேலாக கோவிட்-19 நோய் பரவலால், அமெரிக்காவில் நீண்டகாலமாக நிலவி வரும் இனவெறி பாகுபாடு, பணக்காரர்-ஏழை இடைவெளி உள்ளிட்ட தீரா நோய் போன்ற பிரச்சினைகள் மோசமாகி வருகின்றன.

மனித உரிமை என்பதற்குப் பதிலாக மேலாதிக்கத்துக்காகவே ப்ளிங்கென் போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். ப்ளிங்கென் அமெரிக்க மக்களுடன் இணைந்து நின்று, அவர்களின் உயிர் மற்றும் உடல்நல உரிமையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.