மேலாதிக்கவாதத்தை சீனா எதிர்க்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் சட்டம்
2021-06-11 10:47:06

வெளிநாட்டு தடைகள் எதிர்ப்புச் சட்டம் 10ஆம் நாள் சீன மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனும், சர்வதேச நீதி நியாயமும் மேலும் வலுவாகப் பேணிக்காக்கப்படும்.

சீனாவைத் தடுக்கும் உள்நோக்கத்துடன், சில மேலை நாடுகள் சின்ஜியாங் மற்றும் ஹாங்காங் தொடர்பான விவகாரங்களைப் பயன்படுத்தி, தங்களது உள்நாட்டுச் சட்டத்துக்கிணங்க சீனாவின் அரசு சார் வாரியங்கள் மற்றும் பணியாளர்கள் மீது தடை விதித்து வருகின்றன. இத்தகைய செயல்கள், சீனாவின் உள்விவகாரத்தில் கொடூரமாக தலையிட்டு, ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறையை கடுமையாக மீறியுள்ளது.

குறிப்பிட்ட சில மேலை நாடுகளின் ஒரு சார்பு தடை நடவடிக்கையை எதிர்கொண்டு, சீனா சட்டத்தைப் பயன்படுத்தி உரிய பதிலடி கொடுப்பது என்பது காலத்துக்கு ஏற்றதாகவும் அவசியமாகவும் உள்ளது. வெளிநாட்டுத் தடைகள் எதிர்ப்பு சட்டத்தை சீனா வெளியிடுவதற்கு, சர்வதேச சட்டத்துக்குப் பொருந்திய நியாயம் உண்டு. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அடிக்கடி மேற்கொள்ளும் மேலாதிக்க செயலுடன் இது வேறுபட்டது. ரஷியாவின் செய்தியேடு ஒன்றில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தத்தை சீன அரசு எதிர்ப்பதற்கு இச்சட்டம் சட்டப்பூர்வ அடிப்படையை உருவாக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

சீனா எடுக்கும் உகந்த பதிலடி, சந்தையில் சட்டப்படி இயங்கும் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பில் நிலைத்து நின்று, சந்தைமயமாக்கம், சட்ட மயமாக்கம் மற்றும் சர்வதேச மயமாக்கத்துக்கு பொருந்தும் வணிகச் சூழலைத் தொடர்ந்து உருவாக்கும் சீனாவின் மனவுறுதியும் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.