20 ஆண்டுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகிற்கு கொண்டு வந்தவை என்ன?
2021-06-16 09:27:41

இவ்வாண்டு ஜுன் 15ஆம் நாள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் 20ஆம் ஆண்டு நிறைவு ஆகும்.  6 உறுப்பு நாடுகளால் உருவான இவ்வமைப்பில் இன்று 8 உறுப்பு நாடுகளும் 4 பார்வையாளர் நாடுகளும் 6 உரையாடல் கூட்டாளிகளும் இடம்பெற்றுள்ளன.

பிராந்திய அமைதியைப் பாதுகாத்தல், பிரதேச வளர்ச்சியை முன்னெடுத்தல், பலதரப்புவாதத்தைப் பேணுதல், சர்வதேச உறவை ஜனநாயகமாக்கல் ஆகியவற்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், இவ்வமைப்பு செழிப்பாக வளர்ந்து வருவதன் காரணம் என்ன? ஒன்றின் மீது மற்றொன்று நம்பிக்கை கொள்வது, பரஸ்பர நலன் தருவது, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிகங்களின் பல்வகைத்தன்மையை மதித்தல், கூட்டு வளர்ச்சியை நாடுவது என்ற “ஷாங்காய் குறிக்கோள்” என்பதே, அடிப்படைக் காரணமாகும் எனக் கருதப்படுகிறது.

இந்த சிறந்த ஒத்துழைப்புக் கண்ணோட்டத்தால், வேறுபட்ட சமூக அமைப்புகள் மற்றும் வளர்ச்சிப் பாதைகளைக் கொண்ட நாடுகள் சுமுகமாக வாழ்வதற்கு முற்றிலும் புதியதொரு ஒத்துழைப்பு வழிமுறை தோற்றுவிக்கப்பட்டது. இதனால், உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, நாகரிகங்களின் பேச்சுவார்த்தை ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

மேலும், எப்போதும் பலதரப்புவாதத்தை நிலைத்து நின்று நடைமுறைப்படுத்தி வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், நியாயம் மற்றும் நீதி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுதல் என புது ரக சர்வதேச உறவின் சிறந்த முன்மாதிரியை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.