மனிதகுலத்தையும் இயற்கையையும் இணைத்து ஒரு புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
2021-06-18 11:09:38

உலகம் ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சந்தித்திராத பெரும் மாற்றங்களை எதிர் கொண்டு வருகின்றது. இந்த வரலாற்றுப் பாதையில் 2021ஆம் ஆண்டில் ஓரளவு வசதியான வளமான சமூகத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் 2049இல் வளர்ந்த நவீன சோஷலிசக் கட்டமைப்பை உருவாக்குதல் என்னும் இலக்குகளோடு சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனா, தன்னுடைய வளர்ச்சி குறித்து ஆராய்ந்து வரும் அதேவேளை உலகத்துடனான உறவையும் கருத்தில் கொண்டு வருகின்றது. அந்த அடிப்படையில் சீனாவின், சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மனித குலத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதென்ற கருத்தாக்கம் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மனிதகுலத்தையும் இயற்கையையும் இணைத்து ஒரு புதிய சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். தன்னுடைய உரையில், மனித குலத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கம், பசுமை வளர்ச்சி, முறையான ஆளுமைத் திறன், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, பன்முகத்தன்மை, பொதுவான கொள்கைகள் அடிப்படையிலான வேறுபட்ட பொறுப்புகளுக்கு இந்த உலகம் கடமைப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார். அதை நோக்கிச் செயல்பட வேண்டிய முக்கியக் காலத்தில் நாம் இப்போது இருக்கின்றோம்.

மனித குலம் கடந்த காலங்களில் தன்னுடைய வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட தொழிற்துறை புரட்சியினால் பெருமளவிலான செல்வம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி என்பது இயற்கை வளங்களைத் தீவிரமாகச் சுரண்டி உருவான வளர்ச்சியாகும். இந்தப் போக்கினால் புவியின் சமநிலை சீர்குலைந்துள்ளது. இந்த மாற்றங்களினால் அண்மைக் காலமாக காலநிலை மாற்றம், தீவிரமான வானிலை, மோசமான பாலைவனமயமாக்கம், அடுத்தடுத்து தொற்று நோய்கள் தோன்றுவது என இயற்கை மனித குலத்துக்குத் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்நிலை மாற வேண்டுமானால் மனித குலம் இயற்கையின் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். மனித குலம் இதுவரை கண்டறிந்துள்ள அறிவியல் கருவிகளைக் கொண்டு பாலைவனமயமாக்கத் தடுப்பு முதலான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்பணியில், உலகின் பெரிய நாடான சீனா, அத்தகு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இயற்கையை மீட்டெடுக்கும் போக்கில் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் பாலைவனத்தடுப்பு மூலம் பசுமையை மீட்டெடுத்தல் என்னும் இரண்டு இலக்குகளை முன்வைத்துச் சீனா செயலாற்றி வருகின்றது.

உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகச் செயல்பட்டு வரும் சீனா, காலநிலை மாற்றத்தைச் சமாளித்து இயற்கையும் மனித குலமும் இணைந்த ஓர் இணக்கமான சமூகத்தை உருவாக்கக் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது. இது தொடர்பில், ஷிச்சின்பிங்கின் தலைமையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கூட்டத்தில் 2030க்கு முன்பாக கார்பன் டையாக்சைடு வெளியேற்றத்தை உச்சப்படுத்தவும் 2060க்குள் கார்பன் சமநிலையை எட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே சீனாவின் முக்கியத் திட்டப்பணிகளுள் ஒன்றான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்திலும் கூட பசுமை உள்கட்டமைப்பு, பசுமை ஆற்றல், பசுமைப் போக்குவரத்து மற்றும் பசுமை நிதி என பசுமை சார்ந்த நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டு வருகின்றது.

மறுபுறம் சீனா, பாலைவனமயமாக்கத் தடுப்புப் பணியை முன்னெப்போதும் விட விரைவாக மேற்கொண்டு வருகின்றது. தன்னுடைய 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் பாலைவனமயமாக்கத் தடுப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்த சீனா, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 88 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பாலைவனத்தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் சீனாவில் மணல்காற்று வீசும் நாட்களின் அளவு 20.3 விழுக்காடு குறைந்துள்ளதோடு, செடிகளின் பரப்பளவும் 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இயற்கை எதற்கும் அவசரப்படுவதில்லை. ஆனால் அது எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்றது என்பார் சீனாவின் மிகப் பெரும் தத்துவ அறிஞரான லாவோட்சு. அத்தகு இயற்கையை மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் இருக்கின்றோம் நாம். அதற்கு மனித குலத்தையும் இயற்கையையும் இணைத்து ஓர் புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும். அதனை உணர்ந்து அந்த இலக்கு நோக்கிச் சீனா விரைவாகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது.